Dienstag, 1. Mai 2012

பகுதி-2 ஒட்டாத உறவுகள்

17

'லீவு முடிய வேலைக்குப் போய்ப் பார்நொந்தால் ஏலாது என்று சொல்லி டொக்டரிட்டைப் போ!'

'அக்காகனகாலம் வீட்டிலேயும் இருக்கேலாதுஇப்ப மருத்துவ லீவிலை இருக்கிறன்சம்பளத்தைவிடக் குறையத்தானே காசு வரும்இனி பக்றிகளிலும் ஆட்களைக் குறைக்கிறாங்கள்வேலையாலை  நிற்பாட்டினால் அது வேறை பிரச்சனை...!' என்ற படி சோபாவில் இருக்கஅவன் கைத்தடிகளை வாங்கி உட்கார உதவி புரிந்தவாறே,
'தேத்தண்ணி போட்டுத் தரட்டே...? கேட்டாள் சிவரஞ்சினி-

'வேண்டாம்பூவிழி வேலைக்குப் போக முதல் போட்டு சுடுதண்ணிப்போத்தலுக்கை வைச்சிட்டுத்தான் போறவநீங்கள் எடுத்துக் குடியுங்கோநிறையக் கிடக்கு!' என்றான்.

'வேண்டாம்பிறகு குடிக்கிறன்வேலை ஒன்றுக்குக் கேட்கப் போனனான்சரி வரேல்லை.'

'உங்களுக்கேன் வேலையை...? சும்மா இருங்கோஅண்ணை வீட்டிலை கஸ்டம் என்றால் இங்கை வந்திருங்கோ!'

'இல்லையடா தம்பிவேலைக்குப் போனால் மனதுக்குச்சந்தோசமாக இருக்குமென்று நினைக்கிறன்வீட்டுக்குள்ளை இருக்க ஒரே யோசனையாக் கிடக்கு!'

'சரிஉங்களுக்கு விருப்பமென்றால் நானும் விசாரிக்கிறன்.'

'கூட்டுகிறகழுவுகிற வேலையென்றாலும் பறவாயில்லையடா தம்பிமாலதியின்ரை காசு கொடுக்குமட்டும் சாப்பிடுகிற சாப்பாடு கூட உடம்பிலை ஒட்டாது.'

'அக்காஅண்ணையின்ரை கடன்.. அது என்ரை பொறுப்பு.
மனதுக்குச் சந்தோசமாக இருக்கும்.. ஜேர்மன்பாசை பிடிக்கலாம் செலவுக்குக் கையிலை காசு வருமென்றால் வேலைக்குப் போங்கோ!'

'வேலை கிடைச்சால் தானே!' சோகமாகச் சொன்னாள் சிவரஞ்சினி.

'நாலு இடத்திலை விசாரிச்சால் கிடைக்கும்தானே!' ஆறுதல் பகர்ந்தான் ரமணன்.

'இன்னொரு விசயம்தம்பிநான் குமரனுக்குக் கூடச் சொல்லேல்லை...' இடையில் நிறுத்தித் தம்பியாரைப் பார்த்து விட்டுத் தொடர்ந்தாள்.
'சுகுமாரன் அடிக்கடி ரெலிபோன் எடுத்து ஒரே அறுவை... என்ன செய்யிறதென்று தெரியேல்லை.'

'என்னவாம்.. அவை தானே வேண்டாம் எண்டிட்டுப் போயிட்டினம் பிறகென்ன...?'

'தன்ரை கஸ்டத்தைச்;  சொல்லியாற ஆள் இல்லையாம்சகோதரிகள் தன் கஸ்டத்தை யோசிக்கேல்லையாம்.. என்று ஒரே சோகபுராணம்போதும் போதும் என்ற அளவுக்குக் கதைச்சுக் கொண்டேயிருப்பார்நானாகத்தான் ஏதும் சாட்டுச் சொல்லி ரெலிபோனை வைக்கிறது.'

'என்ன செய்யலாம்... உங்களுக்கு இடைஞ்சல் என்றால் சொல்லுங்கோஅவரை ரெலிபோன் எடுக்காமற் செய்யிறன்.'

'பாவமாக்கிடக்குசும்மா கதைக்கிறதென்றால் கதைக்கட்டன்சுற்றிவளைத்துத்தான் கதைக்கிறார் பார்ப்பம்.'

சிவரஞ்சினி எழுந்து சுடுதண்ணிப் போத்தலுக்குள்ளிருந்த தேநீரை ஊற்றி ரமணனுக்கும் கொடுத்துதானும் குடித்தாள்.

'வேறை என்னடா தம்பி...? மருமக்கள் வரப்போறாங்கள்நான் போகவேணும்.' தேநீரைக் குடித்துதேநீரக்கோப்பையையும் கழுவி வைத்துவிட்டு விடைபெற்றாள்.



18                                                                               


குமரன் வேலையால் வந்து பிள்ளைகளைக் கராட்டி வகுப்புக்குக் கூட்டிச் சென்றுவிட்டு அப்பதான் திரும்ப வீட்டுக்கு வந்திருந்தான்.

மாலதி வரும்நேரம்அவள் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாமென்று தேநீர் தயாரித்து ஹோலுக்குள் போய் ரிவியைப் போட்டுதேநீரிலும் ஒரு மிடறு இடையிடையே குடித்தவாறு சோபாவில் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான்.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கமனைவி வருகிறாள் என்ற மகிழ்வு கிளம்பத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான்.

'என்னப்பா இது...? அங... உங்கடை தம்பியின்ரை மனிசி குடும்பத்துக்குள்ளை தான் குழப்பம் செய்யிறாள் என்று பார்த்தால் பக்றியிலும் தொடங்கிவிட்டாள்அங்கை மஜிஸ்ராவை(மேலதிகாரிமயக்கிப் போட்டுக்கொண்டுஎனக்குக் கிடைக்க வேண்டிய புறமோஸனைத் தான் அபகரிச்சுப் போட்டாள்நான் அப்பவே சொன்னனான்.... இவள் எங்களை உய்யவிடாளென்று... இப்ப பார்த்தியளே...! பூ மாதிரி நடிப்பாள்பூசி மினுக்கி நாட்டியம் ஆடிக்கொண்டு திரியிறதைப் பார்க்க பக்றியிலை எந்த ஆம்பிளைதான் பல்லிளிக்கமாட்டான்.....!' புயலும் மழையுமாகக் கொட்டினாள் மாலதி.

பூவிழியின் அழகில் மாலதிக்கு என்றுமே பொறாமைபோதாததுக்கு பூவிழி ஆடையணிகளைத் தனக்குப் பொருந்தக்கூடியதாக வாங்கி நாகரிகமாக அலங்கரிப்பது அவளின் வழக்கம்நகரிலே எத்தனையோ பெண்கள் அழகழகாத் திரிகிறார்கள்அது மாலதியின் கண்ணுக்குக் குத்தவில்லைஇது குமரனின் தம்பி ரமணனின் மனைவி என்பதால் வந்த வயிற்றுக்குத்துத்தான் அவளுக்கு!
இது குமரனுக்குத் தெரிந்த விடயம்இதனால் அவன் சமாளிக்க முற்பட்டான்.

'நீ நல்ல வேலைதானே செய்யிறாய்;.... பூவிழிக்குப் புறமோஸன் கிடைத்தால் உனக்கென்ன குறைஞ்சு போச்சா...? வீணாக ஏன் கோபித்து வாயிலை வந்தபடி கதைக்கிறாய்?'

குமரனின் கூற்று மாலதிக்குக் கோபத்தை மேலும் கிளறிவிட்டது.
'நான் ஒரு விசரி வந்து உங்களிட்;டை நியாயம் கேட்டன்என்னைச் செருப்பாலை அடிக்க வேணும்.... சீ.. இது ஒரு குடும்பம்....'

'மாலதிஎன்னப்பா கதைக்கிறீர்...? பக்றியிலை அனுபவம்திறமைவேலையிலை கெதி.... இதுகளைப் பார்த்திட்டுத்தான் புறமோஸன் கொடுப்பாங்கள்ஆருக்காவது கிடைக்க இருந்தது பூவிழிக்குக் கிடைத்திருக்குஇதுக்கு நீ ஏன் குழம்பிப் போய் நிற்கிறாய்....?'

'நான் குழம்பேல்லைநீங்கள்தான் குழம்பிப்போய் நிற்கிறீங்கள்இது எனக்குக் கிடைக்க வேண்டிய போஸ்ற்;... நானும் அவளும்  ஒன்றாத்தானே வேலைக்குச் சேர்ந்தனாங்கள்அது என்னென்று எனக்குத் தராமல் அவளுக்குக்கொடுப்பினம்எழும்புங்கோஉங்கடை தம்பி வீட்டை போய்ச் சொல்லுங்கோஇந்தப் புறமோஸனை எடுக்கவேண்டாம்.... மாட்டன் என்று சொல்லலாம் சொல்லச் சொல்லுங்கோபோங்கோ..., நீங்கள் சொன்னால் பூவிழி கேட்பாள்.' மாலதியின் வார்த்தைகள் சூடாக வெளிவந்தன.
அப்போ சிவரஞ்சினிஜேர்மன்மொழி படித்துவிட்டு வீட்டுக்குத்  திரும்பி வந்தாள்அவளது காதிலும் மாலதியின் கர்ஜனை அதிர்ந்தது.

|எந்த நாட்தான் இந்த வீட்டிலை அமைதியாசந்தோசமா மனிசரைப் பார்க்க முடிந்ததுசீ... என்ன மனிசரப்பா இதுகள்?| மனதுக்குள் கவலையும் வெறுப்பும் நிறைய வீட்டுக்குள் வந்தவள்,
'என்ன பிரச்சனை...?' என்று மட்டும் கேட்டாள்.

'உங்கடை அழகு மச்சாள் இருக்கிறாள்தானேஅவள் போற இடமெல்லாம் எனக்குக் கொள்ளி வைச்சுக்கொண்டு திரியிறாள்.'

சிவரஞ்சினி ஏதும் விளங்காமல் தம்பி குமரனைப் பார்த்தாள்.

'பக்றியிலை பூவிழிக்குப் புறமோஸனாம்... தனக்குக் கிடைக்க வேண்டியதாம்.. இதுக்கு நான் என்ன செய்யிறதுபூவிழியிட்டைப் போய்வேலை உயர்வு வேண்டாமென்று சொல்லட்டாம்நான் என்னெண்டு சொல்லுறது?'

'வாயாலை தான் சொல்லுறது... போய்ச் சொல்லிப் போட்டு வாங்கோ!' கத்தினாள் மாலதி.

'ஒரு நியாயமில்லாத கதை கதைக்கிறீர்அவரவர் கெட்டித்தனத்துக்குத்தான் வேலைத்தலத்திலை உயர்வு கிடைக்குது.' திருப்பிக் கத்தினான் குமரன்.

சிவரஞ்சினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லைமௌனமாகத் தன் அறைக்கு நடந்தாள்.

தம்பியை மனைவி காரணமில்லாமல் அதட்டி உரப்புவதைப் பார்க்க அவளால் சகிக்க முடியவில்லை.

விவாகரத்து என்ற ஒன்றை ஏன் மனிதன் உருவாக்கினான் என்ற கேள்விக்கு இப்பதான் சிவரஞ்சினிக்குப் பதில் கிடைத்தது

இப்படியானவர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கு அது ஒரு வழியமைக்கிறதுஎடுத்ததுக்கெல்லாம் கத்திக் குளறினால்நியாயம் என்றால் பறவாயில்லைபொறாமைபேராசைஎரிச்சல்சந்தேகம் இவற்றால் எழுகின்ற பிரச்சனைகளுக்கு என்ன செய்யலாம்...?
சொல்லிக் கேட்காத மனிதர்கள்கூடஇருப்பவர்களுக்குத் தினம் தினம் மனஉளைச்சலைத்தான் அள்ளிக் கொட்டுகிறார்கள்.
|பாவம் குமரன் என்ன செய்வான்என்று நொந்து கொண்டாள் சிவரஞ்சினி.

மோதல் மழை இன்னும் ஓயவில்லை.. இடியும் சேர்ந்து ஒலித்தது.
'நட்டமரம் மாதிரி நிற்கிறியேயப்பாசொல்லுறது விளங்காத அளவுக்குச் செவிடே...? போய்ச்சொல்லிஎனக்கு அந்த வேலை கிடைக்காட்டிநான் வேலைக்குப் போகமாட்டன்அவ நாச்சியாருக்குக் கீழை வேலை பார்க்க என்னாலை முடியாது!'

'முடியாட்டி வீட்டிலை இருபிள்ளைகளைப் பார்!' அமைதியாகச் சொன்னான் குமரன்.

'நான் வேலைக்குப் போகாட்டி வீடு நாறும்உங்களுக்குத் தெரியுமே...?'

'வீடு நாறுதோ... நாறாமலிருக்குதோ பிறகு பார்ப்பம்ஆனால் பூவிழியிட்டைப் போய்புறமோஸனை நீ எடுக்காதைமாலதிக்கு விட்டுக்கொடுஎன்று கேட்க என்னாலை முடியாதுநீ என்ன வேணுமென்றாலும் செய்!'

'என்ன வேணுமென்றாலும்செய்யட்டோமாலதி ஆரென்று நினைக்கிறியள்...!' என்று மேசையில் இருந்த தேநீர்க் கோப்பையைத் தூக்கி எறிந்தாள்அது தொலைக்காட்சியில் போய் மோதி, |கிளிங்;| என்று உடைந்து சிதறியது.

பும் எதிர்பார்க்காத அமைதி.
கண்ணாடி உடைந்த அதிர்வுக்கு சிவரஞ்சினி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

|சேலை கட்டிபொட்டு வைக்கக் கற்றுக் கொடுத்த தாய்தகப்பன் பொம்பிளையா எப்பிடி நடந்துகொள்ள வேண்டும்  என்பதைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டார்கள்.| என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

வாய் திறந்து ஏதாவது எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் போல வாய் துடித்தாலும் சிவரஞ்சினிபின்;விளைவுகளை எண்ணிசிரமப்பட்டுமௌனமாக நின்hறள்.

இருக்கிற வேகத்தில் மாலதி என்ன செய்வாளென்று சொல்ல முடியாதுஅரைப்பைத்தியம் போல நின்றவள்மௌனமாக இருந்த சிவரஞ்சினியை வலுச்சண்டைக்கு இழுக்குமாற்போல,
'என்ன பார்க்கிறீங்கள்இது என்ரை வீடு... நான் உடைப்பன்வாங்குவன்இதைக் கேட்;; யாருக்கும் உரிமையில்லை.' என்று சீறினாள்.

'நான் கேட்டேனா... ஏன் உடைச்சனி என்றுஏன் என்னோடை பாயிறாய்உன்னைத் தடுக்க எனக்கு உரிமையில்லாமல் இருக்கலாம்ஆனால்நீ நடக்கிற நடை முறை சரியில்லைநானும் உன்னைப் போல ஒரு பொம்பிளைதான்.... வாழ்க்கை கிடைக்க முதலே வாழ்வைப் பறி கொடுத்துஆதரவுக்கு ஒரு மனிசர் இல்லாமல்;, தன்னந்தனியா நிற்கிற எனக்கு வாழ்க்கையின் அருமை என்னென்று தெரியும்.
ஆனால் உனக்கு அது தெரியாது... புருஸன்குடும்பம்பிள்ளைகள்;... இதெல்லாம் கடவுள் கொடுக்கும் செல்வங்கள்.. இந்த அருமை தெரியாமல் முள்ளம்பன்றி மாதிரிச் சிலிர்த்துக் கொண்டு நிற்;கிறாய்.'

'நான் என்ன முள்ளம்பன்றியோ...? எல்லாம் உங்களாலை வந்ததுவாழாவெட்டியாக நீங்கள் முழுவியளத்துக்கு இருக்கும்போதுஎங்கடை வீடு எங்கை விடியப்போகுது?'

'நல்லாச் சொல்லுநான் அழமாட்டன்வாழ்க்கை வாழாமலே வாழாவெட்டி என்று பெயரெடுத்தவள் நான்என்ரை முகத்திலை நீ முழிச்சுட்டுப் போய் ஒன்றும்தலைமுழுகிவிடப் போகாதுபெற்ற தாயின் நிலையிலிருந்துதான் நான் உன்னைப் பார்க்கிறன்உன்னோடை கோவிச்சுக்கொண்டு எப்பவோ வீட்டை விட்டுப் போயிருக்கலாம்வேறை வீடு எடுத்து வாழத் தெரியாமல் நான் இருக்கேல்லை.

இது ஜேர்மனிஎப்படி வேணுமென்றாலும் வாழ்ந்திட்டுப் போக இங்கு வசதிகள் இருக்குஆனால் எங்கடை அப்பாஅம்மா அப்பிடி என்னை வளர்க்கேல்லைஇது தம்பி வீடு... ஒரு மூலையிலை இருந்தாலும்பண்பாடு காத்துமற்றவையின் நாலு கதைக்கும் இடம் கொடுக்காமல் இருக்க வேணுமென்றுதான் பல்லைக் கடிச்சுக்கொண்டு இருக்கிறன்!

இது உன்னிலை பிழை இல்லை மாலதிஉன்ரை அப்பாஅம்மா விட்ட பிழைஉன்னைச் செல்லம் கொடுத்து வளர்த்துக் கெடுத்துப்போட்டினம்நான் கெதியிலை உன்ரை வீட்டைவிட்டுப் போறன்அதுக்குப் பிறகு நீ நிம்மதியாக இருக்கலாம்.' சொல்லி விட்டுசிவரஞ்சினி தன் அறைக்குள் போய்விட்டாள்அவள் மனம் பட்ட வேதனையை வார்த்தையால் அளந்துவிட முடியாதுகுமுறிக் குமுறி அழுதாள்.

வாழ்க்கையே ஒரு சூனியமாக அவளுக்குத் தெரிந்தது.

|செத்துத் தொலைந்து போயிடவேணும்இந்த வாழ்க்கை வேண்டாம்;, ஒருநாளிலைஒரு நிமிடத்திலை வாழ்க்கை முடிஞ்சுது என்றால்.. எல்லாத்துக்கும் ஒரு முடிவு!
கவலையில்லைகண்ணீரில்லைவாழாவெட்டினெ பெயரில்லைமுழுவியளத்துக்கு உதவாதவள் என்ற பேச்சுமில்லைபிதற்றினாள் சிவரஞ்சினி.

தண்ணியும் குடிக்காமல், உணவும் உண்ணாமல் அணிந்திருந்த உடுப்போடு படுத்திருந்தாள். கண்ணீர் ஓய்வின்றிப் பாய்ந்தது.

ஒரு முடிவு......

என்ன செய்யலாம்? அவள் மனதுக்கு ஏதும் ஒரு வழிகூடத் தட்டுப்படவில்லை, யோசித்தபடியே தூங்கிவிட்டாள்.




19


வீட்டுக்கதவுமணி அடிக்க, சிவரஞ்சினி திடுக்கிட்டு எழுந்தாள்.

பொழுது இருண்டு விட்டது. இரண்டாம்தடவையும் வீட்டுக்கதவு மணி ஒலித்தது.

|வீட்டில் தம்பியவை எங்கை போட்டினம், ஏன் இன்னும் கதவைத் திறக்கவில்லை...?| என்ற கேள்விக்குறியுடன் தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

குளியலறைக்குள் போய், கண்ணாடியில் முகத்தையும் தலைமுடி யையும்; விரைந்து சரி செய்து, தனது அழுது வடிந்த முகத்தை அடுத்தவருக்கு அறிவிக்க விரும்பாமல், வெளிக்கதவை நோக்கி நடக்க மீண்டும் மணியொலித்தது.

சிவரஞ்சினி கதவைத் திறந்தாள்.

கண்கள் விழிக்க, ஒழுங்காகச் சவரம் செய்யாது தாடி, மீசைகள் சிரிக்க நின்றிருந்தான் சுகுமார்.

'கதவு திறக்க இவ்வளவு நேரமா?' கேட்டான் அவன்.

அவள் பதில் சொல்லாமற் தயங்கினாள்.

'உள்ளே வரலாமா?'

'தம்பியவை இல்லை!'

'எங்கை போட்டினம்.. பேத்டெ பார்ட்டிக்கா...?'

அப்போதான் அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.

அடுத்த நகர் ஒன்றில் குமரனுக்கு வேண்டிய நண்பன் வீட்டில் இன்று பிறந்தநாட் கொண்டாட்டம்... போவதாக இருந்தார்கள். அது எப்படி இவருக்குத் தெரியும்?| சந்தேகம் எழ,

'அது எப்படி உங்களுக்குத் தெரியும்?' கேட்டாள் சிவரஞ்சினி.

'அப்போதை ரெலிபோன் எடுத்தனான், தங்களுக்கு நேரமில்லை.. பேத்டேக்குப் போகவேணும், நாளைக்கு எடுக்கச் சொன்னவர்; உங்கடை தம்பி! அதுதான், அவை இல்லாத நேரம் உங்களோடு கொஞ்சம் தனியாகக் கதைக்க வேணும்.' சொல்லிக்கொண்டே ஹோலுக்குள் நடந்து சோபாவில் அமர்ந்துவிட்டான் அவன்.

இதென்ன தலையிடி...?| என்று மனதுக்குள் கசந்தாள் அவள்.

'என்ன யோசிக்கிறீங்கள்... தேத்தண்ணி தரமாட்டீங்களோ?'

'தம்பியவை நிற்கிற ஒரு நாளைக்கு வாங்கோ... அதுதான் நல்லது.'

'உங்களுக்கு என்ரை பிரச்சனை விளங்குதில்லை, என் மனதைப் புரிஞ்சு வைச்சிருக்கிறது நீங்கள் ஒராள்தான், நீங்களே இப்;பிடிச் சொன்னால்;....!'

'நீங்கள் என்ன சொல்லுறீங்கள் என்று எனக்கு விளங்கேல்லை.'

'உங்களுக்கு நல்லா விளங்கும்.... பயத்திலை விளங்காதது போல நடிக்கிறீங்கள். என்னுடைய கலியாணம் சீதனத்தாலை தானே தடைப்பட்டது, அதை விட்டால் ஓகே தானே, என்ன சொல்லுறீங்கள்?'

'இதை நானோ, நீங்களோ முடிவு செய்யேலாது, எங்கடை வீட்டுக்காரரும் உங்கடை வீட்டுக்காரரும் கதைச்சப் பேசிச் செய்ய வேண்டிய விடயம், அதோடை நான்....' சிவரஞ்சினி சொல்லி முடிப்பதற்குள் சுகுமார் குறுக்கிட்டான்.

'நீங்கள் என்னைக் கலியாணம் செய்யிறத்துக்கு இப்ப சம்மதிக்;கிறீங்கள், இல்லாட்டி என்னை நீங்கள் நாளைக்கு உயிரோடை பார்க்க மாட்டீங்கள்!'


'மிஸ்டர் சுகுமார்;, கதைக்கிறதை யோசிச்சுக் கதையுங்கோ! நான் இப்ப கலியாணம் செய்யிற நிலையிலை இல்லை.'



'கலியாணம் செய்யிற நிலையிலை இருக்கிறவை மட்டும்தானா கலியாணம் செய்யிறது? மற்றவையெல்லாம் அனாதையா அலையிறதா?'



சுகுமாரின் வார்த்தைகள் சிவரஞ்சினிக்கும் பொருந்தக்;கூடியதாக அமைந்தன.

அவள் மௌனமாக இருந்தாள். அவன் வார்த்தைகளில் பிழை ஏதும் தெரியவில்லை.



சிலருக்கு இளமை பூத்துக் குலுங்க ஆரம்பிக்கவே, காதலித்து, கலியாணம் செய்து குடும்பமாகி விடுகிறார்கள்.

சிலருக்கு பெற்றோர்கள், உறவினர்கள் இளம்வயதிலேயே கலியாணத்தை முடித்துவிடுகிறார்கள்.

வெளிநாட்டுக்குப் புலம்பெயரத் தொடங்கியபின் காதல் கலியாணங்கள் இலகுவாக ஈடேறவும் பெண்சாராரிடமிருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலும் காதலனே காதலியை வெளிநாட்டுக்கு அழைத்து மணமுடித்துக்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டாயின.



இவ்வாறு வசதியும் இளமையும் அழகும் உள்ள இடங்களில் திருமணங்கள் திடுதிப்பென்று கைகூடி, புதுமணத்தம்பதிகள் இடையூறின்றி இனிது வாழ, வெளிநாட்டு வாழ்க்கை பெரிதும் இடமளிக்கிறது.



ஆனால், சிலருக்கு உறவினர்களின் ஊக்குவிப்பு, தூண்டுதல், ஒத்துழைப்பு என்பன இல்லாமல் திருமணவயது கடந்தும் குடும்ப வாழ்வு அமையாது, தடைகளும் ஏமாற்றங்களுமாய் இளமை காய்வதும் பரந்து விரிந்த அலைகடலில் தனிஓடமாய் அலைவதுமாய் வாழ்க்கை நகர்கிறது.



ஒருசில நிமிடங்கள் பேசாமல் நின்ற சிவரஞ்சினி, சமையல் அறைக்குச் சென்று தேநீர் வைத்தாள். அவள் மனதில் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன.

ஒருவருமில்லாதவேளை, அந்நியர் ஒருவரை வீட்டுக்குள்; வைத்திருப்பது தேவையற்ற கதைகளுக்கு இடந்தரலாமென்று பயந்தாள்.

அதேவேளை அன்று பிற்பகல் மாலதி சொன்ன கடுமையான வார்த்தைகளும் மறுபக்கத்தில் அவள் பயத்தை உடைத்தன.



'வாழாவெட்டியான நீங்கள் முழுவியளத்துக்கு இருக்கும்போது, எப்படி வீடு விடியப்போகுது?' என்ற மாலதியின் பீரங்கியடி போன்ற விசவார்த்தைகள் சிவரஞ்சினிக்கு அசாத்தியத்துணிவைக் கொடுத்தன.



'நான் வாழாவெட்டியாம்... இவளுக்காகவாவது நான் வாழத்தான் வேண்டும்...'  என்ற உறுதி நெஞ்சில் முளைக்க, தேநீடன் வந்தாள்.



'நான் ஒரு பேச்சுக்குத்தான் தேத்தண்ணி கேட்டனான், நீங்கள் றெடிமெற்றா இருந்தது மாதிரி மின்னல் வேகத்தில் போட்டுக் கொண்டு வந்திட்டீங்கள்... தாங்ஸ்!' என்று சிவரஞ்சினி கொடுத்த தேநீரை வாங்கி மேசையில் வைத்தவன்,

'உங்களுக்கு....?' என்று அவளைப் பார்த்தான்.



'பிறகு குடிக்கிறேன்!' பதில் சொன்;னாள்;.



'அப்ப இதிலை பாதியைக் குடிச்சிட்டுத் தாங்கோ, மிச்சத்தை நான் குடிக்கிறன்!' என்று சிரித்த முகத்துடன் தேநீரைக் காட்டினான்.



'வேண்டாம்... வேண்டாம்! மிச்சம் இருக்கு, எடுத்துக்கொண்டு வாறன்;!' என்றுவிட்டு, உள்ளே போன சிவரஞ்சினி தேனீருடன் வந்து உட்கார்ந்தாள்.



சுகுமாரன் கேட்டான்,

'கோபமா...?'



'எதுக்கு...?'



'சீதனம் கேட்டது... இப்ப, நீங்கள் தனியாக இருக்கும்போது திடீரென்று வந்து உங்களுக்கு அலுப்புத் தாறது!'



'பறவாயில்லை, விளங்கினால் சரி.'



'தமாஸ் விடுகிறீங்கள்...' என்றவன் அவள் தேநீரைப் பார்த்தான். அவன் மூளையில் ஏதோ சிந்தனைகள் வளர்வதை, அவனது கண்களில் படர்ந்த பயக்குறிகள் காட்டின... நெஞ்சம் சற்றுப் படபடத்தது.



'தேத்தண்ணி நல்லாச் சுடுகுது, ஆத்தினால் நல்லது.' என்று எழுந்திருக்க முனைந்தவனை,

'இருங்கோ, நான் ஆத்திக்கொண்டு வாறன்!' என்று சிவரஞ்சினி தேநீரை வாங்கிக்கொண்டு சமையலறைக்கு விரைந்தவள்; அதை ஆற்றிக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.



தேநீரை வாங்கி மெதுவாக இரசித்துக் குடித்தவாறே....

'உங்கடை போட்டோ அல்பம் இருந்தால் தாங்கோவன், பார்க்க ஆசையா இருக்கு.' என்று கேட்டான் அவன்.



சிவரஞ்சினி தன் அறைக்குச் சென்று சிறிய அல்பம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தாள்.



சுகுமார் மெதுவாக அந்த அல்பத்தைப் புரட்;டினான்.



சிவரஞ்சினி மனதில் ஏதோ பெரிய யுத்தமே நிகழ்ந்து கொண்டிருந்தது. பயமா...? துணிவா...? கோபமா...? ஆசையா...? எதுவென்று சொல்லமுடியாத ஒரு நிலையில் தேநீரை அருந்தினாள்.



எவ்வளவு நேரம் சுகுமார் தன் வீட்டில் இருந்தானென்று அவளுக்குத் தெரியாது, மறுநாட்காலைதான் அவள் கண் விழித்தாள்.


20

அவள் முகம் கழுவிவிட்டு வரும்போது, குமரன் குரல் மறித்தது.

'அக்கா!'

பயத்துடன் திரும்பினாள். 'முதல் நாள் சுகுமாரன் வந்தது தம்பிக்குத் தெரிந்து விட்டதா?' நெஞ்சு படபடத்தது.



'நல்லவேளை தப்பிவிட்டீங்கள்! உங்களைப் பெண் பார்க்க வந்தவர் இண்டைக்குக் காலை வேலைக்குப் போகேக்கை அக்ஸிடன்ரிலை போயிட்டார்.'



இடிமுழங்கியது சிவரஞ்சினிக்குள்!



பேச்சு வராமல் நா தடக்க, நெஞ்சிடிக்க, முகம் விறைக்க அவள் கண்கள் யாரது என்று தவிப்போடு கேட்டன.



'சுகுமார்... இங்கை வந்து லெவல்கதையெல்லாம் கதைச்சினம்... பார்! மனிசவாழ்க்கையெண்டால் இப்பிடித்தான். லொறிக்காரன்; சிக்னலிலை சிவப்பிலை திருப்பி இருக்கிறான்... இந்தாள்; தனக்கு பச்சைலைற் எரியுது என்று பறந்திருக்கு! ஒரடி... காரும் சப்பல், ஆளும் முடிஞ்சுபோச்சு. சரியில்லை செத்தவீட்டை போகவேணும்.' என்று சொல்லிவிட்டு, குமரன் குளியலறைக்குட் புகுந்தான்.



சிவரஞ்சினி இரத்தமெல்லாம் உறைந்தது போல விறைத்துப் போய் நின்றாள்.

'நேற்று வந்து பகிடி எல்லாம் கதைத்து... தேத்தண்ணியும் வாயாலை கேட்டு வாங்கிக் குடித்து... என்ரை அல்பமும் வாங்கி படமெல்லாம் பார்;த்துவிட்டுப்போன மனிசன்....' சூறாவளியடிப்பது போல அவள் நெஞ்சப்பூஞ்சோலை சின்னாபின்னப்பட்டது.



உயிர்ப்பனவின்றித் தன்னறைக்குள் நடந்து போய் கட்டிலில் உட்கார்ந்தாள்.

'யாரோ சுகுமாரன் செத்தால் எனக்கென்ன?

இடையிடையே ரெலிபோன் கதைத்தவர், ஒருக்கா பெண் பார்க்க வந்தவர், நேற்று என்; கையால் தேநீர் குடித்தவர்;' அவள் நெஞ்சு றெயின் ஓடுவது போலக் கடகடத்தது.

'நேற்று இரவு என்ன நடந்தது? எனக்கே தெரியாமல் எனக்கேதும் நடந்ததா?' கேள்வி எரிமலையாகக் கிளர்ந்து வெடித்தது.



அவள் மறுத்தாள்.... 'ஒரு போதும் இருக்காது... இருக்கக்கூடாது' என்று முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதாள்.



'ஐயோ!' கூச்சல் போட்டு அலறினாள்.



குமரன் ஓடி வந்தான்.



'ஒன்றுமில்லை போ!' என்று கதவைச் சாத்தினாள் சிவரஞ்சினி.

கதவைத் தள்ளித் திறந்த குமரன்,

'ஏனக்கா நீ அழுகிறாய்? கலியாணம் நிச்சயம் செய்திருந்தால் தான் நாங்கள் அழவேணும்.' என்று சமாளித்தான்.



'என்னைப் பார்க்க வந்த இரண்டாவது மாப்பிள்ளையும் செத்துப் போச்சடா! நான் எவ்வளவு அபாக்கியசாலி... சும்மாவே வாழாவெட்டி என்று சொல்லுற உன்ரை மனிசி, இதையறிந்தால் என்னென்ன சொல்லித் திட்டுவாளோ...?' சோகம் சோனாவாரி மழையாகக் கொட்ட, வாடி நின்றாள்.



சிவரஞ்சினியின் நிலைமை தெரியாத குமரனால்  அக்கா ஏன் இப்பிடி அழுகிறா என்று மட்டும் தான்; நினைக்கத் தோன்றியதே தவிர, அவள் மனம் பட்ட அல்லோகல்லோலத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.


21

தமிழ்ப்பள்ளிக்கூடம் முடிந்து வகுப்பறைக் கதவுகளைப் பூட்டிக்; கொண்டு தொண்டர் வெளியே வர, சிவரஞ்சினி தன் மருமக்களைக் கூட்டிக் கொண்டு போவது தெரிந்தது.

பலநாட்கள் சந்திக்கவில்லை, வழக்கமாகத் தானாகவே அவள் தேடி வந்து கதைப்பது வழக்கம்.

மனம் கேட்கவில்லை, விரைந்து நடந்து, சற்று அண்மையிற் சென்று, 'ஹலோ!' என்று அழைத்தார் தொண்டர்.

சிவரஞ்சினி நின்று திரும்பிப் பார்த்தாள். தொண்டர் தன்னை நோக்கி எட்டி நடந்து வருவது தெரிந்தது.

'சுகமாக இருக்கிறீங்களா?.'

'இருக்கிறன்.'

'பழைய கலகலப்பை முகத்திலை காணேல்லை. முன்பெல்லாம் வடிவாக் கதைப்பீங்கள்... சமரன், ஜெயன் படிப்புகள் பற்றி விசாரிப்பீங்கள் ஏன் திடீரென்று மௌனமாயிட்டீங்கள்? கிளி ஒன்று பேசாமல் போவதும் மயில் ஒன்று ஆடாமல் நிற்பதும் குயில் ஒன்று பாடாமல் நடப்பதும் இயற்கையல்ல.'
இதை இரசிக்கிற மனோநிலையில் சிவரஞ்சினி இல்லை.

'வீட்டுக்கு அவசரம் போக வேணும்!' சொல்லிவிட்டு, அவள் மருமக்களோடு பஸ்தரிப்பு நிலையத்தை நோக்கிச் சென்றாள்.

தொண்டர் தன் காரை நோக்கி நடந்து கொண்டிருக்க, தாமோதரன் அவரைத் தேடி வருவது கண்;டு நின்றார்.

'என்ன புதினம்?'

'நீதான் சொல்ல வேணும்!'

'ஆப்கானிஸ்தானை அடிச்சு ஒன்றும் நடக்கேல்லை, இப்ப கப்பல் கப்பலா அள்ளிக்கொண்டுபோய் ஈராக்கை அடிக்க வேணுமென்று அமெரிக்கா அந்தரப்படுகுது!'

'எல்லாம் பொலிற்றிக் தான்.'

'வா, வீட்டை போய்ச் சாப்பிடுவம்!' அழைத்தார் தாமோதரன்.

'மனம் கொஞ்சம் சரியில்லை. வீட்டைபோய்க் குளிச்சிட்டு சோபாவிலை நீட்டிநிமிர்ந்து இருக்கவேணும் போல கிடக்கு!'

உனக்கு மனம் சரியில்லை என்றால் உலகத்துக்கு மனம்சரியில்லை என்றமாதிரி...... வா! நான் உன்ரை பழைய நண்பன் கொஞ்சம் கதைக்கவும்வேணும் மாட்டன் என்று சொல்லாதை வா! என்றார் தாமோதரன்.

தொண்டர் மறுக்கவில்லை.

தாமோதரன் கடையும் வீடும் அருகருகே அமைந்திருந்தன. காரை நிறுத்திவிட்டு இருவரும் வீட்டுக்கு நடந்தனர்.

தாமோதரத்தின் மனைவி அன்போடு வரவேற்றாள். தொண்டர் மிக நல்ல மனிதர் என்பது அவ்விடத்தில் அனைவரும் அறிந்தவிடயம் அநாவசியமாக யார் வீட்டுக்கும் அவர் போனதில்லை. அப்படியானவர் வீட்டுக்கு வரும்போது விசேடகௌரவிப்பு இருக்காதா என்ன...?

பல விடயங்கள் கதைத்தனர்.
'கடைசி பஸ்சும் போட்டுது, ஸ்பெசல் பஸ் ஒன்று வருகுது.. ஏறுறியா?' கேட்டார் தாமோதரன்.

தொண்டருக்கு விளங்கவில்லை.
'என்ன பகிடியா...?' கேட்டார்.

'கலியாணம் செய்! என்று எத்தனையோ தரம் கேட்டு அலுத்துப் போய், இப்ப கேட்காமலே விட்டிட்டன். என்றாலும் மனம் கேட்கேல்லை... என்ன சொல்லுறாய்...! வயதான காலத்திலை வழித்துணைக்காவது செய்யன்! ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தாய் என்ற சந்தோசம் வாழ்வில் இருக்கும்.'

'ஏன் எனக்கு அந்தப்பெண் வாழ்வு கொடுத்ததாக இருக்காதா?'

'ஓமடா... அதுவும் தான், உனக்கு அவள் வாழ்வுக்குத் துணையாயும்; அவளுக்கு நீ வாழ்வுக்குத் துணையாயும் இருக்கலாம்.'

தொண்டர் மௌனமாக இருந்தார்.

'எப்பவோ ஒருத்தி இளம் வயதிலை காதலிச்சு ஏமாற்றிப் போட்டாள் எண்டதுக்காகத் தலை நரைக்கு மட்டும் விரதம் இருந்;தது போதுமென்று நினைக்கிறன்... இனியாவது நீ உனக்கு என்று ஒரு வாழ்க்கை....
எடே தொண்டா.... உனக்குத் தலை இடிச்சால் தண்ணி சுட வைச்சுத் தாறதுக்கு ஒருத்தியைத் தேடிக்; கொள்ளு!'

'தலையிடிக்குத் தண்ணி வைக்கிறதுக்கு என்று இனி நான் கலியாணம் செய்தால் ஊர் சிரிக்கும்.' மெதுவாகச் சொன்னார் தொண்டர்.

'ஊர் சிரிக்கும், பிறகு அழும். இது எப்பவும் நடக்கிறதொன்று. நீ ஊருக்குப் பொதுவானவன்... உனக்கு ஒன்றென்றால் ஊரே திரண்டு நிற்கும்... ஆனால், பிறகு போய்விடும். உன்னோடை என்றும் பக்கத்திலை, பின்னும் முன்னுமாக நிற்க ஒரு துணை வேண்டாமா....?'

'யாருமே யாருக்கும் துணையில்லை... இது ஒரு மனஆறுதல், அவ்வளவுதான்.'

'உனக்கு நான் புத்தி சொல்லத் தேவையில்லை, ஆனால் உன்னுடைய கௌரவம், அந்தஸ்து, வசதி.. இதுகளைப் பகிர்ந்து கொள்ள, அனுபவிக்க ஒருத்தி.... இதுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடேன்;டா!
கலியாணம் செய்யப் போறன்; என்றதுக்காக நீ ஏதும் புதுசா ஒன்றும் செய்ய வேண்டியதேயில்லை. வீடு வாங்க வேணும்;, குசினி வாங்க வேணும், கட்டில் வாங்கவேணும், ஹோலுக்கு சோபா அலுமாரி வாங்கவேணும், கார் வாங்கவேணும்.... என்றெல்லாம் ஓடத் தேவையில்லை. எல்லாம் உன்னட்டை இருக்கு!
'தொண்டரின் மனைவி நான்;' என்று சொல்லத்தான் ஒரு இல்லத்தரசியில்லை.'

'யோசிக்கிறன்!' பதில் சொன்னார்.

'இந்தத்தடவையும் இதே பதில்தானோ...?'

'ஆசை துன்பம் தரும்... இன்னும்...இன்னும் என்று ஆசைகள் வளர்ந்து பேராசையாகும். ஆறு மாத விசா தந்தால் போதும் என்ற மனிதர்கள், சிற்றிசன் கிடைச்சு, கின்டர்;கெல்ட் கிடைச்;சு, வோர்ண்கெல்ட்; எடுத்து, வீடு வாங்கி, பிள்ளைகள் பெற்று, பிள்ளைகள் படிச்சு, பிள்ளைகளின் படிப்புக்குப் போட்டிபோட்டு, பிள்ளைகளுக்கு வீடு வாங்கி............. எங்கே ஆசை நின்றது? எவ்வளவு வேகமாகக் கிளைவிட்டு வளர்ந்து, எத்தனை உருவத்தில் தொல்லை தருகிறது....?
மனிதன் வாழ்ந்து சாக வேண்டும், செத்து வாழக்கூடாது.'

'சரி, ஆர் பெண் என்றாவது கேட்டியா...?'

தொண்டரின் கண்கள் தாமோதரனை நோக்கின.

'குமரனின் அக்கா சிவரஞ்சினி, பாவம் அந்தப்பிள்ளை.... வாழாவெட்டி என்று மச்சாள்காரி திட்டத்திட்ட வேறுவழியின்றி தம்பிமார் வீட்டிலை நரக வாழ்க்கை வாழுது... படிச்சபிள்ளை... அதை இங்கை கூப்பிட்டு... சீ... உவங்களும் மனிசன்களே..!' என்று குமரனையும் ரமணனையும் கடிந்து கொண்டார் தாமோதரன்.

தொண்டர் மூச்சை இழுத்துவிட்டார்.

'இரண்டாந்தாரம்... தலையிலை கட்டிவிடப் பார்க்கினம் என்று யோசிக்கிறியோ...?'

சிரித்தார் தொண்டர்.
'நானும் காதலித்து ஏமாந்தவன்;, இரண்டாந்தாரம்;தான்... மனிதனை மனிதனாகப் பார்ப்பவன் தொண்டன்... சிவரஞ்சினியை எனக்குத் தெரியும்;. மகாலக்சுமிமாதிரி, உடனே சம்மதிப்பது யோசிக்காமல் சம்மதிப்பதாகும்... கட்டாயம் நல்ல பதில் சொல்வேன்.'
விடைபெற்றார் தொண்டர்.


22 

பூவிழி தனக்குக் கிடைத்த பதவியுயர்வைப் பொறுப்போடு ஏற்று இருந்தாள். ஆனால் அவளின் கீழ் வேலை செய்ய மனம் கொள்ளாத மாலதி தன்னுடன் வேலை செய்யும் அனைவருக்கும் கோப்பி வாங்கிக் கொடுத்து, பூவிழிக்கு வேலையில் கெட்ட பெயர் எடுத்து, பதவியை விட்டிறக்கும் முயற்சியில் இறங்கினாள்.

இதனைத் தெரிந்துகொள்ள பூவிழிக்கு அதிக நாட்கள் எடுக்க வில்லை. இதுபற்றிக் கதைக்க மாலதி வீட்டுக்கு கணவனையும் அழைத்;துக்கொண்டு வந்தாள்.

மீண்டும் ஒரு யுத்தக்களத்துக்கு வீடு தயாரானது.

மாலதி ஏழு முழத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு 'ம்;' என்று உட்கார்ந்திருந்தாள்.
சிவரஞ்சினி தேநீர் போட்டுக் கொடுத்து உபசரித்தாள்.

எப்படிக் கதையை ஆரம்பிப்பது என்பது தெரியாமல் முதலில் சில நிமிடங்கள் மௌனமே விரிந்திருந்தது.

ரமணன் மரியாதையுடன்,
'அண்ணை! நாங்கள் சொல்லுறம் என்று கோவிக்காதேங்கோ, எங்களுக்கை எந்த விரோதமும் வேண்டாமென்று நாங்கள் ஒதுங்கி இருக்கிறம்... ஆனால் அண்ணி வீட்டுச்சண்டையை பக்றிவரை கொண்டு வந்திட்டா... நாங்கள் குடிக்கிற கஞ்சியை வீணாத் தட்டி ஊற்ற வேண்டாமென்று சொல்லுங்கோ!'

சீறிக்கொண்டு எழுந்தாள் மாலதி. அவள் முன் இருந்த தேநீர்க் கோப்பை மின்னல் வேகத்தில்  பறந்து சிதற இருந்தது. பக்கத்தில் இருந்த குமரன் எட்டி அவள் கையை அசையாமற் பிடித்துக்கொண்டு அதிரும் குரலில் அவளை எச்சரித்தான்.
'கதைக்கிறதைத் தாராளமாகக் கதை! ஆனால் எறியிறது, உடைக்கிறது வேண்டாம்.'

'அண்ணை, தம்பி, அக்கா, மச்சாள் எல்லாரும் சேர்ந்து என்னை அடக்கலாமென்று மட்டும் நினைக்காதேங்கோ!' என்றவள் வலது கை சுட்டுவிரலை நீட்டியவாறு, கையை ஆட்டிக்கொண்டு,
'எங்கடை அப்பாவை உங்களுக்குத் தெரியாது.... நான் நினைச்சால்....'  என்று ஏதோ அதட்டும் குரலில் சொல்ல முற்பட்டவளை குமரன் குறுக்கே தடுத்து,
'உன்ரை அப்பா என்னத்தைப் பெரிசா வெட்டிக் கிழிச்சவர்? ஐநாவிலை இலங்கைத் தமிழரைப் பற்றிக் கதைச்சவரோ இல்லாட்டி எங்களுக்குச் சமாதானத்தைப் பெற்றுத் தந்தவரோ..? பெரிய அப்பாக்கதை கதைக்க வந்திட்டா...' என்றான்.

'என்ன..என்ன செய்வீங்கள்? மிஞ்சிமிஞ்சினால் கை நீட்டுவீங்கள்;, நீட்டிப் பாருங்கோ. இது டொச்லான்ட்... தெருவிலை நிற்பீங்கள்.' உறுமினாள் மாலதி.

இம்முறை குமரன் எதுக்கும் துணிந்து விட்டான் என்பது அவன் குரலில் தெரிந்தது.

'டொச்லான்ட்... டொச்லான்ட்... என்று சொல்லி, எங்களையும் வெருட்டி நீயும் வெருளாதை! நியாயம் உனக்கும் ஒன்றுதான், எனக்கும் ஒன்றுதான்!'

'என்ன பெரிய நியாயம் கதைக்கிறீங்கள்!'

அப்போ ரமணன் எழுந்து,
'வேண்டாம், நீங்கள் எங்களாலை சண்டை பிடிக்க வேண்டாம்;, நாங்கள் சொல்;ல வந்ததைக் கேட்கிற நிலையிலை அண்ணி இல்லை... சரி, நாங்கள் போட்டு வாறம்!' என்று சொன்னான்.

அவர்களைக் குமரன் போகவிடவில்லை.
'இருங்கோ! ஒருதர் உரத்துக் கதைத்து, அதட்டி, வெருட்டி நியாயத்தை மூடி வைக்க முடியாது... எனக்கெல்லாம் தெரியும்.' என்றான்.

'என்ன உங்களுக்குத் தெரியும்...? பக்றியிலை அவ எனக்கு மைஸ்ரார் வேலை பார்க்கிறா, இவ ஆர் எனக்கு...? இவவுக்குக் கீழை வேலை செய்ய நான் என்ன ஒன்றுமில்லாதவளே?'

அப்போ பூவிழி ஏதோ சொல்ல வந்தாள்.
'அத்தான்....'

'என்னடி... அத்தானும் பொத்தானும்... ஐஸ் வைக்கப் பார்கிறியோ...?'

பூவிழி வாயை மூடிக்கொண்டாள்.... கண்கள் கலங்கின.

'காற்றடிக்கும்... மழை கொட்டும்... பாம்பு கடிக்கும்... யானை மிதிக்கும் என்றெல்லாம் தெரிந்துகொண்டு காட்டுக்குள் இருந்து வளர்ந்த ஒரு படை, காட்டை உடைத்;து, முத்திரை பதித்து, ஐரோப்பா வரை சமாதமானம்; பேச வந்தது தெரியுமா...?'
ரமணன் கேட்டான்.

'உங்கடை தம்பி சொல்லுறது விளங்கேல்லை...' நெளித்தாள் மாலதி.

'இங்கை வந்தால் நீ எப்பிடியெல்லாம் ஆத்திரம் கொள்வாய் என்று தெரிந்தும் நியாhயம் கேட்க வந்ததாகச் சொல்லுறான்... புரியுதா?' கிண்டல்; பண்ணினான் குமரன்.

'நியாயம்... நியாயம் என்று எல்லாரும் கதைக்கிறீங்கள்... எது நியாயம்.. சொல்லுங்கோ!' கேட்டாள் மாலதி.

குமரன் பதில் சொன்னான்,
'பூவிழியைப் புறமோஸன் எடுக்க வேண்டாமென்று நீ சொல்லுவாய்... உனக்கு அவ பதவி உயர்வது பிடிக்காது. இதாலை இப்பிடியெல்லாம் மனஸ்தாபம் வருமென்;று தெரிஞ்சு பூவிழியே தனக்குப் புறமோஸன் வேண்டாமென்றும் அதை உனக்குக் கொடுக்குமாறும் மைஸ்ராரிடம் சிபார்சு செய்திருக்;கிறாள். அவர் முடியாது என்றுவிட்டார், பூவிழி ஏற்காவிட்டால் அடுத்ததாக ஒரு போர்த்துக்கல் மனிசிக்குத்தான் அந்த இடம் போகுமென்று சொன்னதால், தானே சரியென்று ஏற்றுக் கொண்டிருக்கிறாள்... இது உனக்குத் தெரியுமா...?'

'நான் நம்பமாட்டன், ஏன் பொய் சொல்லுறீங்கள்;? தம்பி, மச்சாள் பாசம் உங்களை நினைச்சபடி பேசவைக்குது.'

'எடி விசரி, கோபம் வர வைக்காதை! அண்டைக்குப் பூவிழி இதுபற்றி என்னோடை கதைச்சிருக்கிறாள்... சொல்லுறன் நம்பமாட்டன் என்கிறாய்!'

'என்னை விசரி என்று நீங்கள் உளறாதேங்கோ! உதெல்லாம் கட்டுக்கதை!'

'உண்மைதான் அண்ணி, நானும் பூவிழியும் இதுபற்றி அண்ணையோடை கதைச்சிருக்கிறம்... பூவிழி இந்தப் புறமோஸனை எடுக்காட்;டி அது வேறை யாருக்காவது தான் போகும், உங்களுக்கு வராது என்று மைஸ்ரார் அடிச்சுச் சொல்லிப் போட்டார்!'

'இப்ப நம்பிறியே...! இனியாவது குழப்பாமல் இரு. பக்றியிலை கோப்பி வாங்கிக் கொடுத்து மற்ற வேலைகாரரையும் பூவிழியோடை ஒத்துப் போகவிடாமல் செய்யிறதை விட்டிட்டு, பிடிக்காட்டிப் பேசாமலிரு!'

'சும்மா விசர்க்கதை கதைக்காதேங்கோ! என்ன... நான் கோப்பி வாங்கிக் கொடுத்தனானோ...? இல்லாததையும் பொல்லாததையும் அவை வந்து சிரிச்சுச் சிரிச்சு ஓதுவினம்... அதைக் கேட்டிட்டு என்னோடை சண்டைக்கு வாங்கோ! கூட வேலை செய்யிறவைக்குக் கோப்பி வாங்கிக் கொடுத்தாக்கூடப் பிழையாம்;... விட்டால்; தலையிலை சம்பலை அரைச்சுப் போடுவினம்.'

மாலதிக்கு அதுக்குமேல் அங்கு இருக்கு முடியவில்லை. அவள் குட்டு வெளிப்பட்டுவிட்டது என்று விளங்கியதும் அதட்டி, உரப்பி, மழுப்பிவிடலாமென்று ஒரு கத்துக் கத்தி கோபத்தில் போவது போல, படுக்கையறைக்குள்  போய்க் கதவை அடித்துச் சாத்திக் கொண்டாள்.

வீட்டுக்குப் போகலாமென்ற எண்ணத்தில் ரமணனைப் பார்த்தாள் பூவிழி. உள்ளே விஸ்ணு   குமரனின் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தான். ரமணன்;, அவனை வா போகலாமென்று அழைக்க, 'வேண்டாம் அப்பா, இங்கை நிற்பம்;' என்று மறுத்தான். அவனைப் பெரும்பாடுபட்டுத்தான் சம்மதிக்க வைக்க முடிந்தது.

'போட்டு வாறம்!' என்று மூவரும் வெளிக்கிட,
'நாங்கள் இலண்டனுக்குப் போய் இருக்கப்போறம்!' என்று பெரியதகப்பனுக்கும் மாமிக்கும் தன் பிள்ளைமொழியில் சொன்னான் விஸ்ணு  .

குமரன் திடுக்கிட்டுப்போய்,
'இவன் என்னடா சொல்லுறான்...!' என்று தம்பியைப் பார்த்துக் கேட்டான்.

சிவரஞ்சினி, விஸ்ணு   விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று பேசாமலிருந்தாள்.

'அண்ணை! நாங்கள் இங்கை இருக்கமுடியாது, இப்பிடித் தினமும் சண்டைபோட்டுக்கொண்டு.... ஏன்... வேண்டாம். தேவை இல்லாமல் எதுக்கெடுத்தாலும் நான் பெரிசு, நீ பெரிசு என்று யாரிகட்டிக்கொண்டு ஏன் இருப்பான்...? தூரத்தூர இருந்தால் அண்ணை, அண்ணி என்ற உறவிருக்கும், வேறை வழியில்லை.' கவலை அவன் வார்த்தைகளில் பிரதிபலித்தது.

இந்த முடிவு எதிர்பாராதது. சிவரஞ்சினி சோகப்பெருமூச்சு விட்டாள். எல்லாமே அவளை மிஞ்சியவை, அவள் என்ன செய்வாள்....?

ஒருவகையில் ரமணன் எடுத்த முடிவு சரிபோலப்பட்டது. ஒரு இடத்திலேயே இருந்து சகோதரங்கள் சண்டை பிடித்து, அடுத்தவர்களின் பல்லுக்குப் பதமாக, சிரிப்புக்கிடமாக இருப்பதை விட, தூரத்தூர இருந்தால் அருமைபெருமை இருக்கும்.

மறுபக்கம், அவசரத்துக்கு வந்து போக முடியாத தூரத்தில்;, அவர் ஒரு நாட்டிலே, இவர் ஒரு நாட்டிலே என்றிருந்தால் வசதியாக இருக்கிறார்கள் என்ற பெயரேயொழிய, மனம்விட்டுக் கதைக்க சகோதரங்கள் பக்கத்தில் இருப்பது போல வருமா?

தாய் நாட்டிலிருந்து அந்நியநாடு ஒன்றுக்கு வந்து அங்கும் நிம்மதியின்றி, இன்னோரு அந்நிய நாட்டுக்கு இடம் பெயர்வது... மேலும் ஒரு பிரிவுத்துயர் இதயத்தை வாட்டாதா....!

'ஒரு அந்தரம் அவசரத்துக்கு தம்பிவீடு என்று ஓடிப்போகலாம், அவன் இலண்டனுக்கு இருக்கப் போனால் யாரிடம் போவது? இந்தக் குட்டி விஸ்ணு   மாமி... மாமி என்று கொஞ்சுவான், இவனைப் பார்க்க நான் இனி இலண்டனுக்கெல்லோ போகவேணும்!

இந்த நாட்டிலேயே எனக்கு இருக்க ஒரு ஒழுங்கான விசா இல்லை, பிறகு இலண்டனுக்குப் போக விசாவுக்கு நான் எங்கை போறது...?' சிவரஞ்சினியின் மனம் தவித்தது.

'வேண்டாம் தம்பி... கொஞ்சம் பொறுமையா இரடா!' அன்பு மிகுதியால் தடுத்தாள் அவள்.

'வீடெல்லாம் ஒழுங்கு செய்தாச்சு, நாலைந்து மாசத்திலை போயிடுவம். அண்ணையும் அண்ணியும் எங்களாலை சண்டை பிடிக்கினம்.... அதுதான் நாங்கள் ஒரு முடிவு எடுத்திட்டம். அக்கா, நீங்கள் வர விருப்பமென்றால் வாங்கோ... அதுக்கு நான் ஒழுங்கு செய்யிறன்!' சொல்லிவிட்டு ரமணன்;, மனைவி மகனுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்.
அவர்களைப் பார்த்தபடி, உள்ளத்தில் வேதனை உலுப்ப, தலையைத் தொங்கப் போட்டபடி இருந்த குமரனை,
'என்னடா தம்பி செய்யிறது? இவன் இப்பிடிச் சொல்லிப்போட்டுப் போறான். அக்கா, தம்பியவை ஒரு இடத்திலை இருக்கினம் என்று மனம் எவ்வளவு ஆறுதலாக இருந்தது. அண்ணையும் அண்ணியும் தங்களாலை சண்டை போடவேண்டாமென்று அவன் இப்படியொரு அதிரடி முடிவெடுத்திட்டான். ஏதாவது சொல்லிக்;கில்லி மறிக்க முடியாதேடா தம்பி....?' என்று கலக்கத்துடன் கவலை நெஞ்சையடைக்கக் கேட்டாள் சிவரஞ்சினி.

'எல்லாம் என்ரை பிழை.... மாலதியைத் தெரியும்தானே! அவள் திருந்தப்போவதில்லை. தம்பியும் மச்சாளும் எவ்வளவு விட்டுக் கொடுத்தும் இவள் யாரிபிடிச்;சு அதுகளை வாயிலை வந்தபடி ஏசிக்கொண்டு நிற்கிறாள். என்ன செய்யிறது...? அவளாலை தான் எல்லாப்பிரச்சனையும்... இதை விளங்கிறாள் இல்லை.' இயலாமை குரலில் ஒலிக்கக் கூறினான் குமரன்.

அப்போ மாலதி வரும்; காலடி கேட்டது.
'படை போட்டுதா...?' கிண்டலாகக் கேட்டபடி வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.

'படை போயிட்டுது... ஒரேயடியாகப் போயிட்டுது!' குமரனின் குரலில் கொதிப்புத் தொனித்தது.

'என்ன ஒரேயடியாப் போயிட்டுது...? கேட்டால் பதிலைச் சொல்லுங்கோவன்!'

'ரமணனும் பூவிழியும் இலண்டனுக்குப் போகப் போயினமாம், இனி உனக்குச் சந்தோசம்தானே!'

மாலதி சிரித்தாள்.
'இலண்டனுக்கு....! இவை சும்மா வெடிச்சிட்டுப் போயினம், அக்காவும் தம்பியும் இருந்து அழுதுகொண்டிருக்கிறீங்கள்.' அவள் நம்பவில்லை.



  23


 ஒரு நாள்........

சிலநாட்களாக உடல்  மிகவும் அசதியாக இருந்ததால் சிவரஞ்சினி பெண்டாக்டரிடம் போனாள்.
வைத்தியர் பரிசோதித்த விதம் அவளை யோசிக்க வைத்தது.
வழக்கமாக இரண்டு நிமிடங்களில் சிரித்துக்கொண்டு மருந்து எழுதும்; அவர், இன்று சீரியஸாக, நேரத்தையும் நோக்காது சோதனையிட்டபின் சொன்ன பதில், சிவரஞ்சினிக்கு எரிமலை வெடித்தது போலிருந்தது.

'அவள் ஒரு குழுந்தைக்குத் தாயாகப் போகிறாளாம்!' டாக்டர் கைகொடுத்து வாழ்த்தினார்.

அவள் தீயில் மிதித்தவள் போல, பதைப்புடன் நின்றாள்.

'என்ன நடந்தது....?  அன்று சுகுமாரன் வந்தது.... தேநீர் குடித்தது... அதற்குப்;பின்; என்ன நடந்தது என்று தெரியாத நிலை படுக்கைக்குப் போனதே தெரியாமல்;; படுக்கையில் படுத்திருந்தது எல்லாம் தொடராக அவள் மனக்கண்முன் ஓட.... என்ன செய்வதென்று அறியாதவளாக வீட்டுக்குத் திரும்பினாள்.

அவள் நினைக்காமலே அவளது இதயம் வெடித்து அழுதது.
'ஐயோ பாவி! நம்பிக்கைத்துரோகம் செய்து போட்டியேடா... பாவம் என்று அனுதாபம் காட்டியதுக்கு, கையைக் கட்டிக் கிணற்றுக்குள் தள்ளியது மாதிரி வாழ்க்கையையே கெடுத்துப் போட்டியே துரோகி!'
யாருக்குச் சொல்லியழ...? அவளுக்கு யார் இருக்கினம்...? பெயருக்கு இரண்டு தம்பிகள்... இருந்தும் இல்லாதது போல அவர்கள் உறவு!

கடவுள்மீது அவளுக்குக் கோபம்; கோபமாக வந்தது.
'எத்தனை விரதங்கள் இருந்திருப்பேன், உன்மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தது. என்னை நீ சோதிச்சால் பொறுத்;து இருப்பேன்... சித்திரவதை செய்தால் தாங்கியிருப்பேன்... மான பங்கப்பட வைத்திட்டாயே! தலை நிமிர முடியாமல் இப்படியொரு அடியடிச்சு என்னை முடமாக்கிப் போட்டியே....!'
சும்மாவே மச்;சாள்காரி வாழாவெட்டி என்று தூற்றிக்கொண்;டு இருக்கிறாள்... இதை அறிந்தால்....!

சிவரஞ்சினியால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இது வெளியே தெரிய வந்தால் என்னை உயிரோடு பார்க்க முடியாது.

அவள் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வான் ஒன்று பக்கத்தில் வந்து நின்றது. சிவரஞ்சினி பயந்து போனாள்.

கண்ணாடியை இறக்கி, 'வாவன் தங்கச்சி!' என்றார் தாமோதரன்.

பக்கத்திலிருந்த அவர்  மனைவி நீலா, 'ஏறும், என்ன யோசிக்கிறீர்?' என்று உற்சாகமுடன் அழைத்தாள்.

மறுக்கமுடியவில்லை... அதில் ஏறிக் கொண்டாள் அவள்.

'வீட்டுக்கு வந்திட்டுப்போம்!' ஒரே பிடியில் நின்றுகொண்டார்கள் தாமோதரனும் நீலாவும்.
தேநீர் உபசாரமும் பலவித உரையாடல்களும் நடந்தன.

சிவரஞ்சினி கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள். எப்போ வீட்டுகுப் போய்க்குளறி அழலாமென்று அவள் மனம் அரித்தது.

தாமோதரன் சொன்னார்,
'மாட்டன் என்று சொல்லாதை தங்கச்சி...!' என்று ஆரம்பித்து, அவள் கலியாணவிடயத்துக்குச் சட்டென்று வந்தார்.

'தொண்டர் நல்ல மனுசன், வயது கொஞ்சம் கூடவென்று யோசிக்காதை... அவனுக்கு ஒரு குறையுமில்லை, படிச்சவன்... தெரிந்திருக்கும்... நீயும் படிச்சவள்... நல்ல பொருத்தம், ஓமென்று சொல்லு! நான் மற்ற ஒழுங்கெல்லாத்தையும் செய்யிறன்!'

சிவரஞ்சினி கண்களை வெட்டாமல் அவர்கள் இருவரையும் நோக்கினாள். கண்களிலிருந்து மெல்லியதாகக் கண்ணீர் தழும்பியது.

'ஒன்றுக்கும் யோசிக்காதை, ஓம் என்று சொல்லு! நாங்கள் இருக்கிறம்.' உறுதிமொழி போல வந்த நீலாவின் வார்த்தைகள் அலைகடலில் தவிப்பவனுக்குக் கிடைத்த தெப்பம்போல இருந்தது.

'ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்கிறீங்களா...!'

'ஏன் தங்கச்சி எங்களிலை நம்பிக்கை இல்லையா?'

'உங்களிலை நம்பிக்கையிருக்கு! ஆனால் என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியாதே...... என்னை எப்பிடி நீங்கள் நம்புவீங்கள்?'

'உன் கண்களே உன்னை யார் என்று காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஜேர்மனிக்கு வாழலாமென்று வந்து ஏமாந்து போனவள் நீ... இதுவரை உன்னைப் பலர் ஏமாற்றிவிட்டார்கள்.
உன் தம்பிகள், உன் மச்சாள்மார், கலியாணம் பேச வருபவர்கள் என்று பலரிடம் நீ ஏமாந்திருக்கிறாய்... ஆனால் நீ யாரையும் ஏமாற்றவில்லை.' நம்பிக்கை தொனிக்க வந்த தாமோதரத்தின் வார்த்தைகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமற் திண்டாடினாள் சிவரஞ்சினி.

'சட்டென்று மாட்;டன் என்று சொல்கிற விடயத்துக்கு, அப்படிச் சொல்லாமல் ஏதேதோ சொல்லிச் சம்மதிப்பது போலல்லவா கதைத்துக்கொண்டிருக்கிறாய்!' அவள் மனம் சுட்டிக்காட்டியும் அவளது நா மறுத்துரைக்க எழவில்லை.

பனி சறுக்கிப் பள்ளத்தில் இறங்கிய பஸ்வண்டிபோல, அவள் சிந்தனைகள் ஸ்தம்பித்துப்போய் நின்றன.

'ஒருத்தருக்கும் ஒன்றும் சொல்லவேண்டாம், எல்லாம் நான் பார்க்கிறன்.'
ஒரு தகப்பன் வாயிலிருந்து பிறக்கும் ஆணித்தரமான உறுதி மொழிபோல வந்தன அந்த வார்த்தைகள்.

பிள்ளை வேண்டுமென்று எத்தனையோ பேர் தவம் இருக்குதுகள் இங்கை நான் நினைச்சே பார்க்கவில்லை, குந்திதேவிக்குச் சூரியன் வந்து கொடுத்தது போல... எனக்கும் ஒரு கர்னன் வயிற்றுக்குள்... மூடி மறைக்க இதுவென்ன சடாமின் ஆயுதமே...
அவள் மௌனம் சம்மதம் என்றாகிவிட்டது.

தாமோதரனும் நீலாவும் சிவரஞ்சினியை அவள் வீட்டுக்குத் தங்கள் வானிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டார்கள்.
அவள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இயந்திரம் போல இருந்தாள்.

என்னடா வாழ்க்கை இது.. ஒரு விடயம் மனநிம்மதிக்குப் பகிர்ந்து கொள்ள ஒரு மனிதஉறவு கிடைக்கவில்லை... பென்னாம்பெரிய உலகமிது, மனம் விட்டுக் கதைக்க ஒரு மனிசர் இல்லை.

வாயாலே சொல்லக்கூடிய விசயமா இது? போதாததுக்கு பாவி செத்தும் போனான். சிவரஞ்சினி தனக்குள் நாட்கணக்காகப் போராடினாள்.


24

சிவரஞ்சினிக்குக் கடிதம் ஒன்று வெளிநாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.
'விசா தரமுடியாது, மூன்று மாதத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும்.'
கடிதத்தைப் படித்துவிட்டு, குமரனுக்குக் காட்டினாள்.

'இனி என்ன செய்யிறது....? லோயரும் கைவிரிச்சுப் போட்டார். எவ்வளவு காசைச் சுளைசுளையா வாங்கிப்போட்டு, இப்ப முடியாது... மன்னிச்சுக்கொள்! என்கிறார்...' இயலாமை குமரனின் குரலில் தெரிந்தது.

'கலியாணம் கட்டினால்...!' சிவரஞ்சினியின் கேள்விக்கு மாலதி சிரித்தாள்.
குமரன் தமக்கையின் கேள்வியின் அர்த்தம் புரியாது விழித்தான்.

'கலியாணம் என்ன கடையிலை வாங்கிற முட்டைப்பெட்டியே..!' நளினம்படச் சொன்னாள் மாலதி.

'அக்கா, நீங்கள் ஊருக்குப் போனால் உங்கடை ரீச்சர்வேலை திருப்பி எடுக்கலாமென்று தானே சொன்னனீங்கள்!'

'ஏன் கேட்கிறாய்...?' புரிந்துகொண்டும் புரியாதவள் போல சிவரஞ்சினி தம்பியைப் பார்த்தாள்.

'விசா முடிஞ்ச நிறையப்பேரை அனுப்பிக் கொண்டிருக்கிறாங்கள். அதுதான் திடீரென்று பொலிஸ் வந்து பிடிச்சுக்கொண்டு போய் உடனை சிறலங்காவுக்குப் பிளேன் ஏற்றிப் போடுவாங்கள்! அங்கை உங்களுக்கு வேலை கிடைக்குமென்றால் ஓரளவுக்குச் சமாளிக்கலாம்தானே!'

தம்பியின் உள்ளக்கருத்து, அவள் எண்ணத்தை முடிவு செய்யப் பெரும் துணையாக இருந்தது.

அக்கா இருந்தாலென்ன, போனாலென்ன என்ற நிலையில்தான் தம்பி குமரன் இருக்கிறான்... அக்கா போயிட்டாள் என்று பெரிதாகக் கவலைப்படமாட்டான்.
மருமக்கள் சிறியவர்கள்.. கொஞ்சநாளைக்குத் தேடுவார்கள்... பிறகு மறந்து போய்விடுவார்கள். மாலதி ஏற்கனவே யாரிகட்டுகிற விரோதி... அவளுக்கு வீட்டைவிட்டுப் போனாலே பீடை ஒழிந்தது என்று குதூகலிப்பாள்.

இதுதான் உலகமென்று மனதுக்குள் சோகத்தை விழுங்கியவாறு தன் அறைக்குட் சென்றாள்.

25

அன்று கண்ணனும் மனைவி வேணியும் பொழுதுபோக்காகக் குமரன் வீட்டுக்கு வந்தார்கள். ஏதோ டொச் படிக்கப் போன போது மாலதியும் வேணியும் அறிமுகமாகியிருந்தார்கள். அந்தப் பழக்கத்தில் ஆரம்பித்த புதுச்சிநேகிதம்.

தேநீர் குடித்து, கதைத்துவிட்டுப் போக வந்தவர்கள், இரவுச் சாப்பாட்டுக்கும்; நின்றார்கள். விருந்தினர்கள் வந்தநேரம் அறைக்குள் அடைபட்டிருப்பது பண்பாடில்லை என்று சிவரஞ்சினி வெளியே வந்து, சமையல்; செய்ய மாலதிக்குக் கூடமாட உதவி புரிந்தாள். அங்கு வேணியும் நின்றாள்.

ஹோலுக்குள் குமரனும் கண்ணனும் பியர் அருந்தியவாறு, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த உதைபந்தாட்டப் பொட்டியைப் பார்ப்பதும் கதைப்பதுமாகப் பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

சமையலறைக்குள் சிவரஞ்சினி இடியப்பம் பிழிந்தாள். மாலதி குளிரூட்டிக்குள் இறுகிப் போயிருந்த ஆட்;டிறைச்சியை இளகவைக்க சுடுநீரூற்றி, குளிரக்குளிர வெட்டிக்கொண்டிருந்தாள்.

'சமரன் இப்ப எந்த ஸ்கூல்...?' விடுப்பு விசாரித்தாள் வேணி.

மாலதி மகன் படிக்கும் பாடசாலையின் பெயரைச் சொன்னாள்.

'கிம்னாசியத்துக்கு விடேல்லையோ...?' கேட்டாள் வேணி.

'ம்...ம்...' என்று தலையாட்டினாள் மாலதி.

'ஏன் சமரனுக்குப் படிப்பு ஓடாதே? கிப்னாசியம் போனால்தானே மேற்படிப்பு படிக்க விடுவினம்... இல்லாட்டி சும்மா ஏதும் வேலைக்குத்தானே படிக்கலாம்.'

வேணியின் கதைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,
'என்ரை பிள்ளை நாலாம் வகுப்;புப் படித்;துப்  பாஸ்பண்ணி ஐந்தாம் வகுப்புக்குப் போகிறான். இவவின்ரை பிள்ளை பள்ளிக்கூடம் போக ரலன்ற் போதாது என்று ஸ்கூல்; கின்டர்காடின் போய்க் கொண்டிருக்கிறாள்...!' என்று மனதுக்குள் முறுகினாள் மாலதி.

அப்போ சிவரஞ்சினி வேணியின் கூற்றை மறுத்துரைத்தாள்.
'அவன் கெட்டிக்காரன் என்றதிலைதானே நாலாம் வகுப்புப் பாஸ் பண்ணி ஐந்தாம்வகுப்புக்குப் போகிறான்.  அதோடை  நீங்கள் கிம்னாசியம் பற்றிச் சொன்ன கருத்தும் சரியானதில்லை....'

'நான் சொன்;னது பிழையென்று உங்களுக்கு என்னென்று தெரியும்? நீங்கள் இன்னும் கலியாணமே கட்டேல்லை....!' பகிடியாகச் சிரித்தாள் வேணி.

'கலியாணம் கட்டினால்தான் கல்லூரி விடயங்கள் தெரியவேணுமென்றில்லை வேணி! ஆர்வமிருந்தால் உரிய இடத்திலை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.'

'அதுக்கேன் சிவாக்கா கோவிக்கிறீங்கள்.., நான் சொன்னது பிழை என்றால் மன்னிச்சுக் கொள்ளுங்கோ!'

'பிழையோ, சரியோ என்று தெரியாத விடயத்தைக் கதைக்கப் போகக்கூடாது!'

'எனக்கு இந்த விசயம் ஒன்றும் பெரிசாத் தெரியாது, ஆக்கள் சொன்னதைச் சொல்லுறன்... அதுவும் உங்கடை மச்சாள் பூவிழி அக்கா சொன்னா!' என்று தான் தப்பிக்கொள்ள பூவிழியின் பெயரை அதற்குள் திணித்தாள் வேணி.

'ஆர் பூவிழியோ...?' இறைச்சி வெட்டியதையும் விட்டுக் கேட்டாள் மாலதி.

'ஓ! எனக்குப் பூவிழி சொல்லித்;தான் தெரியும்;.'

'அவளுக்கு என்ரை பிள்ளையைப் பற்றி என்ன கதை.. நாளைக்கு வேலைக்கு வரட்டும், ஒரு கிழி கிழிச்சு விடுகிறன்.' சீறினாள் மாலதி.

'நீங்கள் ஏன் கோவிக்கிறீங்கள் மாலதியக்கா? பள்ளிக்கூட விடயங்கள் பற்றிக் கதைச்சுக்கொண்டு இருக்கேக்கை.. சும்மா கதைச்சது. இதைப் பெரிசுபடுத்தி பூவிழியக்காட்டை விசாரிக்கப் போகாதேங்கோ, பிறகு நான் கோள்மூட்டினனான் என்று அவ என்னோடை கோவிப்பா!' என்று சொன்னாள் வேணி.

சிவரஞ்சினிக்கு இது கவலையாக இருந்தது. இவள் வேணிக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று கோபமும் வந்தது. விசிற்றுக்கு வந்தமாம்... சாப்பிட்டமாம்... போனமாம் என்று இருக்கிறதைவிட்டு, தேவையில்லாத கதை கதைச்சு ஆக்களைக் கொழுவிவிட்டுக் கூத்துப் பார்க்கிறதுக்கென்றே இவள் அலையிறாள் போலக்கிடக்கு! என்று தனக்குள் சினந்தாள்; சிவரஞ்சினி.

அப்போ மாலதி, கத்தியைப் போட்டுவிட்டு கையை அரைகுறை யாகக் கழுவிக்கொண்டு,
'இவருக்குக் குடுக்கிற குடுவையிலை அவள் திருந்துவாள். தம்பி, மச்சாள் என்று பாசம் ஒழுகஒழுக அங்கை ஓடியோடிப் போறவருக்கு இப்பவாவது தெரியட்டும் எவ்வளவு நஞ்சுச் சனங்கள் என்று...!' பொடுபொடுத்துக் கொண்டு ஹோலுக்குள் ஆவேசமாய்ப் போய்க் கத்தினாள்.

குமரன் ஒன்றும் விளங்காமற் திகைத்துப் போய், பியர்கிளாஸை  மேசையில் வைத்துவிட்டு, மனைவியைப் பார்த்தான்.
மாலதி ஒரு முழங்கு முழங்கினாள்.
வீடு அதிர்ந்தது.
'ஆக்கள் இருக்கினம் என்று பார்க்கிறன்... இல்லாட்டி இப்பவே அவள் வீட்டுக்குப் போய் பிடரிப்பிடியிலை கேட்டிருப்பன்.'

குமரன் மௌனமாக இருந்தான். என்ன விடயம் என்றது விளங்கி விட்டது.

மாலதி மீண்டும் சமையலறைக்குள் போய்விட்டாள்.
தலையையாட்டிச் சமாளித்தான் குமரன்.
'ஆள் கொஞ்சம் நெவூஸ்... பட்டென்று உணர்ச்சிவசப்பட்டிடும். என்ன செய்யிறது... தம்பியையும் மனிசியையும் கண்ணிலை காட்டக்கூடாது. இப்ப உங்கடை அவ ஏதோ அவையின்ரை கதையை இவ காதிலை போட்டிருக்கிறா என்று நினைக்கிறன், அதுதான் புண்ணிலை புளி பட்டதுபோல எரிஞ்சுகொண்டு வந்திருக்கிறா, இனி இதிலை ஒருமுடிவு கண்டுதான் ஆள் ஓயும்.'

'சிம்பிளாச் சொல்லிப்போட்டு இருக்கிறீங்கள்.. இப்பிடி விடக்கூடாது.. சொந்தபந்தமெல்லாத்தையும் தொலைச்சுப்போடும்!'

'என்ன செய்ய....? நான் என்ற அகம்பாவம்... சொன்னது செய்ய வேணும். வாய் திறந்தால் அதுதான் சட்டம்.'

'என்ன குமரன் விட்டிட்டு இருக்கிறீங்கள், கொஞ்சம் கட்டுப் படுத்துங்கோ! இல்லாட்டி பிள்ளையள், குடும்பம் எல்லாமே குழப்பத்திலை போய் முடியும்!'

'என்ரை காலம்... கண்டவன் நிண்டவன் எல்லாம் எனக்குப் புத்தி சொல்லுறான், இது தேவைதான்!' என்று அலுத்துக் கொண்டான் குமரன்.

'எதிர்த்துக் கதைச்சால் வெளியிலை போ என்கிறாள்.'

'போ! போய்ப்பார்! இரண்டு நாளிலை அடங்கி ஆள் வரும்.'

'நான் தான் போவனேயொழிய, அவள் வராள்!'

'என்னப்பா ஆம்பிளை நீங்கள்;?'

'என்ன செய்யச் சொல்லுறீங்கள் கண்ணன்? உழைக்கிறாள்.. வீடு தன்ரை என்கிறாள்... பிள்ளையள் தன்ரை என்கிறாள்.. கதைக்கப் போனால் சண்டை...!'

'எல்லாத்தையும்; வைச்சிருக்கட்டும், நீங்கள் போங்கோ! அவ சொல்லுறா தானே போகச்சொல்லி.. போங்கோ, என்ன நடக்குது என்று பாருங்கோவன்!'

'குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்கிறீங்களா?'

'எந்தக் குடும்பத்தை...? இதையெல்லாம் குடும்பம் என்று சொல்லுறீங்களோ...? இல்லைக் குமரன்... குடும்பம் என்றால் அங்கை ஒரு குதூகலம் இருக்கவேணும்... இல்லாட்டி அர்த்தம்; இல்லை. ஒருத்தரை ஒருத்தர் மிரட்டி வாழ்க்கை நடத்தேலுமே?'

'கதைக்கலாம் கண்ணன், ஆனால்... நடைமுறைக்குச் சரிவராது. என்ரை நிலைமையைப் பாருங்கோ! வாழ்வு இழந்த அக்கா ஒருத்தி வீட்டுக்கை இருக்கிறா. புது வீடு... கண்ணை மூடிக் கொண்டு வாங்கியாச்சு, அதுக்கு மாதம்மாதம்  கடன்காசு வைச்சான் வைச்சபடி வங்கிக்குக் கட்டவேணும், மூன்று பிள்ளைகளும் படிக்குதுகள்! செலவுகளைப் பாருங்கோ... நீங்கள் சொல்லுற மாதிரி, மனிசியை வழிக்குக் கொண்டு வரலாமென்று விட்டு, நான் வெளியே போனால் இதையெல்லாம் ஆர் பார்க்கிறது...? எல்லாம் தொலைந்து போகும்!'

'போகட்டும்... இப்ப என்ன?'

'இரண்டு போத்தில் பியர் குடிக்கேல்லை... அதுக்குள்ளை வெறிகாரன் மாதிரி உளறுகிறீங்கள்!'

'இல்லை குமரன், உண்மையாத்தான் சொல்லுறன், ஒன்றின் பெறுமதி தெரியாமற் தூக்கி எறியிறவைக்கு, அது இல்லை என்று உணரும்போதுதான் அதனுடைய அருமை தெரியும்.'

'நான் இல்லாவிட்டாலும் அவள் சமாளிப்பாள்.'

'சமாளிக்கிறது வேறை... தேவையில்லை என்கிறது வேறை... குடும்பத்திலை ஒருவரில்லாட்டி ஒருவர் வீட்டு அலுவல்களைக் கவனிக்கிறது சரி, ஆனால் சிங்கம் மாதிரி நீங்கள் வீட்டிலை இருக்கும்போது, கழுதை நீ கிடந்தாலென்ன... போனாலென்ன... என்று மதியாமல் நடக்கக்கூடாது.'

'அதுக்கு ஒன்றும் செய்யேலாது கண்ணன்! அப்பிடிச் செல்லமா தகப்பன் அவளை வளர்த்திட்டார்.'

'தகப்பன் விடுகிற பிழையைத்தானே நீங்களும் விடுகிறீங்கள், நீங்கள் திருந்துங்கோ.. அவ தானாகவே திருந்துவா!'

'நான் என்னத்தைத் திருந்த...? சரியாத்தானே நடக்கிறன்!'
அப்போ,
'சாப்பிட வாங்கோ!' என்று சிவரஞ்சினி அழைத்தாள். உரையாடல் அத்துடன் முடிந்தது. இருவரும் எழுந்து சாப்பிடச் சமையலறைக்குச் சென்றார்கள்.


26

நாளாக நாளாக சிவரஞ்சினிக்கு யோசனை வலுத்தது.
'என்ன செய்யிறது?' என்று கேள்விக்குறியே ஓடும் ஒவ்வொரு பொழுதும் ஒலித்தது.
நெருப்பின் மேல் நிற்பவள் போல் அவள் மனம் வெந்து தவித்தது.
வேண்டாத தெய்வங்கள் இல்லை.
'காப்பாற்று!' என்று கடவுளை இறைஞ்சியது அவள் மனம்.

பொழுதுபட்டாலும் சரி, பொழுதுவிடிந்தாலும் சரி அவளுக்கு எதிர்காலம் சூனியமாகவே தெரிந்தது.

வயிற்றிலே குத்திக்கொண்டு, 'இது அழியக்கூடாதா' என்று கத்துவாள்.
'என்னை மாதிரி ஏமாளிகளை ஏனப்;பா படைத்துச் சித்தரவதைப் படவைக்கிறாய்? எத்தனைபேர்  எத்தனை விதமாக வாழ்கிறார்கள்... ஒழுங்காக வாழவேண்டும்... கட்டுப்பாடாக இருக்க வேண்டும்... என்று பழிக்கு அஞ்சி வாழும் எனக்கேன் தெய்வமே இப்படியொரு கொடிய தண்டனை...?'

அப்போ, கதவைத் திறந்து கொண்டு, 'அக்கா!' என்றான் குமரன்.
கண்ணீரைப் போர்வையால் மறைத்துக்கொண்டு, அடைத்த குரலில், 'என்ன தம்பி?' என்று பதில் கொடுத்தாள்.

'எழும்புங்கோவன்...! என்ன சுகமில்லையோ...'

'இல்லை, எழும்பி என்ன செய்யிறதென்று படுத்திருக்கிறன்!'

'வாங்கோ, மாலதி தேத்தண்ணி போடுறாள்'

சிவரஞ்சினி மறுக்கவில்லை. தம்பி அன்பாகக் கேட்கிறான் என்று கட்டிலைவிட்டெழுந்து முகத்தைச் சரிபண்ணிக் கொண்டு வெளியே வந்தாள்.
'என்ன முகமெல்லாம் வீங்கிப்போய்க்கிடக்கு!' கேட்டாள் மாலதி.

'இலேசான தலையிடி!' ஒழித்தாள் சிவரஞ்சினி.

தேநீர் குடிக்கும்போது....
மாலதி தான் கேள்விப்பட்டதை சிவரஞ்சினியிடம் கேட்டாள்.
'கலியாணம் பேசி முடிச்சாச்சாம்... வீட்டுக்கை இருக்கிற எங்களுக்குச் சொல்லேல்லை...!'

'உண்மையா அக்கா...!' குமரனும் கேட்டான்.

'ம்!' என்று தலையாட்டி ஒத்துக்கொண்டாள் சிவரஞ்சினி.

'பிடிக்கேல்லையா... அதுதான் அறைக்குள் இருந்து அழுகிறீங்களா?' கேட்டான் குமரன்.

'இல்லாட்டி எங்களுக்கு எப்பிடிச் சொல்லுறது என்று யோசிச்சு அழுகிறீங்களோ?' இது மாலதியின் குரல்.

'எல்லாந்தான்... நான் பிறந்ததிலும் அர்த்தமில்லை, வாழ்ந்ததிலும் அர்த்தமில்லை... அதுதான் என்ன செய்யலாமென்று மனம் அழுகிறது.'

'அக்கா!' ஆதரவுடன் அழைத்தான் குமரன்.

'நீங்களெல்லாம் ஒரே பிஸி... உங்களுக்கு ஏன் தொல்லை கொடுப்பான் என்றுதான் இந்தக் கலியாணப் பேச்சுக்கு ஓம் என்றனான்.
ஒரு வயதுக்கு மேலை பொம்;பிளை வீட்டுக்கை இருந்தால் அது குடும்பத்துக்கப் பாரமாகிவிடும். பெற்றவைக்கும் சகோதரங்களுக்கும்தான் ஒரு சுமையாகத் தெரியும். சொந்தக்காலில் நின்றால், கௌரவமாக வாழ்ந்தால் சுமை தெரியாது. ஆனால் நான் இந்த உலகத்துக்கே ஒரு சுமைதானே.' சிவரஞ்சினியின் கண்கள் கலங்கின.

'இதுக்கெல்லாம் ஏன் கண்கலங்குகிறீங்கள்? உங்களை நாங்கள் சுமை என்று நினைச்சதுமில்லை, இப்ப நீங்கள் விரும்பிக் கல்யாணம் செய்யச் சம்மதிக்கும்போது நாங்கள் தடுக்கவும்  இல்லை.' சொன்னாள் மாலதி.

'தொண்டரா...!' கேட்டான் குமரன்.

'தாமோதரமண்ணை புறோக்கராம்... எல்லாம் கேள்விப்பட்டம்.' சொன்னாள் மாலதி.
தலையை ஆட்டி, முகத்தில் ஒரு சிரிப்பை விரித்து, இமைகளை ஒருதரம் வெட்டி, நீங்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக் கொண்ட சிவரஞ்சினி,
'ரமணன் இலண்டனுக்கு மாறுவதற்கிடையில் கல்யாணத்தை வைக்கலாம் என்று நினைச்சன்!' என்றாள்.

'கல்யாணச்செலவு...!' இழுத்தாள் மாலதி.

'அம்மன்கோயிலிலை சுருக்கமாக நடக்கும், செலவு பெரிதாக வராது... அவரே பொறுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

'அது எங்களுக்கு அவமானமெல்லோ...!' என்ற மாலதியின் குரலில் கர்வம் ஒலித்தது.

'நாங்கள் செலவை ஏற்கிறம்.' சொன்னான் குமரன்.

'நான் வேண்டாமென்று சொல்லேல்லை... வசதியெண்டாத் தாங்கோ!' விரோதிக்க விரும்பாமல் சம்மதித்தாள் சிவரஞ்சினி.

27

அன்று தமிழ்ப்பள்ளிக்கூடம் முடிந்து பிள்ளைகள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். தம்பி குமரனின் பிள்;ளைகளைக் கூட்டிப் போக சிவரஞ்சினி வந்திருந்தாள்.
தொண்டர் வகுப்பறைகளைக் கவனித்து ஒழுங்கு செய்து கதவுகளைப் பூட்டிவிட்டு பைல்கள் அடங்கிய கைப்பையுடன் வெளியே வந்துகொண்டிருந்தார்.

அன்றொருநாள் போல கண்டும் காணாததும் மாதிரியில்லாமல் இன்று அவருடன் கதைக்கும் முடிவுடன்  தாமதித்தாள் சிவரஞ்சினி.
பிள்ளைகள் முன்னாற் போய்க்கொண்டிருந்தார்கள்.
'வணக்கம்'

'வணக்கம், அண்டைக்குக் காணாதது மாதிரிப் போனீங்கள்.. கோபமா?' கேட்டார் தொண்டர்.

'இல்லை, உங்களோடு கோபிக்க யாருக்குத்தான் மனம் வரும்?'

'நானும் மனுசன்தானே, ஏதும் பிழை விட்டேனோ என்று யோசித்தன்!'

'நீங்கள் ஒரு பிழையும் விடேல்லை... என்னுடைய கவலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன.

'உங்களுக்கு என்ன கவலை?'

'நான் பிறந்திருக்கவே கூடாதென்று நினைக்குமளவுக்கு இருக்கு!'

அவள் பதில் கேட்டு, அவளை இரக்கத்துடன் பார்த்த தொண்டர்,
'கவலைகள் மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சொந்தம்தான்... ஆனால் அவற்றைத் நாம் நிலைக்கவிடக்கூடாது. வீட்டுக்குள் இருள் சூழ்ந்தால் விளக்கேற்றி அகற்றுவதுபோல, நெஞ்சுக்குள் கவலைகள் புகுந்தால் கடவுளைத் துதிக்க அவை அகலும்.' என்றார்.

'கடவுளை நம்புகிறவைக்குத்தான் கவலைகள் பெருகும்!'

'அப்டியா...'
அவள் சோகத்தைப் புரிந்து கொண்டதால் அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு,
'தாமோதரமண்ணை வந்திருந்தாரா...!' கேட்டார்.

சிவரஞ்சினி அவரைப் பார்த்து, நாணம் முகத்தில் கொடிவிட, இதழ்கள் சற்று நெழிய, நெஞ்சில் இன்பஅடி படபடக்க கண்களால் அவர் வந்ததைச் சொன்னாள்.

'நீங்கள் என்ன சொன்னனீங்கள்?' ஆவலுடன் கேட்டார் தொண்டர்.

'என்ன சொல்லுவன் என்று  நீங்கள் விரும்புகிறீங்கள்!'

'ஓம் என்று சொன்னால் இருவருக்குமே நல்லது என்பது என் விருப்பம்!'

'நானும் அப்படித்தான் நினைத்து ஓம் என்று சொல்லிவிட்டன்... ஆனால் அது சரிவராது போலக் கிடக்கு!' சொன்னாள் அவள்.

தொண்டர் முகத்தில் ஒரு ஏமாற்றநிழல் கௌவியதைச் சிவரஞ்சினியால் காணமுடிந்தது.

'உமக்கு விருப்பமில்லாவிட்டால் நான் கட்டாயப்படுத்தேல்லை... நான் கல்யாணவயதைத் தாண்டியவன்... என் வயதுக்கு மீறியது இது.' என்ற தொண்டரின் வாயைத் தன் கையால் பொத்தித் தடுக்க முனைந்தாள்; சிவரஞ்சினி.

யாரும் பார்த்தால் தப்பாக எடை போடுவார்கள் என்பதையும் மறந்து அவள் அப்படிச் செய்துவிட்டாள்.

அவள் உள்ளங்கை அவர் நாசி, இதழ்கள், நாடி என்பவற்றைத் தொட்டு நழுவின.
ஒருகணம் அவள் உள்ளத்தின் அணைப்;பை அக்கரம் அவருக்குத் தந்தது.
'சொறி!' என்ற அவள் மேலும் தொடர்ந்தாள்.

'உங்களுக்கு நான் தகுதியில்லாதவள்;!'

'ஏன்... நீர் ஒரு மகாலட்சுமி!'

'இல்லை....'

'பழையதை நினைத்து வீணாக மனதை ஏன் குழப்புறீர்?'

'பழையது ஒருபக்கம்... புதியது இன்னொருபக்கம்...' என்று பாதியில் விழுங்கினாள் சிவரஞ்சினி.

'விளங்கேல்லை..' கேள்விக்குறி முகத்திற் படரக் கேட்டார் அவர்.

'ஒழிப்பதற்கு முடியாது... ஒரு நல்ல மனிதரை ஏமாற்றி, மூடி மறைத்து, திருமணம் செய்தால் அது பாவம்... கடவுளே கோவிப்பார்' என்று மனதுக்குள் முடிவு செய்தவள், சுகுமார் தனக்கிழைத்த கேட்டிலிருந்து, டாக்டர் சொன்ன பதில்வரை சுருக்கமாகச் சொன்னாள்.

கார் நிறுத்தியிருந்த இடத்தை அண்மித்துவிட்டார்கள்.
'காரிலை வாங்கோ! நான் கூட்டிக்கொண்டு போறன்!'

அவள் மறுக்கவில்லை.
தொண்டர்  கதவைத் திறக்க, சிவரஞ்சினியும் மருமக்களும் ஏறினார்கள்.

'இது யாருக்குமே தெரியாதா...?' கேட்டார் தொண்டர்.
'
இல்லை' என்று தலையாட்டினாள் அவள்.

'அப்படியே இருக்கட்;டும், மற்றது தொடரட்டும்!' என்றார் அவர்.

விளங்காமல் விழித்தாள் சிவரஞ்சினி.

'தாமோதரமண்ணைக்கு நீர் சொன்ன ஓம் பதிலைத் தயவுசெய்து மாற்ற வேண்டாம்.'

'அப்போ... இது...!'

'இது எங்களுடையது...'

தொண்டரின் சொல் தெய்வவாக்காக அவளை மெய்சிலிர்க்க வைத்தது.
அவள் கண்கள் மகாவலிகங்கையாகிப் பாய்ந்தன.
காரை விட்டு இறங்கும்போது,
'என்னை யார் என்று தெரிந்துகொண்டும் நீங்கள் ஓம் என்கிறீங்களா....?'

'உம்மில் எந்தத் தவறும் இல்லையே! பிறகேன் கவலை...அழுகை வேண்டாம்.. துரோகிகளுக்கு நஞ்சைக் கொடுத்துத்தான் தெரியும் தியாகிகளுக்கு அதை விழுங்கி அமிர்தமாக்கவும் தெரியும்!'

'நீங்கள் தெய்வம்!'

'இயல்வது கரவேல்... நான் சொல்லவில்லை, ஒளவைப்பாட்டி ஆத்திசூடியிற் சொன்னது.'

விடைபெற, கார்  நகர்ந்தது.


28

அக்காவுக்குக் திருமணம் பொருந்தியது தம்பிகள் இருவருக்கும் நிம்மதியையும்; சந்தோசத்தையும் கொடுத்தது.
இருவரும் மனைவிமாருடன் காரில் கடைகளுக்குச் சென்று நகை, புடவைகள் வாங்கி, ஐயாவிடம் சென்று சாதகப்பொருத்தமும் பார்த்திருக்கிறார்கள்.

ஆறுமாதங்;கள்  கழித்து திருமணம் வைப்பதுதான் நல்லது என்று ஐயா கூறியிருந்தார்.
திரும்பியவர்கள் குமரன் வீட்டுக்கு நேரே வந்தார்கள்.
சிவரஞ்சினிக்கு தம்பிகள் குடும்பமாக ஒற்றுமையானது பெரு மகிழ்வைக் கொடுத்தது.

பெண்கள் இருவரும் வாங்கி வந்த புடவைகள், நகைகளைத் திறந்து வர்ணிக்கத்தொடங்கினர்.

சிவரஞ்சினிக்கு இவையெல்லாம் ஒரு அற்புதமாக இருந்தது. புற அலங்காரங்களில் ஈடுபடும் மங்கையல்லவே அவள்!
மாலதியும் பூவிழியும் அருகருகே நின்று சகோதரிகள் போல உரையாடிய நிகழ்வு சிங்களமும் தமிழும் கை கோர்த்துக் கொண்டதுபோல் சிவரஞ்சினியின் மனதில் இனித்தது.

அவர்கள் வாங்கி வந்தவற்றை ஆர்வமாக ஏற்றுக்கொண்டது போல் இன்முகத்துடன் இரசித்தாள்.

மாலதி சொன்னாள், 'தொண்டரண்ணாவை ஒரு நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லுங்கோ!

சிவரஞ்சினிக்கு அது மிகச் சந்தோசமாக இருந்தது. குமரனும் ரமணனும்  அவருடன் கதைப்பதில்லை என்ற குறையும் தீர்ந்தது என்று துள்ளியது அவள் நெஞ்சம்.

'ஐயா சொன்னதை அக்காவுக்குச் சொல்லுங்கோவன்!' நினைவு படுத்தினாள் மாலதி.

'என்ன சொன்னவர் ஐயா...?' ஆர்வமாக ஒலித்தது சிவரஞ்சினியின் குரல்.

'ஆறுமாதத்துக்குக் கிரகம் சரியில்லையாம், பிறகு செய்யட்டாம்.' தயங்கியவாறு கூறினான் குமரன்.

சிவரஞ்சினியின் முகம் பார்க்க முடியாதளவுக்குச் சுருங்கிக் கறுத்தது. மனம் நடுங்கித் துடித்தது. கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல வந்தது அவள் குரல்.

'திகதி குறிச்சு கோயிலிலை நடத்த ஒழுங்கெல்லாம் செய்தாச்சு, இனிப்போய்....!' தடுமாறினாள் சிவரஞ்சினி.

'அதிலை என்ன இருக்கு...? திகதியைத்தானே மாற்றச் சொல்லி இருக்கிறார்.. கோயிலுக்கு ரெலிபோன் எடுத்துத் திகதியை மாற்றச்சொல்லிச் சொல்லுங்கோ!' மாலதி நறுக்கென்று கூறி விட்டாள்.

'எதுக்கும் தாமோதரமண்ணையோடை கதைச்சுப்போட்டு, திகதி மாற்றுவது பற்றி முடிவு செய்யலாம்.' அழுகை வரும் கண்களுடன்  தம்பிகளைப் பார்த்தாள் சிவரஞ்சினி.

'தாமோதரமண்ணை என்ன பெரிய கொம்பே? சாதகப்பொருத்தம் சொல்லுறபடிதானே கலியாணம் குறிக்கவேணும்.!' மாலதியின் கூற்றுக்குப் பதில் சொல்லமுடியாமல் மௌனமாகக் கொதித்தாள் சிவரஞ்சினி.

'ஓடிப்போறவர்கள், காதலித்தவர்கள், வெளிநாட்டுச்சனமெல்லாம் சாதகப்பொருத்தம் பார்த்தா குடும்பம் நடத்துகினம்? பண்பாடு, ஒழுங்கு என்று வரையறையாகக் கட்டுக்கோப்புக்குள் வாழ்பவர்களுக்குத்தான் சோதனைகளும் வேதனைகளும்...' மனதின் குமுறல்களைக் கொட்ட வார்த்தைகள் இல்லாமற் துடித்தது அவள் மனம்.

குமரனுக்கு அக்காவின் மனக்குழப்பம் சிறிது விளங்கியது.
'ஏற்கனவே திருமணத்தில் பல தடைகளைச் சந்தித்தவள்... பலரின் அவதூறுகளுக்கு ஆளாகியிருந்தவள்... இப்படியொரு சம்பந்தம் கூடிவந்தவேளை, இதையும் குறித்த நாளை மாற்றிப் பிற்போடச் சொன்னால்.... பிறகென்ன பின்விளைவு வருமோ என்று கலங்குவது சகஜம்தானே' என்று நினைத்தான்.

'அக்கா சொல்லுறபடி கேட்பம்!'
அண்ணன் கூறுவது தம்பிக்கும் சரியாகவேபட்டது. அவனும் சம்மதித்தான். ஆனால் மாலதி உடும்புப்பிடியில் நின்று கொண்டாள்.

'கோவிலுக்கு ரெலிபோன் எடுத்துத் திகதியை மாற்றுங்கோ!' கட்டளையிடுவது போலக் கூறினாள் மாலதி.

'நாங்கள் என்னண்டு சொல்லமுடியும்? ஒழுங்கு செய்தது தாமோதரமண்ணையும் தொண்டரும். இரண்டு பேரிலை ஒராள் தான் சொல்லவேணும்.' தமையனைப் பார்த்துக் கூறினான் ரமணன்.

'பொம்பிளை வீட்டார் நாங்கள் சொல்லலாம்... எடுத்துச் சொல்லுங்கோ!' மாலதியின் குரலில் அதிகாரம் தெரிந்தது.

இதுவரை மனதுக்குள் வெடித்துக்கொண்டிருந்த சிவரஞ்சினி ஒரு முடிவுக்கு வந்தாள். இனி நடப்பது நடக்கட்டும், அற நனைந்தவனுக்குக் கூதலென்ன...குளிரென்ன?
மாலதிக்குச் சொன்னாள். 'திகதி மாற்ற முடியாது.'

'ஏன்...?'

'முடியாதென்று சொல்லுறன், கேளுங்கோவனடா...!'

'முடியாட்டி ஓடிப்போங்கோ! நாங்கள் நின்று ஒழுங்காக் கல்யாணம் நடத்துகிறதென்றால் சாத்திரப்படி திகதியை மாற்றுங்கோ!' மாலதி முடிவாகக் கூறிவிட்டாள்.

'இதுதானோ உங்கடை முடிவும்...? தூக்கி வளர்த்த என்னை நம்பாமற் சாத்திரத்தை நம்புகிறீங்களோ?' தம்பிகள் இருவரையும் பார்த்துக் கேட்டாள் சிவரஞ்சினி.

அவள் தனித்து நின்றாள்.
ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்.

'என்னுடைய முடிவில் மாற்றமில்லை.' சொல்லிவிட்டுத் தன் அறைக்குப் போக நடந்தாள்.

அப்போ குமரன், கெஞ்சுவது போலக் கேட்டான்.
'என்னக்கா, நீங்களும் பிடிவாதமாய்...... ஓரளவாவது விட்டுக் கொடுங்கோவன்!'

'விட்டுக் கொடுங்கோ என்றால் என்னத்தையடா தம்பி விட்டுக் கொடுக்க...?'

கங்கை கரை உடைத்தது போல் அவள் கண்கள் வெடித்து கண்ணீர் பாய, வயிற்றில் அடித்து,
'இதுக்கை வளருகிறது விட்டுக்கொடாதேடா, கல்யாணம் ஆக முன்னே தாயானவள் என்று ஊருக்குப் பறைசாற்றிப் போடுமடா!.' என்றாள்.

தம்பியர் வாயடைத்துப் போய் நின்றார்கள். பூவிழி ஏதும் விளங்காமல் நின்றாள்.

மாலதி கெக்கட்டம் விட்டுச் சிரித்தாள். ஏளனமாக அவள் பார்த்த பார்வையில் குமரனும் ரமணனும் வெட்கத்தில் குறுகிப் போய் நின்றனர்.

'எவ்வளவு பெரிய பூசனிக்காயை உங்கடை அக்கா சோற்றுக்கை மறைக்கப் பார்த்தா... பார்த்தீங்களா... என்ன குடும்பம் இது...சீ!' அவள் கண்களும் வாயும் நெளித்த நெளிப்பு விபரிக்க முடியாதது.

'உங்கடை குடும்பத்துக்கை நான் வந்து விழுந்தனே... ஊர் அறிஞ்சால் வெளியிலை தலை காட்ட முடியாது, எவ்வளவு கெதியா கல்யாணத்தை நடத்த முடியுமோ அவ்வளவு கெதியா நடத்தி முடியுங்கோ! சிக்... கேவலங்கெட்ட பிறப்புகள்!' மாலதியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் விசஅம்புகளாய் சிவரஞ்சினியின் நெஞ்சைக் குத்தின. அவள் காதைப் பொத்திக் கொண்டு தன் அறையை நோக்கி ஓடினாள்.

             

கைத்தொலைபேசியில் தொண்டரின் எண்களை அழுத்தினாள் சிவரஞ்சினி. சோகத்தில் அவள் விரல்கள் சோர்ந்து போய் நின்றன.
'தோழா... தோழா.. தோள் கொடு கொஞ்சம் சாய்ந்துக்கணும்...' என்ற பாடல்வரிகள், காட்டில் தனியாகத் தவிக்கும் மான்போல் நின்ற அவள் மனதில் ஒலித்தன.

மறுமுனையில் தொண்டரின் குரல் கணீரென்று அவள் காதிற்பட,  தவித்த அவளது நெஞ்சில் சற்றுத் தைரியம் ஊற்றெடுத்தது.

அவள் அழுதாள்.... அழுதழுது நடந்ததைச் சொன்னாள்.

'ஓகே...ஓகே... இப்ப என்ன? சேறு பூசிச் சந்திரனை மறைக்க முடியாது. நீர் ஏன் அழுகிறீர்...? நான் இருக்கிறன்! சிவா, தயவுசெய்து அழாமல் நான் சொல்லுறதைக் கேளும்!

கிருஸ்ணபக்தர்களுக்குத் தோல்வியில்லை, கிருஸ்ணபக்தர்களுக்கு எதிரி கிடையாது... யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது... நான் சொல்வதை நம்பும்... சாகிறது ஒருநாள், அதிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது, ஆனால் சாகும்வரை வாழ்ந்து காட்டவேணும்.
மனிதன் மனிதனுக்கு ஆறுதல் சொல்லலாம். ஆனால் மனிதனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாத கண்ணபிரான்தான் உறுதியான ஆதாரம்... அவன் பாதங்களைப் பிடியும்!
கண்ணன் நம்பினோரைக் கைவிடமாட்டான்...நம்பும்!'

தொண்டரின் அன்பும் மனவுறுதியும் கடவுள் நம்பிக்கையும் சிவரஞ்சினியின் மனதுக்குப் பெரும் உறுதுணையாக இருந்தன.

தோழா தோழா தோள் கொடு... என்ற வார்த்தைகளை அவள் உதடுகள் மீண்டும் உச்சரித்தன.

29

கல்யாணநாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
தான் வந்த கடனைத் தம்பி குமரனுக்குத் திருப்பித் தருவதாகக் கூறியதைத் தொண்டரிடம் சிவரஞ்சினி கூறியிருந்தாள்.

மாலதி கடைசி நேரத்தில் கடனைத்தா என்று கழுத்தில் பிடித்தாலும் பிடிப்பாள் என்று அவள் எதிர்பார்த்தாள். இதனால் முன்கூட்டியே தொண்டரிடம் சொல்ல, அவர் குமரன்வீட்டுக்கு ரமணனையும் கூப்பிடும்படியும் இருவருடனும் இதுபற்றிக் கதைத்து ஒரு தீர்வுக்கு வர, தானும் வருவதாகக்  கூறியிருந்தார். அதன்படி ரமணன் குமரன் வீட்டுக்கு வந்திருந்தான்.
தொண்டரும் வந்தார்.

மாலதி கதவைத் திறந்தாள்.
'வாங்கோ!'

தொண்டர் வாசலில் நின்றார்.
மாலதி, 'இந்தாள் ஏன் வெளியே நிக்குது...!' என்று ஒரு பார்வை பார்த்தாள்.

'தங்கச்சி, குமரன் நிக்கிறாரா?' அந்த வார்த்தையின் ஒலிப்பு மாலதியின் நரம்புகளைக் கட்டிப் போட்டது போல இருந்தது.

'கூட்டிக்கொண்டு வாறன்!' என்றவள், உள்ளே ஓடிப் போனாள்.

கதவிடையினூடாகப் பார்த்துக்கொண்டு  நின்ற சிவரஞ்சினிக்கு
மாலதியின் செய்கை திகைப்பில் ஆழ்த்தியது.

பாம்பைப் பாம்பாட்டி கட்டிப் போட்டதை அவள் அறிவாள். ஆனால் மாலதியைக்கூட ஒருவரால் அடக்கமுடியும் என்று அவள் ஒருநாட்கூட நினைத்திருக்கமாட்டாள்.
அவள் கண்முன்னே அது நடந்தது.
குமரனும் ரமணனும் அவசரமாக வாசலுக்கு வந்தார்கள்.
'உள்ளே வாங்கோ!' இன்முகத்துடன் அழைத்தார்கள்.

தொண்டர் சிரித்த முகத்துடன் இருவருக்கும் கைகொடுத்துவிட்டு உள்ளே வந்தார்.
குமரன், 'அக்கா!' என்று சிவரஞ்சினியை அழைத்தான்
அவளும் வெளியே வந்தாள்.
எல்லோரும் சோபாவில் இருந்தார்கள்.
அந்த நேரம்... அந்த வீட்டில் என்றுமே இல்லாத ஒரு அமைதி நிலவியது.

ஆடிய கொடியாய் அங்கலாய்த்து, அலைந்து கொண்டிருந்த சிவரஞ்சினி, ஆதாரம் பற்றிச்சுற்றிப் பிணைந்து உயர்ந்து நிற்கும் ஒரு உணர்வைப் பெற்றாள். அவளுள்ளத்தில் நம்பிக்கை எழுந்து நின்றது.

மாலதி தேநீரும் கேக்கும் எடுத்து வந்தாள்.
தேநீரைக் கையிலெடுத்து நன்றி கூறியபின், வந்த விடயத்தைச் சொல்ல முற்பட்டார் தொண்டர்.

'உங்கடை அக்காவை ஜேர்மனிக்கு நீங்கள் கூப்பிட்ட செலவை நான் தரலாமென்று சொல்லத்தான் வந்தனான். எப்பவேணும் என்று சொல்லுங்கோ! கல்யாணநாளுக்கு முதலே தந்திட வேண்டுமென்பது என் விருப்பம்.'

'இல்லை, இல்லை.. அது எங்கடை கடமை, நாங்கள் வாங்க மாட்டம்!' சொன்னான் ரமணன்.

'நீங்கள் இலண்டனுக்குப் போக இருக்கிறீங்கள்.. உங்கடை கஸ்டம் எனக்குத் தெரியும், குமரனுக்கு வீடு வாங்கின கடன் இருக்கு... நீங்கள் வேறை, நான் வேறை என்று பேதம் பார்க்க வேண்டாம். என்னட்டை இருக்கு... தாறன்! வேண்டாமென்று மறுக்காதேங்கோ!'

'அப்படியென்றால் மூன்றில் ஒன்றைத் தாங்கோ! நானும் தம்பியும் மிச்சத்தைப் பொறுக்கிறம்.' சொன்னான் குமரன்.

மாலதி ஏதும் இசக்குப் பிசக்காய் சொல்லி, தொண்டர் மனதை நோகடித்துவிடுவாளோ என்ற பயம் அவனை இப்படிச் சொல்ல வைத்தது.

அதை ரமணன் அடியோடு மறுத்துவிட்டான்.

'நான் முழுக்கப் பொறுக்கிறன்... ஒரு ஈரோகூட அக்காவின் பயணக்காசு என்று உங்களிட்டை வாங்கமாட்டம்.'

'நீங்கள் ரமணன் இலண்டனுக்குப் போகவெல்லே போறீங்கள், இங்கையிருந்து அங்கை இடம் மாறுகிற செலவிலிருந்து... இனி வேலை கிடைக்கவேணும், வீடு எடுக்க வேணும்... காசு இல்லாமல்; என்ன செய்யப் போறீங்கள்?' நிலைமையைச் சுட்டிக்காட்டினார் தொண்டர்.

'சரி, நான் இலண்டன் போகேல்லை, காசும் தர வேண்டாம், அக்கா சந்தோசமா இருந்தாக்காணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்.' என்றான் ரமணன்.

'அக்கா சந்தோசமா இருப்பா, அவவுக்கு இனி எந்தக் கஸ்டமும் வராது... அவ உங்களைவிட வயதில் மூத்தவ, உங்களுக்குக் கடனாளியாக இருக்க விரும்பேல்லை, இப்ப எந்த எக்கவுண்டில் காசைப் போடுறது என்று சொல்லுங்கோ!' கேட்டார் தொண்டர்.

காசு வாங்குவது முறையல்ல, இந்தாளோ இந்தா பிடி காசை என்று ஒற்றைக்காலில் நிற்குது... என்ன செய்யமுடியும்? பெண்ணையும் ஏற்று, பணத்தையும்; தர இப்படியொரு மனிசன் இருக்கிறான்... நினைத்துப் பார்க்க மயிர்க்கூச்செறிந்தது.

மாலதியின் சுழன்றடிக்கும் சைக்கிள்செயின் நாக்கு எங்கோ ஒரு மூலைக்குட் போய்;ச் சுருண்டுகொண்டது.

கலியாணமாக முன்பே அப்பா, அம்மா ஆக அவசரப்பட்டு விட்டீங்களே... இதுதானா உங்கள் பண்பாடு... பள்ளியில் படிப்பிக்கும் சிறப்பு என்று ஏதேதோ கேட்க அவள் நினைத்;தாலும்; நரம்புகள் இடம் கொடுக்கவில்லை.

எப்படி முடியும்?

நீண்ட நெடுமாலின் ஆழ்ந்த பக்தன் அவர்... அந்த முகத்தைப் பார்த்துக் கேள்விகேட்கிறதென்றால் அதுக்கும் ஒரு யோக்கியதை இருக்க வேண்டும்.
திருமாலை வணங்குபவன் தப்பு செய்யமாட்டான், அப்படியில்லை என்று செய்தாலும் அதை இன்னொருவன் தட்டிக் கேட்பதை திருமால் அனுமதிக்கமாட்டான். கர்னனுக்கு நடந்தது போல, வாலிக்கு நடந்ததுபோல நியாயப்படுத்தப்பட்டுவிடும்.

தொண்டர் விடைபெற்றுப்போக எழுந்தார். சாப்பிட்டுப் போகலாம் என்று கேட்டார்கள்.

'இன்னொரு நாளைக்கு நேரம் இருக்கும்போது சொல்லுங்கோ, வாறன்!' என்று கூறிவிட்டு தொண்டர் வெளியே நடந்தார்.

'ஆள் மாறவேயில்லை... இருபது வருசங்களுக்கு முதல் இருந்த மாதிரியே குணம், நடை எல்லாம் அப்படியே இருக்கு.. எதிலும் கட்அன்றைற்... அக்காவுக்கு நல்ல பொருத்தம்!' சொன்னான் குமரன்.

'வேறை பொம்பிளை கிடையாமல் இருந்ததாலை என்னைச் செய்யச் சம்மதிச்சிருக்கலாம் என்றும் சொல்லலாம்தானே...!' சும்மா சொல்லிப் பார்த்தாள் சிவரஞ்சினி.

'ம்...ம்.. எத்தினையோ பெரிய சம்பந்தங்கள் தேடிவந்தும் மாட்டன் என்று இருந்தவர்... காதலை மதித்தவர்... சரி, இனி எங்களுக்கு அத்தான்..!' சொன்னான் ரமணன்.

அப்போ மாலதியைப் பார்த்துக் குமரன் கேட்டான்.
'என்ன ஒன்றும் பேசாமல் இருந்திட்டீர்...? மழை வரப்போகுதே!'

'என்னண்டு தெரியேல்லை... கதைக்க முடியேல்லை. அதைக் கேட்பம், இதைக் கேட்பம் என்று நினைச்சாலும் அவர் பதில் சொல்லி என் வாயையடைச்சுப் போடுவார்  என்று நாக்கு அசையவே மாட்டன் என்றிட்டுது!' சொன்னாள் மாலதி.

30

ஓரளவு நிம்மதி சிவரஞ்சினியின் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது.  கலியாணம் முடிந்தால் யாரும் பெரிதாக ஒன்றும் கதைக்க மாட்டார்கள்.
'என் பாரத்தைத் தொண்டர் தன் தலையிலே தூக்கிப் போட்டிட்டார்... பாவம், கடவுளுக்குச் சமன்.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அவள்.

அவள் நினைப்புகளை மிதிப்பதுபோல ஒருநாள் சுகுமாரின் அக்கா சாவித்திரி வந்து குதித்தாள்.

சிவரஞ்சினி எதிர்பார்க்கவில்லை. என்றாலும்,
'வாங்கோ அக்கா!' என்று வரவேற்றாள்.

வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை. அவள் தனியத்தான்.
'கல்யாணம் என்று கேள்விப்பட்டன்!'

'ஓமக்கா!'

'அதெப்பிடி சிவரஞ்சினி?'

'ஏனப்பிடிக் கேட்கிறீங்கள்...?'

'என்ன ஒன்றும் தெரியாதமாதிரிக் கதைக்கிறீர்... நீர் கலியாணம் எப்படிச் செய்வீர்...? என்ன துணிவிலை ஓமென்று நாளும் குறிப்பீர்?'

சிவரஞ்சினிக்கு நெஞ்சு படபடத்தது.
'பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது மாதிரி இந்த மனிசி இங்கை வந்து நிற்குது!' என்று மனதுக்குள் கசந்தவாறு,
'நீங்கள் சொல்லுறது எனக்கு ஒன்றும் விளங்கேல்லை!' என்று சமாளித்தாள்.

'எங்கடை வாரிசு உம்முடைய வயிற்றுக்குள்ளை வளருது... இல்லையோ...?'

அவள் அதிர்ந்து போனாள்.

'ஓமோ... இல்லையோ?' அடிக்குமாற் போலக் கேட்டாள் அவள்.

'இல்லை!' என்று பதில் சொன்னாள் சிவரஞ்சினி.

'கடலைக் கடுகுக்குள் மறைக்கேலாது... எங்களுக்கு எல்லாம் தெரியும், தம்பி சாகமுதல் விபரமாகத் தன்  டயறியில் குறிச்சு வைத்திருக்கிறான். அவன் உன்னை உயிருக்குயிராய் நேசித்து  இருக்கிறான்.... நீ அவனையும் ஏமாற்றி, எங்களையும் ஏமாற்றி, இப்ப அந்தத் தொண்டரையும் ஏமாற்ற நினைக்கிறாய்;, விடமாட்டன், உன்ரை வண்டவாளத்தை ஊரூராய்ச் சொல்லப்போறன்! ஓம் என்று சம்மதித்து எங்கடை வீட்டு மருமகளாய் வா' பிள்ளையைப் பெற்று வளர்! நாங்கள் உதவி செய்யிறம், அதைவிட்டிட்டு, அவன் இவனைக் கலியாணம் செய்யப்போறன் என்று வெளிக்கிட்டாய்  அம்பலப்படுத்திப்போடுவன்!'

'வெருட்டுறீங்களா?
தம்பி உயிரோடை இருக்கேக்கை கலியாணம் செய்துவைக்காத அக்கா நீங்கள், இப்ப செத்தபிறகு ஏதேதோ பிதற்றுகிறீங்கள். போங்கோ வெளியே...!'

'நான் போறன்... நிம்மதியா உன்னை விடுவன்  என்று மட்டும் நினைக்காதை!  சாவித்திரி ஆர் என்று உனக்குக் காட்டுறன்!'

'இங்கையக்கா! உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை...? பெண்பார்க்க ஒருக்கா வந்ததைத் தவிர, வேறை என்ன தொடிசல் இருக்கு.... அவர் ஏதொ டயறியிலை எழுதி வைத்திருக்கிறார் என்று என்ரை வாழ்க்கையை ஏன் அழிக்கப் பார்க்கிறீங்கள்....!'

'உன்ரை வாழ்க்கையை நான் அழிக்கப் பார்க்கிறேனோ... நீ தான் எல்லாற்றை வாழ்க்கையையும் அழிச்சுக்கொண்டு வாறாய்... என்ரை தம்பிகூட உன்னாலைதான் செத்திருக்கிறான். நீ ஏதும் பிடிவாதம் பிடிச்சிருப்பாய்... அவன் அதை யோசிச்சுக்கொண்டு கார் ஓடினதாலைதான் அக்;ஸிடன் நடந்து அவன் சாக வேண்டி வந்தது.'

சாவித்திரியின் சொற்கள் வெடிகுண்டுகளாக சிவரஞ்சினியின் நரம்புகளைத் தாக்கின. அவள் காதைப் பொத்திக்கொண்டு, 'ஐயோ!' என்று கத்தினாள்.
அதற்குமேல் சாவித்திரி அங்கு நிற்கவில்லை. பக்கத்துவீட்டுக் காரர் பொலிசுக்கு எடுத்துச் சொன்னால் தனக்குப் பிரச்சனை வரலாமென்ற பயத்தில் விறுவிறு என்;று வெளியில் நின்ற தன் மகனின் காரில் ஏறி மறைந்துவிட்டாள்.

சிவரஞ்சினிக்கு இருந்த நம்பிக்கையெல்லாம் சிதறிச் சின்னா பின்னமாகி, மண்ணோடு மண்ணாகிப் போக, தலையைக் கிளறி விட்டு, பேய் பிடித்தவள் போல் தன் அறையில் ஒரு மூலைக்குள் சுருண்டு கிடந்தாள்.

அன்று குமரன்குடும்பம் வீட்டில் இல்லை, வெளியிடத்;தில் உள்ள மாலதியின் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தனர்.
சிவரஞ்சினி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் துடித்தாள்.
'என்னால் இனி வாழமுடியாது' அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

'ஒன்றும் வேண்டாம், நான் சாகப் போகிறேன், செத்தால் நிம்;மதி'

சேலை ஒன்றை எடுத்தாள்... முறுக்கிக் கயிறாக்கி வீட்டில் மேலே இருந்த தீராந்தி மரமொன்றில் தூக்குப்போட்;டுத் தற்கொலை செய்ய முற்பட்டாள்.
'திருமாலின் தொண்டர்களுக்கு எதிரிகளே இல்லை....' என்று தொண்டர் சொன்;ன வாக்கியத்தை அவள் நினைத்தாள்.

'கண்ணா...! கிருஸ்ணா..! என்னைக் காப்பாற்ற உன்னால் முடியாதப்பா... நான் ஒரு துர்ப்பாக்கியசாலி... என்னாலை இந்த உலகத்திலை இனி வாழ முடியாதப்பா! தொலைந்து போகிறேன், யாருக்கும் என்னாலை கஸ்டம்; வேண்டாம்.
நான் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்? இப்படி ஒரு அவச்சொல்லோடு இனி என்னால் வாழ முடியாது. நான், கடவுளாற்கூடக் காப்பாற்ற முடியாத பாவி!

என்னைக் கல்யாணம் கட்ட முன் வந்தவர் ஒரு தங்கமான மனிசர். அவர் நல்லாய் இருக்கவேணும், அவர் கடவுள் பக்தன், அதுவும் மகாவிஸ்ணுவின் தொண்டர்... அவருக்கு ஒரு குறையும் வராது.'

கவலைகள் இடிக்க, கண்ணீர் ஓட அவள் மேசை ஒன்றை இழுத்து அதற்குமேல் கதிரையை வைத்து மேலே ஏறி, மரத்தில் சேலையை மாட்டியபின் மேசையைக் கிடந்த இடத்துக்குத் திரும்பவும் இழுத்துவிட்டு, கதிரையில் ஏறி... ஏறி...

இந்த உலகம் எவ்வளவு சின்னஞ்சிறியது... இன்னும் சில நிமிடங்களில் அவளைப் பெறுத்தவரை உலகின் கதை முடிகிறது.

தம்பிமார் பிரச்சனை... மச்சாள்மார் தகராறு.. நாட்டுப்பிரச்சனை, ஈராக் அமெரிக்கா மோதல்... இன்னும் என்னென்னவோவெல்லாம் ஓரிரு நிமிடங்களுடன் முடிவுக்கு வரப் போகின்றது.
நான் போகிறேன்... பழகிய நண்பர்களே! உதவிய உறவுகளே! தாய்மண்ணே! உயிர்தமிழே! நான் செல்கிறேன்.

நான் வாழ விரும்புகிறேன்... எனக்கென்று ஒரு வாழ்க்கை அமைய இருக்கிறது. ஆனால் அதை அமைக்க விடமாட்டார் களாமே! வயிற்றுக்குள் குழந்தை... நான் செய்யிறது பாவம்! என்ன செய்ய...? எனக்கு வேறு வழி தெரியவில்லையே கண்ணா!

சாகமுதல் ஒன்று கேட்கிறேன்.
இந்த உலகத்துக்கே நீ அதிபதி, உன் சக்தியின் ஒரு பொறிதான் இந்த உலகம். நீ நினைச்சால் நடக்காதது எதுவுமே இல்லை, எனக்கு இது தெரியும்... அப்படியிருக்க, எனக்கேன் இந்த நிலைமை...? தற்கொலை செய்து சாகவேண்டுமென்று என்னடா நியதி?
மனத்தினாற்கூட யாருக்கும் கெடுதல் நினைச்சிருக்கமாட்டன்... என் கடமையைச் செய்யாமல் ஒருபோதும் விட்டதில்லை, கோவில்கள் போயிருக்கிறேன், பக்தியுடன் கும்பிட்டிருக்கிறேன், விரதம் இருந்திருக்கிறேன்... இவையொன்றும் எடுபடவில்லையா?

உன் கோவிலில் ஒளிரும் ஒளியெல்லாம் ஒளியில்லையா?
அர்ச்சனை செய்யும் மலர்களெல்லாம் மலர்கள் இல்லையா?
கோடிகோடியாகப் பக்தர்கள்  உன் கோவிலுக்கு வருகிறார்கள். அங்கே நீ இருக்கிறாய்தானே! அல்லது இல்லையா?

தூக்குக்கயிறு அவள் கழுத்தை முத்தமிட்டது.
எல்லாம் ஒரு சில வினாடிகளில் நடந்து முடியப்போகின்றன.

வீட்டுமணியடித்தது.
சிவரஞ்சினி தூக்குக்கயிறு மாட்டிய கதிரைமேல் நின்றாள்.
'யார் இந்த நேரத்தில்....? சாவித்திரிதான் திரும்பவும் வந்து மிரட்டப்போகிறாளா?'

அசையாமற் சில வினாடிகள் நின்றாள்.
கைத்தொலைபேசி மேசை ஒன்றில் இருந்த கிணுகிணுத்தது.
'இதென்ன கஸ்டம்? நிம்மதியாகப் போய்விடலாமென்றால் கதவு மணி ஒருபக்கம்... ரெலிபோன் ஒருபக்கம்... விடமாட்டாங்களாம்!' என்று நினைக்க, தொலைபேசியின் ஒலி நின்றது.

மறுகணம் குமரன் வீட்டுத் தொலைபேசி பாட்டுப்பாடியது. சேர்ந்தாற்போல வீட்டுக்கதவுமணியும் ஒலித்தது.
வேறுவழியில்லை... கழுத்தைச் சுற்றிய முடிச்சைத் தளர்த்திக் களற்றிவிட்டு, கதிரையால் இறங்கி வெளியே வந்தாள். யாரென்று பார்த்து உடனே பதில் சொல்லியனுப்பிவிட்டு... பயணத்தைத் தொடர்வோம்! இப்ப என்ன... எல்லாம் றெடி, கதிரையில் ஏறிக் கழுத்தைக் கயிற்றில் கொழுவினாற் சரி, ரிக்கற் கிடைச்சிடும்.

தொலைபேசிமணி ஓய்ந்துவிட்டது.
கதவைத் திறந்தாள். அங்கே கைத்தொலைபேசியும் கையுமாகத் தொண்டர் நின்றுகொண்டிருந்தார்.

அதிர்ச்சியில் வார்த்தைகள் அடைபட்ட நிலையில் விழிகள் கலங்கி நின்றாள் சிவரஞ்சினி.

பார்ஆளும் பருதியின் இருள்எரிக்கும் கதிர்போல், சுடர்விடும் ஒளிமிகு தொண்டரின் கண்கள் சிவரஞ்சினியின் கோலத்தைக் கண்டன.

வா என்றும் அழையாமல், போ என்றும் விரட்டாமல் வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல் சிவரஞ்சினி நின்றது என்னவோ போலிருந்தது.

'என்ன மௌனவிரதமா...? ரெலிபோன் அடித்தால் எடுக்க மாட்டீங்களா? கதைக்கவேணும் போல இருந்தது. எடுத்தன்... வீட்டிலையிருந்து கொண்டே எடுக்காமல் இருக்கிறீங்கள்.. ஏதும் பிரச்சனையோ?'

'இல்லை..இல்லை... பஞ்சியாய் இருந்தது, படுத்திருந்தனான்.'

'நம்பச்சொல்லுறீரோ..... ஏதோ நடந்திருக்கு, ஏன்; மூடி மறைக்கிறீர்?'

'ஒன்றும் நடக்கேல்லை... தம்பியவை வீட்டிலை இல்லை....!'

'அவை வீட்டிலையில்லையெண்டா நீங்கள் உங்கடை ரெலிபோன் அடித்தால் எடுத்துக் கதைக்கக்கூடாதா?'

அந்தநேரம் பார்த்து மழை வேறு 'சோ' என்று அடித்து ஊற்றத் தொடங்கியது.

'சரி, அப்ப நான் போட்டுவாறன்!' என்று கூறிவிட்டு திரும்பினார் தொண்டர்.

'வந்தனீங்கள் வீட்டுக்குள்ளை வராமற் போறீங்களோ?' சம்பிரதாயத்துக்குக் கேட்குமாப்போலக் கேட்டாள்.

தொண்டர் உள்ளே வந்தால் தன் திட்டம் தடைப்பட்டுவிடும் என்றும் தொங்கும் தூக்குக்கயிற்றைக் கண்டால்... கலங்காத தொண்டரே கலங்கி, மனம் கவலைகொள்வார்---- என்ன ஏது என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார், தன்னை நான் நம்பவில்லை என்று நினைப்பார்... என்று பல சிந்தனைகள் சிவரஞ்சினியின் உள்ளத்தில் எழுந்ததால் அவள் அவரை முழுமனதுடன் அழைக்கவில்லை.

'இன்னொரு நாளைக்கு வாறன்!' கூறிவிட்டு, தொண்;டர் காரை நோக்கி மழையில் நனைந்தவாறே நடந்தார்.

அவர் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.

தொண்டர் காரில் ஏறமுன் திரும்பிப் பார்த்து, கைகாட்டிவிட்டு உள்ளே ஏறி அதை இயக்கிக்கொண்டு புறப்பட்டார்.

31

'பாவம் என்ன நினைத்தாரோ தெரியாது...' என்று கவலைப்பட்டவாறே, கதவைச் சாத்திவிட்டு, சிவரஞ்சினி தன் அறைக்கு நடந்தாள். உள்ளே சென்றதும் தூக்குக்கயிறு அவளைப் பார்த்து வா என்று அழைத்தது. அவள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். தொண்டர் வந்திருக்காவிட்டால் இந்நேரம் என் உயிர் போயிருக்கும்! எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கிடைத்திருக்கும்!
மறுகணம், 'தொண்டர் ஏன் வந்தார்? நான் உள்ளே அழைக்கவில்லையே என்று என்ன நினைத்திருப்பார்?' என்ற கேள்விகள் அவள் மனதில் எழுந்தன.

'அவருக்கு உண்மையைச் சொல்லியிருக்கலாம்! சொன்னால், ஏதும் காரணம் கூறி என் மனதை மாற்றிவிடுவார். ஆனால் பிரச்சனை முடியாது. சொல்லாமல் விட்டது நல்லது.. என் துன்பங்களை முடிக்க நான் சாகப் போகிறேன். இது அவருக்குப் பெரும் துன்பமாகாதா...?
இவ்வளவு காலமும் தனியாக இருந்தவர், இப்போ தனக்கு ஒரு துணை கிடைக்கப்போகுது என்று சந்தோசப்படும் நேரத்தில், நான் இப்படி ஒரு முடிவு எடுத்தால் அவர் மனம் என்னபாடு படுமோ?' என்ற சிந்தனைகள் ஒன்றன்பின் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அவளுள்ளத்தில் எழுந்தன.
எனினும் அவள் தன் முடிவை மாற்றவில்லை. கதிரையில் ஏறி, கயிற்றைக் கழுத்தில் கொழுவினாள்.

முதல் இருந்த வேகம் இப்போ இல்லை... ஒரு தயக்கம்.
மூளைக்குள் பல்வேறு எண்ணங்கள் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல எழுந்தன.

'நான் தற்கொலை செய்து செத்துப்போனேன் என்று அம்மா, அப்பா அறிந்தால் எப்படியெல்லாம் துடிதுடித்துக் கத்திக் குளறுவார்கள்...! பெற்றவயிறு பற்றி எரியுமே!' என்ற எண்ணம் வந்தது.

அவள் கைகள் முடிச்சைச் சற்றுத் தளர்த்தின. ஒழுங்காக வளர்க்கப்பட்டு, பண்போடு வாழ்ந்த நான் வழிதவறியவள் என்ற கெட்டமுத்திரையுடனா சாகவேண்டும்? உலகம் வாய்க்கு வந்தபடி எல்லாம் எள்ளி நகையாடிப் பழித்துரைக்க இடம் கொடுப்பதா? கூடாது... கூடவே கூடாது!

பிறந்ததுக்கு, படித்ததுக்கு... இந்த மண்ணில் வாழ்ந்ததுக்கு ஒரு அர்த்தமில்லாமல்.... ஒரு அடையாளம் பதிக்காமல் ஒன்றுக்கும் உதவாத கோழைபோலத் தற்கொலைக்கு முயல்வதா?

இந்த உலகம் எவ்வளவு பெரியது! வாழவா இடமில்லை...! எனக்காக வாழாவிட்டால் பிறருக்காக வாழலாமே! தமிழுக்காக உழைக்கலாமே! ஊனமுற்றோருக்காகப் பாடுபடலாமே! ஊருக்காக உழைக்கும் தொண்டருக்குத் தோள் கொடுக்கலாமே!'
சிவரஞ்சினியின் சிந்தனைகள் சுற்றிச் சுழன்றன.

அப்போ கைத்தொலைபேசி மீண்டும் ஒலித்தது.
தூக்கக்கயிற்றை விலக்கித்தள்ளிவிட்டு, கதிரையிலிருந்து குதித்து மேசைமீதிருந்த தொலைபேசியை எடுத்துக் குரல் கொடுத்தாள்.
மறுமுனையில் தொண்டரின் வெண்கலக்குரல் ஒலித்தது.
'திடீரென்று வீட்டை வந்தது கோபமா? மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. அக்கா கனடாவிலையிருந்து வாறா. அதுவும் திடீர் விஜயம்தான்... அதைப்பற்றி உம்மோடை கதைக்கத்தான் ரெலிபோன் எடுத்துப் பார்த்தன்... நீர் எடுக்கேல்லை, நேரை போய் ஒருக்காச் சந்திப்பம் என்று வந்தன்!'

'அக்கா வாறாவா...? சந்தோசம்... முதலே சொல்லியிருக்கலாம்.'

'இப்ப ரெலிபோனிலை சொல்லுறனே!'

'வீட்டுக்கு வந்தனீங்கள்... உள்ளுக்கு வந்து கதைச்சிருக்கலாம் உடனை போயிட்டீங்கள்...'

'சிவா! ஒழுக்கம் என்ற ஒன்று இருக்கல்லவா! அதுதான் நீர் தனியா இருக்கிறீர்;... உங்கடை தம்பியவை இருந்திருந்தால் வந்திருப்பன். வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் நாங்கள் தமிழர்கள், எங்கள் பண்பாடுகளைக் கட்டி வளர்க்க வேண்டும்.. அப்பதான் வருங்காலச்சந்ததியும் அவற்றைப் பின்பற்றும்!'

'நீங்கள் சொல்லுறது சரி, என்றாலும் வீட்டுக்கு வந்த உங்களை உள்ளே கூப்பிட்டு தேத்தண்ணிகூடத் தராமல் வாசலிலை வைத்தே திருப்பிவிட்டது எனக்குக் கவலையா இருக்கு!'

'அப்ப ஏன் கட்டாயப்படுத்திக் கூப்பிடேல்லை...?'

'கூப்பிடக்கூடிய ஒரு நிலையிலை நான் இல்லை!'

'என்ன அப்பிடியொரு நிலை...?'

'நேரை சந்திக்கும்போது சொல்லுறன், இப்ப கேட்காதேங்கோ!' என்ற சிவரஞ்சினிக்கு அழுகை தொண்டைவரை வந்துவிட்டது.

இது மறுமுனையில் தொண்டர் மனதில் கவலை முளையிட வைத்தது. எனன பிரச்சனை என்பதை அறியத் துடித்தார் அவர்.

அவள் கண்ணீர் நடுவே தான் தற்கொலை செய்ய எடுத்த முடிவையும்;... அது அவர் வந்ததால் தடைப்பட்டு உயிர் தப்பியதையும் கூறியழுதாள்.

'உம்மை ஒரு முற்போக்கான பெண் என்று நினைச்சன்! என்னப்பா நீர்...! சீ... அதுக்கு எப்பிடி மனம் வந்தது? கடவுளே..!' என்;ற தொண்டர்,
'நான் உங்கை உடனை வாறன்! நீர் வேறை முட்டாட்தனமான முடிவு ஒன்றும் எடுக்காமல் இரும்!' என்றார்.

'வேண்டாம்...பிளீஸ்! நான் இனி ஒருக்காலும் அப்பிடிச் செய்ய மாட்டன்!'

'உம்மை நம்ப முடியாது, எனக்கே ஒழித்து மறைத்துத் தூக்குப் போட்டுச் சாக நினைத்த நீர், இன்னும் மனம் மாறி என்ன செய்வீர் என்று ஆருக்குத் தெரியும்? நான் வாறன்!'

'வேண்டாம் பிளீஸ்;! என்னை நம்புங்கோ!'

'அப்ப ரமணனுக்கு எடுத்துச் சொல்லுறன், அவன் வந்து கூட்டிக் கொண்டு போவான்!'

'வேண்டாம் என்றெல்லே சொல்லுறன்... நான் அப்பிடி மடைத்தனமான வேலை இனிச் செய்யமாட்டன். என்னை நம்புங்கோ!'

'உம்மை என்னண்டப்பா நம்;பிறது...?அங.. கொஞ்சம் முந்தி நான் வராட்டி, இப்ப உம்முடைய கதை முடிஞ்சிருக்கும்!'

'அந்த மனிசி வந்து அப்பிடிச் சொன்னால் நான் என்ன செய்யிறது... தம்பியார் செத்தது என்னாலையாம்! அவற்றை பிள்ளை தங்கடை வாரிசாம்... நான் கலியாணம் செய்ய ஒருநாளும் தான் அனுமதிக்க மாட்டாவாம்.....!'

'அவ என்ன எலிசபெத் மகாராணியோ எங்களுக்குச் சட்டம் போட...! நீர் உடனை எனக்குச் சொல்லியிருக்கலாமே..! எல்லாத்தையும் மனதுக்குள்ளை போட்டு ஏன் குற்றம் செய்தவள் மாதிரிக் குழம்புறீர்?'

'என்னாலை தாங்கிக்கொள்ள முடியேல்லை... ஏன் பிறந்தன்..? எல்லாருக்கும் சுமையா... கஸ்டம் கொடுத்துக் கொண்டு இருக்கிறன்...!'

'நீர் ஒருத்தருக்கும் கஸ்டம் கொடுக்கவுமில்லை, சுமையாக இருக்கவுமில்லை.'

'உண்மையாச் சொல்லுறீங்களா...?'

'உண்மையாத்தான் சொல்லுறன்!'

'இவ்வளவு பிரச்சனைக்கும் மத்தியிலை என்னைக் கலியாணம் செய்ய விருப்பமா...?'

'என்ன கேட்கிறீர்;? திருநீலகண்டன் ஒன்றுசொன்னால் சொன்னது தான்;.... உம்மைக் கல்;யாணம் செய்ய எப்ப சம்மதித்தேனோ, அந்த நேரமே நான்; உம்மைக் கலியாணம் செய்திட்டன்! இனி நடக்கப்போறது எல்லாம் ஊருக்குத்தான்...!'

'இந்த மனிசி எங்களை நிம்மதியா இருக்கவிடாது!'

'அவவுக்கும் எங்களுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது, அவ ஆர் இதிலை தலையிட? நீர் யோசிக்காதையும்;! நான் இருக்கிறன்.'

தொலைபேசி உரையாடல் முடிந்தபின் சிவரஞ்சினியின் மனம் ஓரளவு அமைதிக்கு வந்திருந்தது.


32       

மறுநாள்....
குமரன்வீடடுக்கு சாவித்திரி தொலைபேசி எடுத்து, மாலதியுடன் கதைத்தாள். சிவரஞ்சினிக்குச் சொன்ன அதே வாசகங்களை இங்கு திருப்பிக் கொட்டினாள்.

மாலதி இதுபற்றி ஒன்றும் அறியாதவள் என்பதால் பெரிதாக ஒன்றும் சொல்லவோ, மறுத்துரைக்கவோவில்லை.
குமரன் வீட்டுக்கு வந்ததும் நடந்ததைக் கூறினாள்.
அவன் நம்பவில்லை.
'மச்சாளைக் கேளுங்கோவன்! என்ன குடும்பமப்பா நீங்கள்...! சீ.. கிலிசகேடு.. ஊர் அறிஞ்;சால் காறித்துப்பும்.'

'சும்மா பழி சுமத்தாதை! என்ன நடந்தது என்று தெரியாமல் வாயிலை வந்தபடி உளறுகிறாய்....!'
'நான் என்ன உளறுறேனோ...? உங்கடை அக்கா ஊர் மேயிறா.. கட்டுப்படுத்தி வைக்;;க வக்கில்லை... கதைக்க வந்திட்டீங்கள்!'

குமரனுக்குக் கோபம் சுர் என்று ஏறியது. ஆவேசமாய் உன்னி எழுந்தான். இருந்த கதிரை பின்னால் தடாரென்று விழுந்து உருள, மாலதியின் கன்னத்தில் பளார் பளார் என்று இரண்டு அறைகள் விழுந்தன.

மாலதி அடிபட்ட பாம்புபோலச் சீறிக்கொண்டு எழுந்தாள். அவளைச் சமாளிக்க முனைந்தான் குமரன்.
'கோபத்திலை அடிச்சுப்போட்டன், கோவிக்காதை மாலதி!' என்று அவன் சமாளிக்க ஏதோ சொல்ல, அவள் இடையே குறுக்கிட்டு அதிர்ந்து வெடித்தாள். அவள் போட்ட கூச்சலில் அந்த வீடே அதிர்ந்தது.

'இப்ப என்ன நடந்தது என்று இப்பிடிக் கத்துறாய்...?'

குமரன் கூற்றைக் கையசைவால் நிராகரித்த மாலதி,
'வேண்டாம்... ஒரு கதையும் வேண்டாம். என்னையும்  பிள்ளை களையும்  கொல்லாமல் எங்கையெண்டாலென்ன போய்த் தொலையுங்கோ! கண்ணிலை முழிச்சாலே பாவம்?'

அவள் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வேகமாகப் படுக்கை அறைக்குட் சென்று கதவை அடித்துச் சாத்திக்கொண்டாள்.

குமரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மாலதி, இதயத்தை உடைப்பது போல் சொன்ன வார்த்தைகள் அவனை நிலைகுலையச் செய்துவிட்டன.

'என்னையும் பிள்ளைகளையும் கொல்லாமற் துலைந்து போ!' என்றால், இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
நெஞ்சிலே இரத்தம் வடிவதுபோல வேதனை கக்கியது.

ஆறுதலாக விடயத்தை அணுகாமல், பொறுமையின்றி மாலதி வார்த்தைகளை அள்ளிக்கொட்டிவிட்டாள்.

குமரன் செய்ததிலும் தவறு இருக்கு! மாலதி, அவனது தமக்கையைப் பற்றி ஏளனப்படுத்தி, தகாத வார்த்தைகளாற் பரிகாசித்தபோது, தானும் வார்த்தைகளாலே பதில் சொல்லி இருக்கலாம். ஆனால் 'அக்;;கா ஊர் மேயிறா' என்று ஒருவர,;  உடன்;பிறந்தவளின் ஒழுக்கத்தை இழித்துக் களங்கம் கற்பிக்கும் போது, எந்தத் தம்பி தான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருப்பான்...?

மேலே தன் அறையிலிருந்து இறங்கி, சோகம் கொட்ட நின்ற தம்பியின் அருகில் வந்தாள் சிவரஞ்சினி.

நடந்தது என்னவென்று அவளுக்குத் தெரியும்... கலங்கிய கண்களுடன் நிற்கும் குமரனைப் பார்த்து இரக்கப்பட்டாள். தன்னாற்தான் எல்லா விபரீதங்களும் என்;பதும் அவளுக்கு விளங்கியது.

'விடிய வேலைக்குப் போகவேணும், போய்ப்படு!' என்று அக்கா  சிவரஞ்சினி சொல்லியும் குமரன் தூங்காது யோசித்துக்கொண்டு இருந்தான்.

'ஒரு கணவனுடன் எப்படிப் பழகவேண்டும் என்று தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு பெண்ணுடன் வாழ்வது மிக மிகக் கடிமை! அந்த வாழ்க்கையை நீ அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய். அதைக் கண்ணாற் பார்த்தும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் நான் இருக்கிறன். இறைவன் சிலருடைய வாழ்க்கையைக் கண்ணீரில்தான் எழுதியிருக்கிறார்.' சிவரஞ்சினி குமரனுக்குக் கேட்கச் சொல்லிக்கொண்டே கண்ணீர் வடித்தாள்.

'அக்கா!' என்று அழைத்து, அழவேண்டாம் என்று தலையை அசைத்து, சைகை மூலம் அவள் கவலையைத் தணிக்க முயன்றான்.
சகோதரபாசம் என்பது இதயத்தில் ஆழமாக வேரோடி இருக்கும் ஒரு உயிர்ப்பிணைப்பு என்பதை அவனால் உணரமுடிந்தது.


33

சிவரஞ்சினியின் கைத்தொலைபேசி அறிவிப்பு ஒலித்தது. மறுமுனையில் தொண்டரின் குரல் வந்தது.
'அக்காவை ஏத்த எயர்ப்போர்ட் போறன், வாறீரே?'

'வாறன், வாங்கோ!' யோசிக்காமற் பதில் கூறினாள். குமரன் கண்களை விரித்து அவளைப் பார்த்தான்.
அர்த்தஜாமம் அது... இந்தவேளை, ஒருநாளும்; யாரோடும் கூடப் போகாத அக்கா, இன்று ஓம் என்றது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தொண்டருக்கும் அவள் சம்மதித்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதனால்  கேட்டார்,
'உண்;மையாகத்தான் சொல்லுறீரா...!'
'வாறீரோ என்று கேட்டீங்கள், வாறன் என்று சொன்னன்.. பிறகென்ன கேள்வி...?' சிவரஞ்சினி தொண்டருடன் இப்படிக் கதைத்தது இதுவே முதற்தடவை.
இது பட்டென்று தொண்டருக்கும் புரிந்தது. ஆனால் அவர் அதைப் பெரிதுபடுத்தவில்லை. சிவரஞ்சினிக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் என்றும் இதில் ஏதோ ஒன்றால் அவள் மனம் நொந்துபோயிருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டார்.

அப்போ அவர் சொன்னார்...
' 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது,
எது நடக்;க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.'
இது நான்; சொல்லவில்லை, கண்ணன் கீதையில் சொல்லி இருக்கிறான். வெளிக்கிட்டு நில்லும் அரைமணித்தியாலத்தில் வாறன்;!' தொலைபேசித்தொடர்பு முடிந்தது.

தொண்டர் சொன்;ன பகவத்கீதை வரிகளை சிவரஞ்சினி குமரனுக்குக் கூறி, இதை நான் சொல்;லேல்லை... தொண்டர் இப்ப எனக்குச் சொன்னது என்று சொன்னவள்,
'இந்த நேரத்தில் இப்படியொரு அறிவுபூர்வமான வசனம்;... இதிலடங்கியிருக்கும் உலகியற் தத்துவம்;... எங்கள் இருவருடைய மனதுக்கும் ஒரு புதுத்தென்பைத் தரும் என்று நான் நினைக்கிறன்.' என்று சொல்லிவிட்டு,

'தம்பி, மச்சாள் என்னை ஊர் மேயிறவள் என்று சொன்னசொல்... அவவுக்கு இந்தச் சொல்லின் பொருள் தெரியாமலிருக்கலாம்;.... தெரிந்த எனக்கு, நெஞ்சிலே எவ்வளவு இரத்தம் கொட்டும் என்பது கடவுள் கண்ணனுக்குத் தெரியும். இப்ப நான் கல்யாண மாகாத ஒருவரோடை காரிலை தனியா, இந்த இரவிலை போகப் போறன்! இதை ரிவியிலை படம் எடுத்து உலகம் முழுக்கக் காட்டினாலும் நான் கவலைப்படப் போவதில்லை.
ஆனால் தொண்டர் என்னைக் கலியாணம் செயயப்போறார், அவரை நான் நம்புறன்... அம்மாவுக்கு அடுத்ததா நான் அவரை நம்புறன். நீ ஒன்றுக்;கும் யோசிக்காமல் போய்ப்படு! நான் வெளிக்கிடப்போறன்.' என்று சொல்லிவிட்டு, தன் அறைக்கு உடுப்பு மாற்றச் சென்றாள்.

குமரன் படுக்கவில்லை, ஹோல் சோபாவில் நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்திருந்தான். வடகடல் கொந்தளிப்பதுபோல மனதிற் கவலைகள் சீறி இடித்தன.
தனக்கு மிஞ்சிய சுமையைத் தூக்குவது தப்பு...! தூக்கிய காவடியை வீதி சுற்றிவர முன் இறக்கி வைப்பதும் தப்பு... என்ன செய்ய... யோசனை சிலந்திப்பின்னல்கள் போல் சிக்கலாகி வளர்ந்து கொண்டே போனது.

சிவரஞ்சினி தொண்டர் வர, அவருடன் காரிலேறி விமான நிலையத்துக்குப் போய்விட்டாள்.

குமரன் அரைத்தூக்கத்திலே சோபாவில் திரும்பித்திரும்பிப் படுத்துப்பார்த்தான்.
எங்கேயோ உயரத்தில், பிடிக்க ஆதாரமின்றி, இறங்கமுடியாமல் தவிப்பதுபோலவும் ஐயோ என்று கத்தமுடியாமல் கழுத்தை ஏதோ நெரிப்பதுபோலவும் கனவுகண்டு திடுக்கிட்டு விழித்தான்.

அப்போ, யாரோ நடக்கும் சத்தம். மாலதி தான் குளியலறைக்குப் போயிருந்தாள். குமரன் எழுந்துபோக அவள் அங்கிருந்து வந்தாள்.
அவன் பார்த்தான்.
அவள் பார்க்காமலே போனாள்.

'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது!' என்று சொல்லிக்கொண்டே குமரன் அவளைப் பார்த்தான்.

அவள் எரித்துவிடுவதுபோல முறைத்துவிட்டு, கதவைச் சாத்திக் கொண்;டாள்.

குளியலறையால் திரும்பிய குமரன், பிள்ளைகளின் அறை ஒன்றுக்குட் படுக்கச் சென்றான்.

மனிதன் எதையெல்லாம் நினைத்து, ஏதேதோவெல்லாம் அடையலாமென்று கோட்டைகட்டிக்கொண்டு மனம் போனபோக்கெல்லாம் அலைய, அதை விதி ஒரு வினாடியில் தூள் தூளாக்கக் கலைத்துவிட்டாலும் விடலாம்.

கோபம்கூடியவர்களுடன் உறவு வைத்திருந்தால் பாம்புடன் பழகு பவர்போலப் பக்குவமாய்ப் பழகிக்கொள்ள வேண்டும். மாலதி பொல்லாத கோபக்காரி. வரவர அவள் கோபம் கட்டுக்கடங்காமற் போய்க்கொண்டிருந்தது. தானும் பதிலுக்குக் கோபித்தால் பிள்ளைகளுடன் அவள் தன்னைவிட்டுப் போய்விடுவாள்.

இது குமரனுக்கு விளங்கியதால் மனதை அடக்கிக்கொண்டு, தமக்கை சிவரஞ்சினியின் கல்யாணம் முடியட்டும் என்று பொறுமையைத் துணைக்கு அழைத்தான்.

34
தொண்டர் தாமோதரனின் வானைக் கேட்டு, அதில் விமான நிலையம் போக வந்திருந்தார். சிவரஞ்சினி முன் சீற்றில் ஏறி உட்கார்ந்துவிட்டாள். வான் புறப்பட்டது.

தொண்டரின் முகம் என்றும்போலப் பளிச்சென்று ஒளிவீசி உள்ளத்தின் தெளிவை எடுத்தியம்பியது.
கலகலப்பாக சிவரஞ்சினியை வரவேற்று, சுகம் விசாரித்தவாறு  வாகனத்தை ஓட்டினார் தொண்டர்.

பதில் சொல்லி முடித்தவள், சற்று முன்பு குமரன் வீட்டில் நடந்த நிகழ்வை ஒன்றும்விடாமல், கண்ணில் நீர் துளிக்கக் கூறினாள்.

'சினந்து பாய்ந்தெழும் புலி, சீறி வெடிக்கும் எரிமலையையும் விழுங்கி ஏப்பம் விடும்;!' சொன்னார் தொண்டர்.

'நீங்கள் என்ன வேணுமென்றாலும் ஆறுதல் சொல்லுங்கோ! ஆனால் இனியும் என்னாலை தாங்கிக்கொள்ளத் தைரியமில்லை.. இயலாது...! அவளின் வாயிலிருந்து வாற ஒவ்வொரு சொல்லும் நூறு செல் அடிக்குச் சமன்... கண்டாலே நெஞ்சு படபடக்குது. என்னென்று இவளோடை தம்பி சேர்ந்து வாழப்போறானோ தெரியாது...!'

'சிவரஞ்சினி! மாலதி அனுபவத்தில் சின்னக்குழந்தை... அவவுக்கு உலகம் தெரியாது. தான் பெரியாள்... தன்னால் எல்லாம் முடியும் தன்னிடம் எல்லாம் இருக்கு, என்ற தலைக்கனத்தில், தண்ணீரில் துள்ளும் மீன்போல அடக்கமின்றி இருக்கிறா...!'

'என்ன இது? இப்பிடியும் ஒரு பொம்பிளை இருப்பாளோ...? ஒரு சொல்லுச்சொல்லப் புருசனை விடாளாம்... இருத்தி எழுப்புறாள்.'

'அழகு, பணம் இவற்றை அடிப்படையாக வைத்துக் கல்யாணம் செய்தால் இடையில் இப்படிக்குழப்பங்கள் வந்துதான் ஆகும். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தகுதியானவர்களை வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்தால் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு, வளைந்து கொடுத்து, விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். குமரனின் இடத்தில் தற்சமயம் மௌனமாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்!' யோசனையுடன் கூறினார் தொண்டர்.

நேரம் மூன்றுமணியைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஓடவேண்டும் என்பதாலும் இடையில் ஏதும் மினக்கேடு, தடை ஏற்பட்டாலும் நேரத்தோடு போவது உகந்தது என்று முன்கூட்டியே புறப்பட்டிருந்தார்கள்.
நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் 'விர்விர'; என்று விரைந்து கொண்டிருந்தன.
மனிதன் ஓய்வின்றி, இரவுபகலெல்லாம் அலைந்து திரிகிறான் என்பதுக்கு இது உதாரணமாக இருந்தது.

இயந்திரங்களின் வேகங்கள் கூடி, தூரங்கள் குறைந்து உலகமே ஒரு சிறு கிராமம்போலக் குறுகிவிட்ட நிலைமை வர, மனிதனுக்கு தேவைகள் அதிகரித்து, இருப்பது போதாது.. காண்பதெல்லாம் வேணும் என்ற கட்டாயம் உருவாகி, அவன் ஓடித் திரிவது தெரிந்தது.

என்ன கொண்டு வந்தோம் என்பதை யார் நினைத்துப் பார்க்கி றார்கள்? அல்லது எதைத்தான்  கொண்டு போகப்போகிறோமோ என்றாவது நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லையே...!
இன்று என்னுடையது என்று இருக்கும் ஒன்று, நாளைக்கு வேறொருவர் கைக்கு மாறும். எதுவுமே யாருக்கும் சொந்தமில்லை, எல்லாம் இயற்கையின் உடமை. இதை உணர்ந்தால் மனிதன் அமைதியாக வாழமுடியும், வாழ்க்கையை இரசிக்கமுடியும், அன்பைக் காணமுடியும், பண்பு மிளிரமுடியும், மனிதன் மனிதனாக வாழமுடியும்.

ஆனால் யார் இதைச் சிந்திக்கப் போகிறார்கள்? உருளும் உலகிலே ஓடும் நீர்போல, தாங்களும் ஓடிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, நின்று நிதானித்து, சிந்தித்து வாழ்பவர்கள் மிகமிக அரிதாகவே காணப்படுகிறார்கள்!

வீதியில் விரைந்து சென்ற வாகனங்;களின் வேகம் குறைவது தெரிய, தொண்டரும் வானின் வேகத்தைக் குறைத்தார். முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்களில் எச்சரிக்கை விளக்குகள் மின்னிமின்னி ஒளிர்ந்தன.
'ஏதோ விபத்து நடந்திருக்க வேண்டும்' என்பது புரிந்தது.
வாகனங்கள் அடுக்கிவிட்ட இரும்புப்பெட்டிகள் போல நெடுஞ்சாலையில் நிறைந்து நின்றன.

'என்ன செய்ய..?' கேட்டாள் சிவரஞ்சினி. அவளுக்குள் மனப்பயம் தோன்றியது. 'நாங்கள் வாகன நெரிசலில் சிக்கி நிற்பது அறியாமல், தாமதமாக விமானநிலையம் போக, அங்கே இவர் அக்கா நாங்கள் எங்கோ ஜாலியாகச் சுற்றிவிட்டு நேரங்கழித்து வந்ததாக நினைத்தால்.....' புதிதாக ஒருமனச்சிக்கல் முளைத்து, அவளை முள்மீது நிற்க வைத்தது.

நீண்டநேரம் அந்த நெடுஞ்சாலை, ஆயிரக்கணக்கான பிரயாணிகளின் பொறுமையைச் சோதித்தது.
வாகனத்திலுள்ள றேடியோவில் நல்ல புதிய சினிமாப்;பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவற்றைச் சிவரஞ்சினி இரசிக்கும் நிலையிலில்லை. ஏன் வந்தோமென்று கேட்குமளவுக்கு அவளுக்கு மனப்பயம் எழுந்தது.
'என்னை ஸ்ரேசனிலை இறக்கிவிடுங்கோ, நான் றெயின் ஏறி வீட்டுக்குப் போறன்! நீங்கள் தனியாப் போனால் உங்கடை அக்காவுக்குச் சந்தேகம் வராது, அவ கோபத்திலை இருந்து தப்பிக்கொள்ளலாம்.' என்றாள் சிவரஞ்சினி.
அவள் பயந்த நிலையைக் கண்டு, தொண்டருக்கு இரக்கம் வந்தது. துன்பத்துக்கு மேல் துன்பத்;தை அனுபவித்த ஒரு இளம்பெண்ணின் நொந்துபோன மனதின் தவிப்பை விளங்கிக் கொண்ட தொண்டர்,
'நீர் ஒழுக்கமிக்க ஒருத்தியென்று எனக்குத் தெரியும்... கண்ணகி யின் ஒழுக்கத்தை நான் கண்ணாற் காணவில்லை...சிலப்பதிகாரத்தில் வாசித்து அறிந்தேன். அதை உம்மிடம் நேரிற் காண்கிறேன்! சரியா... பயப்படாதையும்.' என்றார் தொண்டர்.

'நீங்கள் ஆம்பிளை... உங்கள் கருத்தைச் சொல்வீங்கள்... ஆனால் பெண்கள் பெண்களைப் பார்க்கும் பார்வைகள் உங்களுக்குத் தெரியாது!'

'அப்படியும் ஒரு பார்வை இருக்கா....?' அவளைச் சாந்தப்படுத்த அவர் கேட்டார்.

'நீங்கள் பகிடியா நினைக்கிறீங்கள்... எனக்குப் பயமாக் கிடக்கு!'

அப்போ வாகனங்கள் சற்று உருள்வது தெரிந்தது. இருவருக்கும் ஒரு ஆறுதற் பெருமூச்சு வந்தது.

விபத்து நடந்த இடம் சீர்படுத்தப்பட்டு, அடிபட்ட வாகனங்கள் ஒரு பக்கமாக நிறுத்தி வைக்;கப்பட்டு, மற்றைய வாகனங்கள் போக வழி செய்யப்பட்டிருந்தது. வாகனங்களின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்து, சாதாரணநிலைக்கு வந்தது.
காலை நான்கு முப்பதைத் தாண்டி நேரம் நகர்ந்தது.

மேகம் வெளித்து, சித்தரை மாதக்கடைசிநாட்களின் காலைப் பொழுது புலரும் நேரம்.
இன்னும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஓட வேண்டிய தூரம் இருந்தது.
'விமானம் தரையிறங்கிவிடும்..., பறவாயில்லை... சோதனைகள் முடித்து வெளியே வந்தால் கொஞ்சம் காத்துக்கொண்டு நிற்கட்டும், கைத்தொலைபேசிஎண்கள் தெரியும், தேவைப்பட்டால் எடுப்பார்கள்;' என்று மனதைச் சமாளித்தார் தொண்டர்.

35
சிவரஞ்சினியின் பதற்றம் அவருக்கில்லையென்றாலும் தொலை தூரத்திலிருந்து வருபவர்களை வரவேற்க முன்கூட்டியே போய்க் காத்து நிற்பது பண்பாகும்... என்ன செய்ய...? எதிர்பாராத வீதி விபத்தும் அதனால் ஏற்பட்ட தடையும்... என்று மனதுக்குள் சற்று வருத்தம் இருக்கத்தான் செய்தது.

பிராங்பேர்ட் விமானநிலையத்துக்கு வந்து வானை, வாகனங்கள் தரிப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார்கள்.

'என்ன அதிசயமான கட்டிடநுணுக்கங்கள்... தொழில்நுட்ப முன்னேற்றங்களின்  வளர்ச்சிதான் என்னே!' என்;று நினைத்தவாறு தொண்டரின் பக்கத்தில் விரைந்து நடந்தாள் சிவரஞ்சினி.

புகையிரதநிலையத்துக்குரிய பாதை காட்டப்பட்டிருப்பது கண்டு,
'பிளீஸ்! நான் றெயினிலை ஏறி வீட்டை போறன், நீங்கள் கூட்டிக்கொண்டு வாங்கோ!' என்றாள். அவள் மனப்பயம் வார்த்தைகளில் மின்னி ஒலித்தது.

தொண்டர் அவளைப் பார்த்தார்.
'இவள்; எவ்வளவு தைரியம் சொல்லியும் பயந்து கொண்டு இருக்கிறாளே! எல்லாம் சூழ்நிலைதான்... கூட இருப்பவர்கள் குற்றம்கூறி, இவள் மனதில் அநாவசியமாகக் குற்றவுணர்வை வளர்த்துவிட்டார்கள். பாவம் இவள்!' என்று அவர் மனம் கனிந்தது.

'குற்றமிழைத்த எத்தனையோ பேர் சமூகத்தில் நல்ல மனிதர்களாக நடித்துக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி உலாவிக் கொண்டிருக்கையில், இவள் எதுவுமே செய்யாமல்... விதி விளையாடியதற்காகக் கலங்கித் தவிக்கிறாள்.

ஒரு சமூகத்தில் வல்லவனாக இருக்கிற ஒருவரின் குற்றங்கள் எளிதில் மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன. அதேவேளை சாதாரணமான ஒருவர்; விடும் சிறுபிழையும் பெரிதாக விமர்சிக்கப்பட்டு, ஊர் பரிகாசிக்குமளவுக்குப் பெரிதுபடுத்தப்படுகிறது. இதுவும் சமூகத்தின் பலயீனம்தான்;' என்று நினைத்துக் கொண்டார்.

அவளுக்கு அவர் பதில் சொல்லவில்லை... அவளும் திருப்பிக் கேட்கவில்லை.
கனடாவிலிருந்து விமானம் வரும் விமானநிலையப்பிரிவுக்குப் பாதை பார்த்து விரைவாக நடந்தார்கள்.

'தம்பி வாறான்!' என்று நெஞ்சைக் கட்டியணைக்கும் ஒரு இனிய குரல்;...
'மாமா...!' என்ற மருமக்களின் குரல்கள்.

'டேய் மச்சான்!' என்ற பாசம் வழியும் அத்தானின் அழைப்பு என்பன தொண்டரின் கண்களில் ஒரு ஆனந்தக்கண்ணீரைத் தோற்றுவிக்க, அவர்களை நோக்கி நடந்தார்.
கடைசி மருமகன் மயூரன்... பன்னிரெண்டு வயது, ஓடி வந்து உன்னி ஏற... அவனைத் தூக்கிச் சுழற்றிக் கொஞ்சினார் தொண்டர்.
எல்லோரின் அன்பு அணைப்பும் ஒருசேராக் கிடைத்த சந்தோசத்தில் தொண்டர் ஒருகணம் ஆடிவிட்டார்.
அப்போ அக்கா ருக்குமணி,
'யாரிது..' என்று தொண்டரின் பக்கத்;தில் நின்ற சிவரஞ்சினியைத் தன் கையால் நெருங்க அணைத்தபடி, தம்பி தொண்டரைப் பார்த்து,... 'எங்கடை சிவரஞ்சினி தானே!' என்று கேட்டாள்.

தொண்டர் முகஅசைவால் சரியான ஊகம் என்று ஒத்துக் கொண்டார்.
'எங்கடை வடிவான, படிச்ச மாமி!' என்று உமா, கஜேந்தினி, முரளி மூவரும் சிவரஞ்சினியைச் சுற்றி வளைத்து அன்பு முத்தங்களை அள்ளியிறைத்தபோது, சிவரஞ்சினி ஜேர்மனிக்கு வந்து முதன் முதலாக அன்புமழையில் நனைந்து மிதந்தாள். அவள் கண்கள் ஆனந்தக்கண்ணீரில் மூழ்கியது.

சூட்கேஸ்களைத் தூக்கித் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வாகனத்தரிப்பு நிலையத்துக்கு நடந்தார்கள்.

ஒரே தமாசான கதைகளும் சிரிப்பும் கூடப்படிக்கும் பள்ளி நண்பர்போல தொண்டரின் அக்கா, அத்தான் இருவரின் பழகும் சுபாவம் உண்மையிலேயே கவலை நீக்கும் மூலிகை மருந்தாக, சிவரஞ்சினியின் சோகங்களைத் துடைத்து எறிந்தன.
அவள் ஏதோவெல்லாம் நினைத்துப் பயந்திருந்தாள். சோடியாக வந்ததுக்கு ஏதும் சொல்வார்களா...? நேரந்தாழ்த்தி வந்ததுக்கு என்ன சொல்வார்களோ... என்றெல்லாம் குழம்பிப் போயிருந்தாள்.

ருக்குமணியோ, அவள் கணவன் ஆனந்தனோ அப்படியான கேள்விகளை மறந்து கூடக் கேட்கக்கூடியவர்களல்ல என்பதை நேரிலே கண்டதும் அவள் மனதிலிருந்த சுமைகள் எல்லாம் பஞ்சாகப் பறந்த ஒரு சுகத்தை உணர்ந்தாள்.

வான் ஓடிக்கொண்டிருந்தது.

வானத்திலே சூரியனின் கதிர்கள் மேலேறத் தொடங்கின.

'யாரடா தம்பி சாவித்;திரி...?' சிவரஞ்சினிக்குப் படார் என்றது.

'சாவித்திரி!' என்ற தொண்டர், சிவரஞ்சினியைப் பார்த்துவிட்டு,
'சுகுமாரனின் அக்கா... ஏன் கேட்கிறாய்?' என்று கேட்டார்.

'அவளை, நானும் அத்தானும்; ஒருக்காப் பார்க்க வேணும்!'

'உன்னைவிட சாவித்திரி வடிவானவள் எண்டா கனடாவுக்குக் கூட்டிக்;கொண்டு போவம்!' சிரித்தார் ஆனந்தன்.

'எனக்குப் பிரச்சனையில்லை!' ஆனந்தனின் தமாசுக்குப்; பதிலாகத் தானும் பகிடியாக விடை கொடுத்துவிட்டு, ருக்குமணி தொடர்ந்து கூறினாள்.
'அவளைச் சந்தியிலை நிற்கவிட்டு நாலு வார்த்தை கேட்க வேணும்... எங்கடை ரெலிபோன் நம்பரை என்னண்டோ எடுத்து, அவ நாச்சியார் ஏதோ ஜனாதிபதி மாதிரிக்  கதை கதைக்கிறா!' என்றவள், சிவரஞ்சினியைப் பார்த்து,
'மச்சாள்! நீ பயப்படாதை, நாங்கள் இருக்கிறம்.... உனக்கும் தம்பிக்கும்; ஒன்றென்றால் நாங்கள் உயிர் கொடுப்பம்!' என்று உறுதியாகச் சொன்னாள். அந்த வார்த்தைகள்; சிவரஞ்சினியை மயிர்க்கூச்செறிய வைத்தன.

இப்படியொரு சந்திப்பை ஏற்படுத்திய கடவுளின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, நன்றி சொல்லிக் கண்ணீர் அபிசேகம்; செய்யவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

நீண்டவீதியில் வந்த, பெற்;றோல்நிலையத்துக்குச் சென்று, பெற்றோலை வானுக்கு நிரப்பி, அயலில் இருந்த உணவுவிடுதியில் கோப்பியும் சிறுவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களும் வாங்கியபின் சற்று ஓய்வு எடுத்து மீண்டும் புறப்பட்டார்கள்.

வீட்டை அண்மிக்க, சிவரஞ்சினியின் மனம் குறுகுறுக்கத் தொடங்கிவிட்டது. நேற்று தம்பிவீட்டில் நிகழ்ந்த இரகளை, மோதல் நினைவுக்கு வர நெஞ்சில் வேதனை முள்ளாகக் குத்தியது.

சிவரஞ்சினி அமைதியாக இருந்ததையும் அவள் முகவாட்டத்தையும்; கண்டு, காரணம் கேட்டாள் ருக்குமணி.
'என்ன மச்சாள் அமைதியாகிவிட்டீர், ஏதும் பிரச்சனையே...?'

'இல்லை!' என்று தலையாட்டி மறைக்க முயன்றாள் சிவரஞ்சினி.

தொண்டர் அதை மறைக்கவிரும்பவில்லை. குமரன் வீட்டில் நடந்த சம்பவத்தையும் மாலதியின் யுத்தப்பிரகடனத்தையும் சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

'ஓகோ! நல்ல குடும்பமாகத்தான் இருக்கு! நாங்கள் கொஞ்சம் படிப்புச் சொல்லிக்கொடுக்கவேணும் போலக்கிடக்கு ருக்குமணி!'  என்றார் ஆனந்தன்.
அப்;போ ருக்குமணியின் மூத்தமகள்  உமா,
'அம்மா, நாங்கள் ஜேர்மனிக்கு வந்தது, பரீஸ், லூட்ஸ், கொலன்ட், சுவிஸ் எல்லாம் சுத்திப்பார்த்து என்ஜோய் பண்ணத் தானே!'

'! அதை ஏன் இப்ப கேட்கிறாய்?' கேட்டாள் ருக்குமணி.
அதற்கு மகள் கஜேந்தினி பதில் சொன்னாள்,
'நாங்கள் எங்கையும் போகவேண்டாம்... மாமா, மாமி கல்யாணத்தை நடத்தி வைப்போம்!'

'நீங்கள் என்ன சொல்லுறீங்கள்...?' ருக்குமணி கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

'முள்ளுக் காலிலே குத்திக் கிடக்கும்போது, மனிசன் தீர்த்த யாத்திரை போவானா? முதலிலை முள்ளை எடுக்கிற வழியைத் தான் பார்ப்பான். அதுதான் மச்சானுக்கும் தங்கச்சிக்கும் முள்ளாக இருந்து குத்துகிற பிரச்சனைகாரர்களைச் சந்திப்பம், பிரச்சனைகளை அகற்றிக் கலியாணத்தை நடத்தி வைப்பம்!'

'ஓகே!' என்று ஒருமித்த குரல் வானுக்குள் குதூகலமாக ஒலித்தது.

சிவரஞ்சினியின் முகத்தில்; கருமேகத்தைக் கடந்துவரும்; வெண்ணிலவு போல அழகுஒளி விரிந்தது.
'இப்படியும் ஒரு நல்மனம்கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களா?' என்று அவள் மனம் ஆச்சரியத்தில் மூழ்கியது.
தான் யார் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் இருந்தவள் சிவரஞ்சினி.
குமரன், ரமணன் இவர்களின்; அக்கா என்று இவ்வளவு நாளும் இருந்தாள். அவர்களால் அவளுக்கு என்; செய்யமுடிந்தது? அக்கா என்று அன்பு கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத கோழைகள் அவர்கள்.

அவளிடம் எவ்வளவோ ஆற்றல் இருந்தும் இயந்திரங்கள் பேசும் ஜேர்மனிக்கு வந்ததால் பூட்டி வைத்த கூண்டுக்கிளி போலச் சிறைப்பட்டுக் கிடக்கிறாள்.

இளமை, அழகு, கல்வி, நாவன்மை, பொறுமை, நல்லொழுக்கம், பண்பு எல்லாம் இருந்தும் அவளுக்கு ஒரு வாழ்க்கையின்றி அடைபட்டுக் கிடக்கின்றாள்.

மண்பானை, ஒளிவிளக்கை மறைத்து வைத்திருப்பது போல அவளைச் சுற்றியுள்ளவர்கள், அவளை உய்யவிடவில்லை. யானை ஒன்று வந்தது, அதன் மூச்சுப்பட்டு பானை சிதறி உடைந்தது. மூடியிருந்த விளக்கு சுடர்விட்டுத் துள்ளி எழுந்தது.

ஆம்! தொண்டர் என்ற மனிதரை அவள் சந்திக்காவிட்டால், அவளது கதை பானைக்குள் மூடிய விளக்காகி இருக்கும். அவள் இளமை, அழகு, கல்வி எல்லாம் பயனற்றுப் போயிருக்கும். ஆனால் கும்பிட்ட கடவுள் சும்மா இருக்கவிடமாட்டார். தூசியையும் தூணாக்கி உயர்த்த அவரால் முடியும். எதுக்கும் காலம் வரவேண்டும், முளையிலே அழிந்த மரங்களும் உண்டு... கல்லை உடைத்து முளைவிட்ட மரங்களும் உண்டு.
முயற்சி... விடாமுயற்சி, வெற்றியைப் பெற்றுத்தரும். சோர்வு மனத் தளர்வையும் பயத்தையும் தந்து தோல்வியையும் தழுவும்.

தற்கொலை செய்யப் போனாள் சிவரஞ்சினி, அவள் போய் இருந்தால், யானை வந்து பாiனையை உடைக்கமுன் அணைந்த விளக்குப் போன்று, அவள் வாழ்வு பயனற்றுப் போயிருக்கும்.
நாராயணனின் நாமத்தை நினைப்பவர்கள் வாழ்க்கையிலே சோதனைகள் வரலாம்... ஆனால் தோல்வி கிடையாது. வெற்றி முழக்கம்தான் என்றும் ஒலிக்கும்.

ருக்குமணி தொண்டருக்குச் சொன்னாள்,
'அடுத்த நல்ல முகூர்த்தத்தில் உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம்...!
குமரனுக்கும் ரமணனுக்கும் சொல்லி, அவர்களின் வசதியைக் கேட்டுத்தான் நாங்கள் முடிவெடுக்க வேணும்.
நீர் என்ன சொல்லுறீர் சிவரஞ்சினி?' அவள் அபிப்பிராயத்தையும் தெரிந்துகொள்ளக் கேட்டாள் ருக்குமணி.

'தம்பிகளோடை கதைச்சுப் பேசி வைக்கிறது நல்லதென்று நினைக்கிறன்!' என்றாள் சிவரஞ்சினி.

'சரி! ஓகே செய்வம்!'

அப்போ ஆனந்தன் சொன்னார்.
'தங்கச்சி!' என்று சிவரஞ்சினியை அன்போடு அழைத்து,
'நாங்கள் தெளிவா யோசித்துத்தான் ஒன்றைச் செய்யத் தொடங்குவம்! தொடங்கினால் அதை முடிச்சுப்போட்டுத்தான் அடுத்த காரியம். நீர் ஒன்றுக்கும் பயப்படாதையும் அண்ணை நான் இருக்கிறன்!' என்றார்.

யாரோ ஒருவர்... அவள் கல்யாணம் செய்யப்போகிறவரின் மைத்துனர்... அவர் அவளைப் பார்த்து, 'அண்ணை நான் இருக்கிறன்!' என்று சொல்ல, அவள் நெஞ்சிலே ஒரு இனம் தெரியாத எழுச்சி, அணையை உடைத்து 'குபுகுபு' என்று பாயும் புனல் போல எழுந்தது.

நாவால் உரைக்கும் சில வார்த்தைகளுக்குச் சொல்லுதற்குரிய பலம் இருக்கும். வார்த்தைகள் மனிதனை ஆள்வன! அன்பான, பற்றுமிக்க வார்த்தைகளை உபயோகிக்கும்போது கேட்பவருக்கு உற்சாகமும் ஆர்வமும் வாழ்க்கையிற்பிடிப்பும் ஏற்படுகின்றது.

இரவு குமரன் வீட்டுக்கு எல்லோரும் போவது என்ற முடிவுடன் சிவரஞ்சினியை வீட்டில் இறக்கிவிட்டு, அவர்கள் தொண்டர் வீட்டுக்குச் சென்றார்கள்.

சிவரஞ்சினி வருவதைக் கண்டு குமரன், விமானநிலையம் போய் வந்த புதினங்களை விசாரித்தான். அவளும் ருக்குமணி குடும்பத்தின் வரவையும் அவர்கள் கலகலப்பான சுபாவத்தையும் எடுத்துச்சொன்னாள்.

'தேத்தண்ணி போட்டுத் தரட்டா?' கேட்டாள் சிவரஞ்சினி.

'மாலதி குசினிக்கதவைப் பூட்டிப்போட்டுப் போட்டாள்' மெதுவாகச் சொன்னான் குமரன்.

'!' என்ற அவள் சொல்லில் கவலையுடன் கூடிய ஆச்சரியம் ஒலித்தது.
'சொந்தவீட்டில் புருஸன் உள்ளே போகமுடியாதபடி கதவைப் பூட்டிப்போட்டுப் போக, இவளுக்கு என்ன நெஞ்சழுத்தம்?' என்;று நினைத்த அவளுக்குக் கோபம் வந்தது.
கதவைப் பூட்டிவிட்டு மனிசி போயிட்டாள் என்றுவிட்டு, கையால் ஆகாதவன் போலிருக்கும் தம்பியைப் பார்க்க, ஒருபக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் வெறுப்பாகவும் இருந்தது.

'கதவை உதைத்து, பூட்டை உடைத்துத் திறக்கமாட்டானா இவன்! வெளியே போனவளை, நில் வெளியே! என்று வீட்டுக்கதவைப் பூட்டிவைக்க இவனால் முடியாதா?
செவி நீண்டு வளர்ந்துவிட்டதால் வெள்ளாட்டுக்கு அது கொம்பாகி விடுமா?' என்று அவள் மனதுக்குள் கசந்தாள்.

'மத்தியானம் சாப்பிட பிற்சா வாங்கப் போறன், உங்களுக்கும் வாங்கிறன்!' கேட்டான் குமரன்.
மறுத்தால் கவலைப்படுவான்  என்று நினைத்துச் சம்மதித்தவள்,
'இரவைக்கு அவற்றை அக்காவை எல்லாம் வர இருக்கினம்... பஞ்சியாக் கிடக்கு, கொஞ்சம் படுக்கப்போறன்!' என்றுவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.


36 
ஜெயனைப் பாடசாலையிலிருந்து கூட்டிவர வேண்டுமென்று மணிக்கூட்டுக்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்திருந்த சிவரஞ்சினி, அலாம் அடிக்க முதலே எழுந்துவிட்டாள். பகலில் படுத்துப் பழக்கமில்லாதவள்;, இரவு நித்திரை இல்லாததால் உடற்சோர்வு நீங்கட்டும் என்று படுக்கைக்குச் சென்றும் அது பெரிதாகப் பலனளிக்கவில்லை. போதாததுக்குத் தலையிடியும் தொடங்கியிருந்தது.
எழுந்து வெளிக்கிட்டு மருமகன் படிக்கும் பாடசாலைக்குப் போனவள், அங்கு அவனைக் கூட்டிப் போகக் கண்ணன் வந்து நிற்பதைக் கண்டாள். ஜெயன் யாருடன் போவது என்று தெரியாமற் தடுமாறினான்.
மாலதி தொலைபேசியில் சொன்னதைக் கண்ணன் கூறி, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு,
'சறோவும் சமரனும் பள்ளிக்கூடத்தாலை எங்கடை வீட்டுக்குத் தான் வருவார்கள், மாலதி வேலை முடிந்து வரும்போது கூட்டிக்கொண்டு வருவா!' என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

சிவரஞ்சினிக்கு இது ஒரு புது அனுபவம். மச்சாள் மாலதியின் இன்னொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று நினைத்தபடி, வீட்டுக்குத் திரும்பி நடந்தாள்.

இருசாராருக்கு இடையில் தொடரும் நாய்கடி பூனைகடிச் சண்டை நாளாகத் தானாக ஓய வேண்டும் இல்லாவிடில் அது ஒருநாள் பூகம்பம் போல் குமுறி வெடித்துப் பெரும் அழிவுகளுடன்; அமைதி நிலையடையும்.

கவலையுடன் நடந்த அவள், கண்ணபிரானிடம் ஒன்று கேட்டாள்.
'பாண்டவருக்குத் தூது சென்ற மாதவா.... எனக்காக நீ ஒருக்கா மாலதியிடம் தூது போவாயா? அவள் என்ன ஆட்டம் ஆடுகிறாள்! இப்படியே போனால் தம்பியும் அவளும் பிரிந்து குடும்பம் பாழாகிவிடும்.... அறிவுரை சொல்ல நீ வர வேண்டும் கண்ணா!' என்று பிரார்த்திக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அங்கு குமரன் பிள்ளைகளைக் காணவில்லை என்ற கவலையுடன் வீட்டுவாசலில் நின்றான்.
அவனுக்குத் தான் அறிந்தவற்றைக் கூறிய சிவரஞ்சினி,
'தம்பி! நீ பொறுமையாக இரடா, அவ செய்;யிறதைச் செய்து, முடிக்கிறதை முடிக்கட்டும்.' என்று குமரனுக்கு ஆறுதல் வழங்கினாள்.

'இண்டைக்கு தொண்டராக்கள் வருவது நல்லதில்லை அக்கா! இவள் இருக்கிற ஆத்திரத்திலை என்ன செய்வாளோ தெரியாது. இரண்டொரு நாட்கள் போகட்டும்.'
தம்பியார் சொல்வது சிவரஞ்சினிக்குச் சரியெனப்பட்டது.

'நான் அவைக்கு ரெலிபோனிலை சொல்லுறன், நீ இப்ப என்ன செய்யப்போறாய்?' என்று கேட்டாள் அவள்.
அவன் பதிலின்றி நின்றான்.

'உங்களுக்குள்ளை வாற சண்டைக்கு நான்தான் முதற்காரணம்!'

'அப்பிடிச் சொல்லாதேங்கோ! தொடக்கத்திலிருந்தே மாலதிதான், தான் எங்களைவிட உசத்தி என்ற நினைப்பில், தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் செய்யிறதுதான் சரி என்று நினைக்கிறதாலை வாறதுதான் இந்தப் பிரச்சனையள்!'

'நான் இனியும் இங்கை இருக்கிறது நல்லதில்லை, ஒரு நல்லநாள் பார்த்து அவர் வீடடுக்குப் போய் இருக்கப்போறன்... எனக்கு வேறைவழி தெரியேல்லை!

'நீங்கள் போயிருங்கோ! கல்யாணத்துக்கு வேண்டிய ஒழுங்கை நான் செய்யிறன். என்ன செய்ய...? கொஞ்சநாளா எல்லாம் ஒரே பிரச்சனையாக்கிடக்கு, தம்பியவை லண்டன் போறதெண்டே நிற்கினம், அதுவும் இவளாலைதான்.'

'குமரன்! எதிலுமே ஆசை வைக்கக்கூடாது, ஆசை கவலைகளைத் தான்  தோற்;றுவிக்கும்... நடக்கிறது நடக்கட்டும் விடு! அவர் அவருக்கு என்று எழுதியபடிதான் எல்லாம் நடக்கும்.' கூறிவிட்டு, சிவரஞ்சினி தன் அறைக்கு நடந்தாள்.

சிறிது நேரத்தில் மாலதியும் பிள்ளைகளும் வந்து இறங்கினர்.
பிள்ளைகள் வந்து  ஹோலுக்குள் இருந்த குமரனுடன்  உட்கார்ந்தார்கள்.
மாலதி முகத்தை 'ம்' என்று வைத்துக்கொண்டு உள்ளே போய் விட்டாள்.

'அம்மாவுக்கு இன்னும் உங்களிலை கோபம்!' என்றாள் மூத்த மகள்; சறோ.

'அம்மாவுக்கு அடிச்சால் கோபம் வரும்தானே!' சொன்னான் ஜெயன்.

'அப்பா வேணுமென்று அடிக்கேல்லை, மாமியைப்பற்றித் தப்புத்தப்பா அம்மா சொன்னதாலைதான் அப்பா அடிச்சவர்!' சொன்னான் சமரன்.

'அப்ப ஏன் அம்மா கோவிக்கிறா?' கேட்டான் ஜெயன்.

'அம்மா எடுத்ததுக்கெல்லாம் கோவிப்பா! இது வழக்கமான ஒன்றுதானே!' கூறினான் குமரன்.


37

குமரன் வீட்டில்; சண்டைப்புயல் இன்னும் தணியவில்லை. சமையல் அறையும் படுக்கையறையும் மாலதி வேலைக்குப் போய் வரும் வரை பூட்டியே இருக்கும்.
பிள்ளைகள் பாடசாலை முடிந்து கண்ணன் வீட்டுக்குச் சென்று மாலதி வரும்போது அவளுடன் வருவார்கள்.
குமரன் சோபாவிலும் ஜெயனின் அறையிலும் என மாறிமாறிப் படுத்து, ஒழுங்கான படுக்கையின்றி நாரிப்பிடிப்பு ஏற்பட்டு, குனிய நிமிர முடியாமல் நின்றான். இதையறிந்த தம்பி ரமணன், குமரனை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுத்து, தங்கள் வீட்;டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி அங்கு தங்க வைத்தான். ரமணனின் மனைவி பூவிழி அவனை அன்போடு உபசரித்து, நன்கு கவனித்தாள்.

இது ஒன்றும் மாலதிக்குத் தெரியாது. அவள் இலங்கையில் இருக்கும் தன் தகப்பனுடன் தொலைபேசியில் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல்பற்றிக்கூறி, தானும் பிள்ளைகளும் அங்கு வரப்போவதாகக் கூறினாள்.
தகப்பன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

'குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்... அதுக்காகக் கோபித்துக்கொண்டு, பெட்டி படுக்;கை யோடு பிரிந்து போகின்ற நினைப்புகள் ஒருகாலமும் இருக்கக் கூடாது, அது அழகல்ல.' என்று நறுக்கென்று கூறிவிட்டார்.

இப்படி ஒருநாளும் மாலதியுடன் அவள் தகப்பன் கதைத்தது இல்லை. இதனால் அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
'என்னப்பா நீங்கள்...! அவரைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.' என்று அழத் தொடங்கினாள்.

'நீ அழ எனக்கும் அழுகை வருகுது, உன் அம்மாவும் கேட்டு அழப்;போறா, ஆனால் அது ஒரு பெரிய விசயமில்லை. நீ அழுது அடம்பிடிக்க, வேணுமெண்டது எல்லாம் வாங்கித்தந்தோம். உன்; கலியாணவிடயத்தில் கூட நீதான் விரும்பி ஒற்றைக்காலில் நின்று, அழுதுகுழறி, சாப்பிடாமல் இருந்து எங்களைச் சம்மதிக்க வைச்சனி! மருமகன் தங்கமானபிள்ளை என்று பிறகு தெரிஞ்சு உண்மையிலையே எங்களுக்கு நல்ல சந்தோசம்.

இப்ப உனக்குக் காசுப்பிரச்சனை ஏதாவதென்றால் சொல்லு, அனுப்பிறன், ஆனால் தனியாப் போறன் என்று மட்டும் சொல்லாதை! அப்பிடி ஏதுமெண்டா அம்மாவையும் என்னையும் நீ உயிரோடு பார்க்கமாட்டாய்!' என்று அவர்  வெட்டொன்று துண்டிரண்டு என்பது போல, தன் மகளிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

மாலதி, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோலத் தடுமாறினாள். 'அப்பாவா இப்பிடிச் சொல்லுறார்? அவளால் நம்பமுடியவில்லை. எள் என்றால் எண்ணெயாய்க் கொண்டு வரும் அப்பாவா எனக்கு மாறாகப் பதில் சொல்கிறார்?' என்று கவலையும்  கோபமும் எழ, என்ன செய்வதென்று தெரியாமல் இடிந்துபோய் உட்கார்ந்திருந்;தாள்.

குமரனைச் சில நாட்களாகக் காணவில்லை. பிள்ளைகள், 'அப்பா எங்கை' என்று கேள்விக்கு மேல் கேள்விகேட்டு அரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
'அப்பாவில் பிழையில்லை' என்று பிள்ளைகள் அவளுக்குப் புத்தி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

எவ்வளவோ கவலைகள் தனக்குள் இருந்தும்; வீட்டுக்குள் கலகலப்பும் உபசரிப்புமாய் வீட்டுவேலைகளைத் தானே இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்த மச்;சாள் சிவரஞ்சினி அவளும் இப்போ வீட்டிலில்லை.
மாலதியின் மனம் குழம்பத் தொடங்கியது.

38


( மிகுதி, பகுதி - 3 இல் உள்ளது . )


தொடர்ந்து  வாசிக்க  
Älterer post என்பதில் கிளிக் பண்ணுக .


Keine Kommentare: