Mittwoch, 4. Mai 2011

பகுதி-14



பக்கம் 144                                                  09.08.2012


'எப்பிடியடி...! நீ ஒரு பொம்பிளை எண்டதிலை எங்களோடை இருக்கிறாய்... ஆரும் ஒண்டும் கதைக்க முடியாது. ஒரு ஆம்பிளையை இந்த வீட்டிலை அனுமதிச்சால் பாக்கிறவங்கள் பத்துவிதமா முடிச்சுப் போடுவாங்கள்!'

'பரதனை உங்களுக்குத் தெரியும்தானே அக்கா!'

'பரதனைத் தெரியும், நல்லாத் தெரியும்.'

'சொன்னபடி கேட்பார், சோலிக்கு வரமாட்டார், பாவம் எவ்வளவு கெட்டிக்காரன்... நல்ல எண்ணங்கள் நிறைந்தவர், பொருத்தமில்லாத பொம்பிளையைக் கட்டினதாலை ஏமாந்து, வாழ்க்கையை இழந்து... பெத்தபிள்ளைகள் டேய்! என்று ஏசுமளவுக்கு பாதாளத்தில் தள்ளப் பட்டு வீழ்ந்து கிடக்கிறார். அந்த மனிசனை நிமிர்த்திவிட உங்களாலை முடியும்.'

'யசோ நீ நல்லாக் கதைக்கிறாய்! ஆமா, அவரைப் பற்றி இவ்வளவு
விபரங்கள் எப்பிடித் தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்?'

'கோகுலன் கொஞ்சம் சொன்னவர், மிகுதியை நேரில் சந்திச்சுத் தெரிஞ்சு கொண்டனான்.'

'பொல்லாத துணிச்சல்காரியா இருக்கிறாய்!'

'பெண்டாட்டியை விட்டிட்டிருக்கிற ஆம்பிளையள் எல்லாரும் என்ன பொல்லாதவையே...?'

'அப்பிடிச் சொன்னனானே?'

'அப்ப ஏன் யோசிக்கிறீங்கள்..? நானும், நீங்களும் பெட்றூமுக்கை படுக்கலாம், பரதன் என்ரை றூமுக்கை இருக்கலாம்.. பிள்ளையளும் சந்தோசப்படுவாங்கள்! ஓமெண்டு சொல்லுங்கோ அக்கா!' என்று கெஞ்சினாள் யசோ.

'எடி! பொம்பிளையள் இரண்டு பேர் நாங்கள் இருக்கிற வீட்டிலை ஒரு ஆம்பிளை... ஒரு சொந்தபந்தமில்லை... இருக்க வைச்சால் பாக்கிற சனத்துக்கு என்ன பதில் சொல்லுறது...?'

'என்னக்கா கேள்வியிது? சனத்துக்குப்பயந்து கொண்டிருக்கிறியள்.'

'மானம், மரியாதை எண்டதுக்குத் தலை வணங்கத்தானே வேணும்!'

'தலை வணங்கிறம்தானே அக்கா, சமுதாயத்துக்கு மாறா நடக்கிறமே... இல்லைத்தானே! நீங்கள் கணவரை இழந்து இத்தனை ஆண்டுகளாய் தனித்து வாழுறீங்கள். பரதனின் மனைவி இன்னொருத்தனோடை ஓடிப்போய்  விவாகரத்துச் செய்து, வேறொருத்தனைக் கல்யாணம் செய்து, பிள்ளையும் பெற்றுச் சந்தோசமா இருக்கிறாள். நீங்கள் இரண்டுபேரும் கல்யாணம் செய்யிறதிலை என்ன பிழையிருக்கு....?'

'நான்தானே சொல்லியிட்டன்... கலியாணம் செய்ய என்னாலை முடியாதெண்டு...!'

'நீங்கள் சொன்னனீங்கள்.. உங்கடை மனதிலை இன்னொரு ஆம்பிளைக்கு இடமில்லையெண்டு... அதைக் காப்பாற்றுங்கோ! ஆனால் கலியாணம் செய்து ஊர்வாயை மூடுங்கோ! அவரும், நீங்களும் நல்ல பிறன்ட்ஸாக இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ! சமூகத்திலை மதிப்போடை, கௌரவமா இருக்கலாம், எல்லாத்தையும்விட பிள்ளையளுக்குப் பெரிய பாதுகாப்பு. இதையெல்லாம் ஏன் சிந்திக்க மாட்டன் எண்டுறியள்?
செத்தவை திரும்பி வரப்போறேல்லை, உயிரோடை இருப்பவை யின்ரை சோகத்தைப் பகிர்ந்து கொள்வதாக நினையுங்கோவன்!'


ஜானகி பதில் சொல்லாமல் இருந்தாள்.

'அக்கா! அடுத்தவைக்குப் பயந்து நாங்கள் வாழமுடியாது. லவன், குசனுக்கும் பரதனிலை நல்ல விருப்பம். உங்களுக்கே தெரியும்.'

'இரண்டாம்; கலியாணம் எண்டதை என்னாலை நினைச்சுக்கூடப் பார்க்க முடியேல்லை.'

'ஏன் நினைக்கிறீங்கள்...ஓமெண்டு செய்யுங்கோ! ஊர்உலகத்திலை நடக்காததே... பிளீஸ் அக்கா!'

'உன்னட்டையிருந்து லேசிலை தப்ப முடியாது, எல்லாவித ஆயுதங்க ளையும் காட்டி என்ரை வாயை அடைச்சுப் போட்டாய். எண்டாலும் என்னாலை இப்ப பதில் சொல்ல முடியாது. என்னை வற்புறுத்தாதை!' என்றாள் ஜானகி.

அதற்கு மேலும் இந்த விடயத்தைப்பற்றி அவளுடன் கதைத்துப் பிரயோசனமில்லை என்று நினைத்தவளாய்,
'ஓ.கே, இனி உங்கடை விருப்பம்.. ஆனால் இராகுலனுக்கு ஒரு பாடம் படிப்பிக்காட்டி அவன் உங்களுக்குத் தொல்லை தந்து கொண்டேதான் இருப்பான்.' என்று எச்சரித்தவளாய் தன் அறைக்குச் சென்றாள் யசோ.


                      ---------

'ரதிக்குப் பெரிய வாய் தானேயொழிய, வேறை ஒண்டுமில்லை. நாளைக்கே வேலை எடுக்கலாம் எண்டமாதிரி விளாசித்தள்ளிவிட்டு, இண்டைக்குச் சொல்லுறாள்;, கொஞ்சநாள் பொறுத்து, பிறகு வந்து கேட்டுப்பாக்கட்டாம்.' என்றாள் வேணி கண்ணனைப் பார்த்து.
அவன் வேலையால் வந்து பாத்றூமுக்குள் உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தான்.

'நீங்கள் எங்கையாவது கேட்டுப்பாருங்கோ!' என்று குரலை இறக்கிக் கேட்டாள்  வேணி.

'பேசாமல் கிட! வேலையும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம்' என்று எச்சரித்தான் கண்ணன்.

'நான் இங்கை முழுநாளும் என்னப்பா செய்யிறது?'

'வீட்டுவேலையைச் செய்! நேரம் தன்னாலை பறந்து போயிடும். பிள்ளை பிறந்தால் அதைக் கவனிக்கவே நேரம் பத்தாது.'

'இப்ப ஏன் பிள்ளைக்கதையைத் தொடங்குறீங்கள்? நான் இப்போதைக்குப் பிள்ளை வேண்டாமெண்டு சொல்லிப்போட்டன். என்னை வேலைக்குப் போக ஓமெண்டு விடுங்கோ! இல்லாட்டிப் பறவாயில்லை, நான் போவன்!'

'போ! நல்லாப்போ! கையோடை ஒரு வீட்டையும் பார்! அங்கேயே போய் இரு! இஞ்சை வரவேண்டாம்.'

'என்ன வேறை வீடு பாக்கட்டோ...? இப்பிடிச் சொன்னாப் பயந்திடுவன் எண்டு பாக்கிறீங்களோ...?'

'உன்னைப் பயப்பிடுத்தி எனக்கு என்ன லாபம்.. ஒழுங்கா வீட்டிலை இருந்து, பிள்ளையைப் பெத்து வளர்! நான் வேலைக்குப் போய் உழைச்சுத்தாறன்.'

'கலியாணம் கட்டின உடனை பிள்ளையைப் பெத்திட்டு, வீட்டுக்குள்ளை அடைஞ்சு கிடக்கட்டே...?'

'ஏன் அடைஞ்சு கிடக்கிறாய்? பிள்ளையைக் கூட்டிக்கொண்டு பார்க்கிற்குப் போ!'

'என்னப்பா கிரந்தக்கதை கதைக்கிறீங்கள்...?'

'வேலையாலை வந்த என்னை கொஞ்சம் சும்மா இருக்கவிடு! அரிப்பெட்டி போட்டுக் கொண்டிருக்காதை!'

'நான் கதைக்கிறது உங்களுக்கு அரிப்பெட்டி போடுற மாதிரி இருக்கோ?'

  
'அரிப்பெட்டியைவிட, மோசமாக் கிடக்கு! பின்னையென்ன வேலைக்குப் போகவேண்டாமெண்டால் கேக்கவேணும். அதை விட்டிட்டுத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தா...?'

'ஏன் வேண்டாமெண்டுறீங்கள்..!'

'கலியாணம் கட்டினால் நேரகாலத்துக்குப் பிள்ளையைப் பெற வேணும்.'

'இரண்டுவருசம் வேலை செய்திட்டுப் பிறகு பெத்தாலென்ன...?'

'என்னோடை அப்ப வந்தவங்களைப் பார்! இரண்டு, மூண்டு பிள்ளையளைப் பெத்து, நல்லா முன்னேறி இருக்கிறாங்கள். நாங்கள் இன்னும்  நாளைப் பிற்போட்டா...?'

'ஏன் நான் வேலைக்குப் போனால் காசு வராதா...முன்னேற மாட்டமா? என்ன பாவம் செய்து உங்களிட்டை வந்து கழுத்தை நீட்டினேனோ தெரியாது! சிக்... இந்த உலகத்திலை எத்தினை வடிவான வசதியான பெடியன்கள் இருக்க, உங்களைக்; கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டிக்கிடக்கு!'

'ஏன் மாரடிக்கிறாய்... விட்டிட்டுப் போவன். இஞ்சை நீ இல்லையெண்டு  ஆர் அழுகிறது...?'

'கழுத்திலை தாலியைக் கட்டி, சீதனத்தையும் வாங்கிப் பொக்கற்றுக்கை போட்டுக்கொண்டு, போற எண்டாப் போகட்டோ...? நீங்கள்;  எல்லாம் ஒரு ஆம்பிளை, உங்களுக்கெல்லாம் ஒரு கலியாணம்...' என்றவள் கதவை அடிச்சுச் சாத்திவிட்டுப் போனாள்.

ஒரு பெருமூச்சு விட்டான் கண்ணன். கல்யாணம் என்றது எவ்வளவு சுகமான இன்பமளிக்கும் ஒரு நிகழ்வு... அவனைப் பொறுத்தவரை ஈட்டியும், வாளுமாக... இரவும், பகலும் புரியும் யுத்தகளமாக இருந்தது.

கதவைக் கோபத்தில் சாத்திவிட்டுப் போனவள், என்ன செய்யப் போறாள்... நிஜமாகப் போனால்... என்ற பயம் வளர, அவசரமாக எட்டிப் பார்த்தான். வேணி சமையலறைக்குள் சாப்பாடு சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'சாப்பிட்டுப் படுக்கப் போறீங்களோ?' என்று கேட்டாள்.
'இல்லை... ஏன் கேக்கிறீர்...?' என்றான்.

'அண்ணை சிலோனாலை வந்திட்டார். போட்டு வரலாமெண்டு நினைச்சன்.'

'போட்டு வருவம்!' என்று சாப்பிட உட்கார்ந்தான். 
'இவள் ஒரு வித்தியாசமானவள், அடியாபிடியா எண்டாள், இப்ப அறுசுவையுடன் உணவு படைக்கிறாளே! நல்லாயிருக்கு எண்டு சொல்லப்போனால் நக்கலாகச் சொல்லுறதாய் நினைத்து, பிறகும் சண்டையை வளர்ப்பாள்.' என்று எண்ணியவனாய், மௌனமாகச் சாப்பிட்டான்.
                       ----------

கோகுலன் தனக்கு வேண்டியவர்களுக்கு ஏதோ அன்பளிப்புகள் கொழும்பிலிருந்து கொண்டு வந்திருந்தான்.

ஜானகிக்;கும், யசோவுக்கும் கோகுலனின் கலியாணப்பேச்சுக் குழம்பியது பெரும் வேதனையளித்தது. கோகுலனைச் சமாதானப் படுத்த ஆறுதல்வார்த்தைகளை இருவரும் மாறிமாறிக் கூறினார்கள்.

கோகுலன் தனக்குள் கவலை இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. சிரித்துச் சமாளித்தான்.

அப்போ கண்ணனும், வாணியும்  வீட்டுக்கு வந்தார்கள்.
'வாங்கோ! வாங்கோ!' என்று அவர்களை அன்பாக வரவேற்றாள் ஜானகி.

ஜானகி தேநீர் போட எழும்ப, அவளை இருக்கும்படி சொல்லிவிட்டு, யசோ சமையலறைக்குச் சென்று தண்ணியைக் கொதிக்க வைத்தாள்.

'அவர்கள் சொந்தக்காரர்கள், சுதந்திரமாகக் கதைக்கட்டும்,' என்று அவள் நினைத்தாள்.
'கண்ணனின் முன்னுக்கு நான் ஏன் இருக்க வேணும்? அவரும் சங்கடப்படலாம்... ஏன் தேவையில்லாத மனக்கஸ்டங்கள்...' என்றது அவள் மனசு.

'அம்மா சங்கிலி தந்து விட்டவவே...?' கேட்டாள் வேணி.

'உனக்கேன் அதை...? கிடக்கிறது பத்தாதே...!' கேட்டான் கோகுலன்.

'கலியாணம் செய்யேக்கை தாறன் எண்டவ! தரவேண்டியதுதானே! அவளுக்கு எல்லாம் கிடக்கு! குடுக்காதேங்கோ எண்டு நீயே சொல்லியிருப்பாய்.'
'ஏன் நான் அப்பிடிச் சொல்லுறன்! என்னிலை பழி போடுறாய்!'

'அவன் ஏதோ பிரச்சனையிலை இருக்கிறான். நீ சங்கிலியும், அதுவும், இதுவும் எண்டுகொண்டு நிக்கிறாய்?' அதட்டினாள் ஜானகி.

'அதுக்கும், இதுக்கும் என்னக்கா...? தாற எண்டதைத் தரலாம் தானே! கிழடுகளுக்குக் கூட இன்னும் ஆசை!'

'உனக்குத்தர வைச்சிருந்ததெண்டு அம்மா சொன்னவ... பிறகு...' என்று நிறுத்தினான் கோகுலன்.
'பிறகு என்னவாம்.... மருமகளுக்குக் குடுக்கப்போறாவாமே!'

'எந்த மருமகளுக்கு...?' என்று குறுக்கிட்டாள் ஜானகி.

'அண்ணைக்கு வாறவவுக்குத்தான்!' என்றாள் அறுத்துறுத்து.
கோகுலன் பதில் சொல்லாமல், வெறுப்போடு தலையாட்டினான்.

'ஏனடி இப்பிடி நடக்கிறாய்? உன்ரை சொத்தை எங்களுக்கேன்? என்ன இது... இவள் இப்பிடிக் கேக்கிறாள்....!' என்று கண்ணனைப் பார்த்தான் கோகுலன்.

'எனக்கு ஒண்டும் தெரியாது... இது உங்கடை சகோதரங்களின்ரை பிரச்சனை, அம்மா சங்கிலி குடுத்துவிடுவா என்று வேணி சொன்னவ! அதுக்கு மேலை எனக்குத் தெரியாது.' என்று தான் தப்ப முயன்றான் அவன்.

'என்ன உங்களுக்குத் தெரியாது எண்டுறியள்... அம்மா எழுதின கடிதம் உங்களுக்குக் காட்டேல்லையே..!' உறுமினாள் வேணி.

அப்போ தேநீருடன் யசோ வந்தாள்.
'பெண்கள் அடங்கி நடக்க வேண்டும் எண்டு சொல்லேல்லை,  அடக்கமாயிருந்தால் அது பெண்மையைப் பெருமைப்படுத்தும்... இந்த யசோ மாதிரி.' என்று கண்ணனின் அறிவு ஒரு கோடு கீறிக் காட்டியது.

தேநீரைப் பரிமாறிவிட்டு யசோ திரும்பி நடந்தாள்.
'இரு! எங்கை போறாய்?' என்று அவளைத் தடுத்தாள் ஜானகி.

'கதையுங்கோ! எனக்குக் கொஞ்ச வேலையிருக்கு! முடிச்சிட்டு வாறன் அக்கா!' என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் போவதைப் பார்த்தான் கண்ணன், அந்தநடையில்கூட ஒரு வித பொறுமை தெரிந்தது.

'என்ன யோசிக்கிறீங்கள்....?' என்று முழங்கையால் கண்ணனுக்கு இடித்தாள்;  வேணி.

'ஓ'.... ஓ!' என்று புலனை மீண்டும் பேச்சுக்கு மீளச் செலுத்திய அவன்,
'கடிதத்திலை எழுதிக்கிடக்கு! அதுக்கென்ன இப்ப..?' என்றான் மனைவியின் குணம் தெரிந்தவனாய்.

'சங்கிலி இப்ப அம்மாட்டை இல்லை, முக்கியமான ஒண்டுக்குக் குடுத்திட்டா! வேணுமெண்டாச்சொல்லு நான் வாங்கித்தாறன்...!' என்றான் கோகுலன்.

'சும்மா சொல்லுவீங்கள்... தாறன்.... வாங்கித்தாறன் எண்டு...! ஏன் தேவையில்லாமல்.... இல்லையெண்டா இல்லை, விசயம் முடிஞ்சுது, நானும் கேக்கமாட்டன்.'

'வேணி! இது அம்மாவுக்கும், உனக்கும் உள்ள பிரச்சினை... வேணுமெண்டா ரெலிபோன் நம்பர் கிடக்கு! எடுத்துக்கதை.' என்றான் கோகுலன் அமைதியிழந்தவனாய்.

'வீட்டிலையிருந்து வெளிக்கிடேக்கை இப்பிடியொரு பிரச்சனையோடை வாறதெண்டா, நான் அங்கேயே இருந்திருப்பன்.' என்றான் கண்ணன் வேணியைப்  பார்த்து.

'நான் எங்கை பிரச்சனையோடை வந்தனான்...? எனக்குத் தாறதெண்டதைக் கேட்டா, ஆதுக்குப் பேர் பிரச்சனையே...அங்..!' என்று கண்ணனின் வாயை அடக்கிவிட்டு, கோகுலனைப் பார்த்து,
'ஏன் கலியாணம் குழம்பினது?' என்று கேட்டாள்.

'பொம்பிளை வீட்டுக்காரங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையாம், மாட்டன் எண்டிட்டினம்.'

'ஏன் பிடிக்கேல்லை...? நல்லாத்தானே இருக்கிறாய்;.' என்றாள் வேணி.

'உங்களை  மாதிரி ஒரு மாப்பிளைக்கு அவை குடுத்தெல்லே வைச்சிருக்க வேணும்.' என்றான் கண்ணன் தானும் ஏதாவது கதைக்க வேண்டும் என்ற நிலையில்.

'அவைக்கு விருப்பமில்லையாம், அவள் ரீச்சராக இருக்கிறாள், ஊருக்கை மாப்பிள்ளை கிடைச்சா, அங்கையே இருக்கலாமெண்ட நினைப்போ... என்னவோ...!' என்று உண்மையை மறைக்கச் சொன்னாள் ஜானகி.

'ஏனக்கா! உள்ளதைச் சொல்லுங்கோவன், நான் கலியாணம் செய்யிறது சிலபேருக்குப் பிடிக்கேல்லை, இஞ்சையிருந்தே பொம்பிளை வீட்டுக்காரருக்கு என்னைப்பற்றி எழுதிச்சினமோ, இல்லாட்டி ரெலிபோனிலை சொல்லிச்சினமோ தெரியாது.... நான் ஒரு முழுக்குடிகாரனாம்... என்னைக் கட்டத் தான் ஒரு பைத்தியமா என்று பொம்பிளை சொன்னவவாம்.'

'நல்ல பொம்பிளையா இருக்கிறாள், நான் எண்டாலும் இப்பிடித்தான் சொல்லியிருப்பன்.'

'எப்பிடி...? குடிகாரன் எண்டு கொண்ணையைச் சொல்லுறியோ!'

'குடி மட்டுமே...? மிச்சம்....' என்றாள் தமாசும் கலந்து.

கோகுலன் எழுந்து கார்த்திறப்பைப் பொக்கற்றுக்குள்ளால் எடுத்தவாறு வீட்டைவிட்டுக் கிளம்பினான்.

'நில்லடா! எங்கை போறாய்? உன்ரை தங்கச்சிக்குக் கதைக்கப் பேசத் தெரியாதுதானே.' என்று ஜானகி தடுத்தும், அவன் கேட்கவில்லை.
'பிறகு வாறன்!' எண்டவனாய் நடந்தான்.

சமையலறைக்குள் நின்ற யசோ, அமளிப்படுவது கேட்டு, எட்டிப்பார்க்க, கோகுலன் பிச்சடிச்சுக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு போவது தெரிந்தது.

'கோகுலன்!' என்றாள் அவள்.

சாத்திய கதவு மெதுவாகத் திறபட, கோகுலன் தலையை மட்டும் உள்ளே நீட்டி, 'என்ன...!' என்றான்.

அதற்குள் யசோ படிகளை அவசரமாகத் தாண்டி, வாசலுக்கு வந்து விட்டாள்.

'எங்கை போறீங்கள்...?'

'றூமுக்கு!'

'நில்லுங்கோவன்! சமைக்கிறனெல்லே... பிளீஸ்!'

'நான் குடிகாரன், என்னை விடு யசோ! சொந்தத்தங்கச்சியே எனக்கு வாழ்க்கை இல்லையெண்டு சொல்லேக்கை... விடு, நான் போறன்!'

அப்போ ஜானகியும் கீழே வந்துவிட்டாள்.
கண்ணன் பாதிப்படிகளைக் கடந்தபடி நின்றான்.

'நான் பகிடிக்கெல்லே சொன்னனான்!' என்றாள் வேணி மேலே நின்றவாறு.

'உங்கடை தங்கச்சியைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே... கோவிக்காமல் உள்ளுக்கு வாங்கோ!' என்று தடுத்தான் கண்ணன்.

'கொஞ்சம் செல்ல வாறன்!'

'சமைக்கத் தொடங்கியிட்டன், இல்லாட்டி நானும் உங்களோடை வந்திடுவன்!' என்று கோகுலனின் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னாள் யசோ.

கோகுலன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்தக்கணம் வேணி சொன்ன வார்த்ததைகள் அடியோடு மறந்துபோக, எழுந்த கோபமும் மாறி, யசோவின் சாந்தமிகு முகம் தெரிந்தது.

'ஏன் போறீங்கள்! எனக்குத் தெரியும் கோபத்திலை, பழைய குருடி கதவைத் திறவடிஎண்டு.... எனக்குச் சத்தியம் பண்ணியிருக்கிறீங்கள்.'
என்றாள் ஒரு குழந்தைபோல.

ஜானகி ஏதும் பேசவில்லை. யசோ சொன்னால், கோகுலன் அதை மீறமாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

'வா! யசோவோடை போய்ச் சமையலுக்குக் கெல்ப் பண்ணு!'  என்று சொல்லிக்கொண்டு, மீண்டும் படியேறி ஹோலுக்குள் வந்தாள்.

Keine Kommentare: