Sonntag, 27. Januar 2019

வாழ்க்கையின் வேடிக்கை

வாழ்க்கையின் வேடிக்கை
(உண்மைச் சம்பவங்கள். இதில் வரும் பெயர்கள் கற்பனை)


அனுபவித்தும் அனுபவத்தில் கண்டும் எழுதிய குறிப்புகள்


எவர் மனதையும் நோகடிப்பதற்காக எழுதப்பட்டவை அல்ல.
                                                                                               தொடர்கிறது ....

சுகயீனமும் ஆஸ்பத்திரியும்

சுகயீனமும் ஆஸ்பத்திரியும்
(உண்மை சம்பவம் - பெயர்கள் இடங்கள் கற்பனை)
எவர் மனதையும் நோகடிப்பதற்காக எழுதப்பட்டவையல்ல.                                                                                                                              தொடர்கிறது.......


Montag, 29. Dezember 2014

பகுதி-3 ஒட்டாத உறவுகள்

38
ஒருநாள் ஒரு கொண்டாட்டத்துக்கு மாலதி பிள்ளைகளுடன் போயிருந்தாள். வழக்கம்போல மிக அழகாக உடுத்து, அலங்கரித்து மற்றப்பெண்கள் வர்ணித்துப் பாராட்டும்படி எடுப்பாக இருந்தாள்.

பிள்ளைகள்;, மற்றைய பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்க, மாலதி தன் நண்பிகள் இருந்த இடத்துக்குப் போய், காலியாக இருந்து கதிரையில் இருக்க, பக்கத்தில் இருந்த அவளுக்குப் பழக்க மானவள், 'ஆள் இருக்கு' என்று அவளை இருக்கவிடவில்லை. மாலதிக்கு இப்படியொரு சங்கடம் இதுவரை ஏற்பட்டதேயில்லை. மற்ற வேளைகளில் அவள் வந்தால் இடமில்லாவிட்டாலும் இடம் ஏற்படுத்தி, கதிரை வேறு எடுத்து வந்தாவது அவளைத் தங்களுடன் சேர்க்கும் அவர்கள், இன்று இப்படி நடந்தவிதம் செருப்பால் அடித்ததுபோல இருந்தது.
முகத்தில் அசடு வழிய, அடுத்த வரிசை மேசையில் காலியாக இருந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள் மாலதி.

'புருஸனோடு சேர்ந்து வாழத்;தெரியாத இவ எல்லாம் புதுச்சீலை கட்டினால் என்ன,  கழுத்து நிறையச் சங்கிலி போட்டால் என்ன, யார் மதிக்கப் போயினம்....?'
பேச்சு வந்த மேசைப்பக்கம் மாலதி கண்களைத் திருப்பினாள்.

'பறநாகம் படம் எடுக்கிற மாதிரிக் கிடக்கு!' என்று பல கிண்டல் வார்த்தைகள் அவளை நோக்கி வீசப்பட்டன.
மாலதிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

'மெதுவாகக் கதையடி, கேட்கப் போகுது!' என்றாள் ஒருத்தி.

'கேட்டாலென்ன...?'

'அவ ஜனாதிபதியடி... புதுப்புதுச்சட்டம் போட்டிடுவா!'

'அதெல்லாம் வீட்டிலை, இங்கை... வாலாட்டினால் நான் அவவுக்குப் பதில் சொல்லுவன்!' உறுமினாள் இன்னொரு உசாரான பெண்.

மாலதிக்கு ஏன் வந்தோம் என்றிருந்தது. எழுந்து வேறெங்காவது போயிருக்கலாமென்று எழ, எதிர்பாராமற் தொண்டர் பலகாரத்; தட்டுடன் வந்து,
'என்ன தனிய இருக்கிறீங்கள்...?' என்று உபசரித்தார்.

'குமரன் வரேல்லையோ?'

'வரேல்லை!' என்றாள்.

'பூவிழி அங்கை இருக்கிறா, வாங்கோவன்!'

'பறவாயில்லை, இங்கையே இருக்கிறன்!' என்று மறுத்துவிட்டாள் அவள்.

தொண்டர் பூவிழி இருந்த பக்கம் செல்வது தெரிந்தது. ஒரு நிமிடம்தான் பூவிழி எழுந்து தனியாக இருந்த மாலதியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

மாலதி, உள்ளே ஆறுதற்பெருமூச்சுவிட்டாள். சற்றுமுன் அவளுக்கு நிகழ்ந்த அவமானம் அவளைக் கூனிக்;;குறுக வைத்து விட்டது.

குமரன் சுகமில்லாமல் தங்கள் வீட்டில் இருப்பதுபற்றி பூவிழி கூறினாள்.
'நாங்கள் லண்டனுக்குப் போகப்போறம்! மச்சாள் தொண்டரைக் கல்யாணம் செய்யப்போறா, இனி உங்களுக்குள் சண்டை வாறதுக்குக் காரணமில்லை... ஒற்றுமையாக இருங்கோ! இதைச் சொந்தக்காரி என்ற ரீதியிலை நான் கூறேல்லை, உன்ரை பழைய நண்பி என்ற உறவிலை சொல்லுறன்!' என்றாள்.

'என்னை அப்பா, அம்மா சரியா வளர்க்கேல்லை பூவிழி! செல்லப்பிள்ளையா வளர்ந்தனேயொழிய, ஒரு நல்ல பெண்ணாக வாழத் தெரியேல்லை.' தன் தவறை ஒத்துக்கொண்டாள் மாலதி.

'எல்லாரும் பிழை விடுகிறது வழக்கம்தானே!' பூவிழி சமாளித்தாள்.
அதன்பின் மாலதிக்கு அக்கொண்டாட்டத்தில் மனம் செல்லவில்லை.
'ஏன்......? அவளுக்கு அவளது நண்பிகள் கொடுத்த நளின வரவேற்பா அவளை இப்படிக் குழம்பவைத்தது.
இந்தக்கொண்டாட்டத்துக்கென அவள் எவ்வளவு நேரத்தை விரயம் செய்திருப்;பாள்...! வித்தியாசமாக இருக்கவேணும்  என்பதற்காக கடைகள் பல ஏறி, யாரும் உடுக்காத சேலை வாங்கி, அதுக்கேற்ற நவீனடிசைனில் சட்டையும் தைத்திருந்தாள்.

கழுத்தலங்காரம், கையலங்காரம், தலைமுடிக்கு எனப் பலமணி நேர மினக்கேட்டுடன் அவள் எதிர்பார்ப்பும் கற்பனையும் எவ்வளவோ இருந்தன. பலர் தன்அலங்காரங்களை மெச்சிப் புகழ்வார்களென நிறையவே அவள் கனவு கண்டாள்.

எல்லாம் காற்றில் கலந்த கற்பூரம்போலப் பயனற்றனவாகச் சேற்றில் புதையுண்ட யானைபோல அடங்கி மீள வழியறியாது நின்றாள் மாலதி.

கழுத்திலிருந்த புத்தம்புது நெக்கிலஸைக் கழற்றி பூவிழியிடம் கொடுத்து, 'உனக்கு...' என்றாள்.
பூவிழி திடுக்கிட்டு மறுத்தாள். அவளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. பேராசை பிடித்த மாலதியாவது, நெக்கிலஸ் அன்பளிப்புச் செய்வதாவது... என்ன வேடிக்கை இது என்று அங்கலாய்த்தாள்.
மாலதி ஒரேபிடியாக நின்று அவள் கழுத்தில் போட்டுவிட்டாள்.
'இது உன் அக்கா ஒருத்தி தருவதுபோல... சரியா!' என்று காதுக்குள் சொன்னாள்.

மாலதி ஏதோ கலக்கத்தில் இருக்கின்றாள் என்று பூவிழி மேலும் மறுக்காமல், பிறகு பார்க்கலாம் என்று அப்போதைக்கு ஏற்றுக் கொண்டாள்.

சபை நடந்தது.. மாலதி மனமின்றிக் கடமைக்குச் சாப்பிட்டாள். பின் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு, வெளியே வந்தாள். அவளுடன் பூவிழியும் வந்தாள்.
'போவமா...?' கேட்டாள் மாலதி.

'இவரைக் கூட்டிக்கொண்டு வாறன்!' என்று ரமணனைத் தேடினாள் பூவிழி.
அப்போ மாலதி,
'நான் வீட்டுக்குப் போய் உடுப்பு மாற்றிக்கொண்டு உங்கடை வீட்டுக்கு வாறன்! நீங்கள் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போங்கோ!' என்று பூவிழிக்கும் 'சித்தப்பாவையோடை போங்கோ!' என்று பிள்ளைகளுக்கும் கூறிவிட்டு, காரை நோக்கி நடந்தாள்.

39

மாலதி பல்வேறு யோசனைகள் மனதிற் சுழல, காரை ஓட்டிக்கொண்டிருந்தாள். விழாவில் அவளைப் பற்றிய கிண்டற் பேச்சின் நெருடல் இன்னும் அவள் நெஞ்சில் இருந்தது. கூடவே தந்தை தொலைபேசியிற் கூறிய கண்டிப்பான பேச்சும் அவள் மனதை இடித்தன.


வாழ்க்கையில் நான் என்ற ஆணவத்துடன், கூடஇருப்பவர்களைத் தூக்கியெறிந்து நடந்தால், அத்தகையோரைச் சமூகமே தூக்கி எறியுமென்பது மாலதிக்கு விளங்கத்தொடங்கியது.



சந்தியில் சிவப்புவிளக்கு எரியும் வேளை, மாலதியின் கார் வந்த வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கத் தெருவால் வந்த கார் எதிராக நேரே வந்து 'டொமார்' என்ற  பேரொலியை அதிர வைத்து, மோதி இடிக்க, அவளின் கார் திரும்பிச் சுழன்று தலைகீழாகக் கவிழ்ந்தது.

கடவுள் செயல், மாலதி தப்பிவிட்டாள். ஆனால் சிற்றுந்து உதவாது, நெரிக்க எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. எதிரே வந்த காருக்குள் இருந்த ஒருவருக்கு மோசமான காயங்கள். அவரை அம்புலன்ஸ் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றது.


விழாமண்டபத்திலிருந்து ஏதோ அலுவலாக வந்து கொண்டிருந்த தொண்டர், அங்கு மாலதியைக் கண்டதும் நின்று விடயத்தை அறிந்து வேண்டிய உதவிகள் செய்து, அவளை ஏற்றிக்கொண்டு வீட்டில் விடப் புறப்பட்டார்.

காருக்குள் மாலதி அதிர்ச்சி தாங்கமுடியாமல் அழுதுகொண்டே இருந்தாள்.


'அழாதேங்கோ! தெருவில் வாகனங்கள் ஓடும்வரை அக்ஸிடன் களும் நடக்கத்தான் செய்யும்... நீங்கள் தப்பினது கடவுள்செயல். அதை நினைச்சுச் சந்தோசப்படவேணும்.' ஆறுதல் சொன்னார் தொண்டர்.



அவள் அழுகையுடன், 'என்னிலைதானே பிழை, சிக்னலைப் பாராமல் ஓடியிட்டன்!'

பயம், அதிர்ச்சி, கவலை என்பன அவளை அழவைக்கின்றன. கொஞ்சம் அழுதால் மனம்  ஆறுதலடையும், அழட்டும். இவ்வேளை ஆறுதல் வார்த்தையைக் கேட்குமளவுக்கு அவள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட தொண்டர், இதுபற்றி ஏதும் கதையாது காரை ஓட்டினார்.


மாலதி சொன்னாள்;, 'அவர் தம்பிவீட்;டிலை நிற்கிறார்.... அங்கை இறக்கினாற் போதும்.'



'ரமணன் வீட்டிலையோ...?'



'ஓம்!' என்றாள் மாலதி.

அங்கு காரைச் செலுத்தி மாலதியை இறக்கி, அவர்களுக்கும் விடயத்தைக் கூறிவிட்டு, பிறகு வருவதாகக் கூறி தொண்டர் புறப்பட்டார்.


மாலதியின் நிலைகண்டு, நாரிப்பிடிப்பையும் மறந்து, பாய்ந்தோடி, பதறித்துடித்துக்கொண்டு ஓடிவந்தான் குமரன்.



ரமணன், பூவிழி, சிவரஞ்சினி யாவரும் அதிர்ந்து, கலங்கிப்போய் நின்ற மாலதிக்கு மனஆறுதல் சொன்னார்கள்.



'என்னிலைதான் பிழை............., எங்கடை புதுக்கார் சப்பழிஞ்சு போச்சுது!' அழுகையுடன் குமரனைப் பார்த்தாள் மாலதி.



'அதுக்கேன் அழுகிறாய்;! அங... நீ தப்பினதே நாங்கள் கும்பிட்ட மாயவனுடைய அருள்.... ஒரு கார் போனால் இன்னொன்று வாங்கலாம். உனக்கு ஒன்றென்றால் நானும் பிள்ளையளும் உயிரோடை இருக்கமாட்டம்.' என்று அவன் கண்கள் நனைய வந்த வார்த்தைகள், மாலதியின் ஆணவமலைக்கோட்;டையை சிதறடித்துவிட, அப்படியே அவன் காலில் விழுந்து கதறியழ முனைந்தாள்.



குமரன் அவளைத் தூக்கித் தன் மார்போடு அணைத்து ஆறுதல் சொன்னான்.

மாலதியின் மனம் ஆறாமற் தகித்தது.
'மற்றக்காருக்கை வந்த மனிசன் ஆஸ்பத்திரிலிலை... காரும் உதவாது... என்னப்பா செய்யிறது... வேணுமென்று செய்யிறமாதிரியெல்லே செய்துபோட்டன்!'


'ஆர் அப்பிடிச் சொன்னது? அக்ஸிடன் என்றால் இப்பிடித்தானே! எதிர்பாராமல் நடக்கிறது... இதுக்குப்போய் பயந்து நடுங்கிறாய்!' என்று குமரன் மேலும் ஏதேதோ ஆறுதல் சொன்னான்.



ரமணன் தங்கள் காரைக்கொண்டு போகும்படியும் புதிது வாங்கும் வரை தாங்கள் சமாளிப்பதாகவும் சொல்லி, ஒரே பிடியாக நின்று சம்மதிக்க வைத்தான். இது விபத்து நடந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியை விடப் பன்மடங்கு அதிர்ச்சியை மாலதிக்குக் கொடுத்தது.

புதுக்கார், பெறுமதிமிக்க வடிவானகார். அது நொருங்கிப் போனதுபற்றிக் கோபம் கொள்ளாமல், அவள் உயிர் பிழைத்தது பெருங்காரியம் என்று சந்தோசப்படும் தன் கணவனை நினைக்க, அவளுக்கு வெட்கம் பெருகி, மனதைக் கூசவைத்தது. அவள், தினந்தினம் யாரிபிடித்துச் சண்டை போட்டுவந்தவள்;! என்னை யாரும் அசைக்கமுடியாது.' என்று அகங்காரத்துடன் திமிர்க்கதை கதைத்துக்கொண்டிருந்த அவளுக்கு, குமரனின் அன்புப் பெருவெள்ளம் அகங்காரஓட்டை உடைத்தெறிய, அவள் தன் தவறை உணரத்தொடங்கினாள்.


மச்சாள் என்றோ, வயதுக்கு மூத்தவள்; என்றோ எண்ணிப் பார்க்காமல் சிவரஞ்சினியை எப்படியெல்லாம் அவமானப் படுத்தினேன். ஆனால் அவ அதையெல்லாம் மனதில்  வைத்துக் கொள்ளாது தன்மீது காட்டும் அன்பைக் கண்டாள். அவளை மிஞ்சுவதுபோல பூவிழி எந்தக் கோபமுமில்லாமல் சொந்த சகோதரிபோல நேசித்தாள். சேலையை மாற்றவைத்து தன் புதுச் சட்டை ஒன்றைப்போடவைத்து அன்று இரவு நீண்டநேரம் அவர்கள் வீட்டிலே பொழுதுபோவது தெரியாமல் இருக்கவைத்து விட்டாள்.



மாலதிக்கு, எல்லாம் நன்மைக்கே என்பதுகூட ஏதோ ஒருவிதத்தில் சரியெனத் தோன்றியது. 'இந்த விபத்து ஏற்பட்டிருக்காவிட்டால் எனது அறியாமையும் ஒழிந்திருக்காது, இவர்கள் பாசமும் எனக்குப் புரிந்திருக்காது.' என்று நினைத்துக்கொண்டாள்.



ரமணனின் காரில் நள்ளிரவு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். பிள்ளைகள் நித்திரைத்தூக்கத்தில் உடனே படுக்கச் செல்ல, குமரனுடன் நீண்டநேரம் மாலதி கதைத்துக்கொண்டே இருந்தாள். குமரனுக்கு இது புதுஅனுபவம், அவன் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.



'இரண்டடி அடித்ததுக்கு நான் எவ்வளவு குதிகுதித்தேன். இப்ப நீங்கள் பூப்போல பாவித்த அந்தக் காரை நொருக்கிப்போட்டு வந்திருக்கிறன்... ஏன் இப்பிடிச் செய்தாய்...!  கவனமாக ஓடி இருக்கலாமே என்றுகூடக் கேட்காமல் இருக்க எப்பிடியப்பா முடியுது?' கேட்டாள் மாலதி.



'எல்லாம் மனசுதான்... கார் அடிபட்டதுக்கு நான் உன்னோடு கோபித்து என்ன பயன்? ஏதோ கஸ்ரகாலம் நடந்துபோச்சு, நீ ஒரு காயமுமில்லாமல் தப்பினது நாங்கள் செய்த புண்ணியம்.'



'இனிமேல் நான் உங்களோடை சண்டைபோடவேமாட்டன்!' சொன்னாள் அவள்.



'குடும்பம் என்றால் சண்டை இருக்கும்தானே!'



'நான் சரியாப் பிழை விட்டிட்டன்.... யோசிச்சுப் பார்த்தால்... சீ... மனிதாபிமானமேயில்லாமல் நடந்திருக்கிறன்! என்னை மன்னிப்பீங்களா....?' கேட்டாள் அவள்.



'என்னிலும் பிழை இருக்குத்தானே! செல்லப்பிள்ளையாக வளர்ந்தவள் நீ. உன் விருப்பப்படி எல்லாம் செய்து பழக்கப் பட்டனி, நான் குறுக்கை வந்து தடுத்தால் உனக்குக் கோபம் வரும்தானே!'



'எப்படித்தான் செல்லமா வளர்ந்தாலும் குடும்பம் என்று வந்திட்டன்... விட்டுக்கொடுத்து வாழப்பழகிக்கொள்ளவேணும். அப்படி வாழத்தெரியாமல் சண்டைக்காரியாக இருந்திட்டன்.'



'இப்ப ஆர் அப்பிடிச் சொன்னது?' என்ற குமரனின் கைகள் அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைக்க, அவள் பதில் சொல்லமுடியாத பாவையாய் அவன் மார்பில் பூமாலை போலத் தழுவின


40

குமரன் வீட்டில் ஒரு புதுப்பொலிவு துளிர்த்தது. முன்பிருந்த நான், நீ என்ற மோதல்கள் இருந்த இடம் தெரியாமல் அகன்று விட்டன.

கணவன், மனைவி கதைத்துப்பேசி ஒரு காரியத்தை ஆற்றும் விதம் உருவாகியிருந்தது. இதன் முதற்கட்டமாக மாலதி வேலைக்குப் போவதை நிறுத்த யோசித்தாள்.

'வேலையை விடட்டே...?' என்று மாலதி கேட்டாள்.

'உன் விருப்பம்!' சொன்னான் குமரன்.

'பிள்ளைகள் படித்து ஆளாகுமட்டும் நான் வீட்டிலிருந்து அவர்களைக் கவனித்தால் நல்லதென்று நினைக்கிறன்!' என்றாள்.

'பிள்ளையளின்ரை வாழ்க்கை முக்கியந்தான். இந்த வயதிலை தான் படிப்பு, பாசம் இரண்டும் வளரும்காலம். நாங்கள் வேலையிலை பாதிநாளை ஓட்டிவிட்டு களைப்பிலை வந்து பிள்ளைகளுடன் அன்பாகப்பேசவோ, படிப்புச் சொல்லிக்கொடுக்கவோ, எங்கள் பாசத்தைக் காட்டவோ நேரம் கிடைப்பதில்லை. ஆராவது ஒராள்; பிள்ளைகளைக் கவனித்தால் நல்லதுதான்...!'

'அதுதான் நான் வீட்டிலை  நிற்கிறன். இவங்கள் வளர்ந்தா, யூனிவெசிற்றி, வேலை, கலியாணம் என்று போய்விடுவாங்கள். இப்பதானே அப்பா, அம்மா என்று அன்பாகக்கூடி, ஒன்றா இருந்து, ஆசையாக் கைக்குள் இருப்பாங்கள். பிறகு வளர்ந்தால் வீட்டை வருவதும் போவதுமாக இருப்பினமே தவிர, எங்களோடை இருப்பாங்களே...? அதுதான் யோசிச்சுப் பார்த்தன்... காசைக் கவனமாச் செலவழிச்சா, உங்கடை சம்பளத்திலேயே வாழலாம் தானே!' என்றாள் மாலதி.

'நீ சொல்லுறது சரி, பிள்ளையளுக்கு அம்மாவின்ரை பாசம் கட்டாயம் தேவை. அதுகள் பாடசாலையாலை வீட்டை வரும் போது நீ நின்றால் எவ்வளவோ சந்தோசப்படுங்கள். மற்றது, வேலையை விட்டால் விட்டதுதான்... பிறகு இப்பிடியொரு வேலை எடுக்கேலாது.. யோசிச்சுச் செய்!' என்றான் குமரன்.

'அப்ப என்ன செய்ய...? பாட்ரைம் வேலை பக்றியிலை கேட்டுப் பார்க்கட்டே! வேறையும் சிலபொம்பிளையள் நாலு மணித்தியால வேலை செய்யினம்.'

'கேட்டுப்பாரன்!'

மாலதி, பக்றியில் இதுபற்றிக் கேட்டுச் சம்மதமும் வாங்கிக் கொண்டாள்.

இந்த மாறுதல்;களின் பின், அவர்கள் குடும்பத்தில் கணவன், மனைவி மோதல்கள் இல்லையென்ற நிலை உருவாகியது. நேரம் இன்மையால் உண்டாகும் அவசரம், குற்றஞ்சாட்டுதல், பதை பதைப்பு, எரிந்துவிழுதல் என்ற மனக்கொதிப்;புகள் தணிந்து சுமுகமான சூழ்நிலை நிலவியது.

சிவரஞ்சினி, குமரன் வீட்டில் கணவன், மனைவி மோதலின்பின், அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி இன்னும் திரும்ப வரவில்லை, ரமணன்வீட்டில் தங்கியிருந்தாள். கல்யாணத்திகதி நிச்சயிக்கப் பட்டுவிட்டது. இதனால் இன்னும் சிலநாட்கள்தானே என்று வேறு வீடு எடுக்க ரமணனும் பூவிழியும் விடவில்லை.

குமரன்வீட்;டுநிலைமை சீருக்கு வந்தும் சிவரஞ்சினி திரும்பி வரவில்லை. இதுபற்றி எண்ணம் வர மாலதி குமரனுடன் கதைத்தாள்.
'மச்சாளுக்கு என்னிலை சரியான கோபம் என்று நினைக்கிறன்.. நேரை போய் மன்னிப்புக்கேட்டு, திரும்பவும் இங்கை கூட்டிக் கொண்டு வருவம், வாங்கோ!'

'அக்காவுக்கு ஒரு கோபமுமில்லை, ஆனால் தன் வாழ்க்;கையை நினைச்சுச்; சரியாக் கவலைப்படுகிறா... எல்லாம் கஸ்டகாலம்;... போதாததுக்கு விசா முடியுது!'

'கல்யாணம் செய்தால் விசா கொடுப்பாங்கள்தானே!'

'ம்... ம்... எழுத்து எழுதுறதுக்கு, அக்கா சிலோனுக்குப் போய் ஜேர்மன்; எம்பஸியிலை விசா எடுத்துக்கொண்டு திரும்பி வர வேணும்.'

'அட... இப்;படி அலைக்கழிக்கிறாங்கள்!'

'ஜேர்மன் சட்டம் அப்பிடி...!'

'திரும்பிப் போனால் எம்பஸி விசாக் கொடுக்குமோ...?'

'ஓ! கலியாணம் செய்யிறதெண்டு இங்கை எல்லாப்படிவங்களும் நிரப்பி, வெளிநாட்டலுவலகத்தில் கதைத்து வேண்டிய ஒழுங்குகள்; செய்திட்டுப் போனால், அங்கை விசாக் கொடுப்பாங்கள்!'

'அலைச்சல்தான்..!' என்ற மாலதி,
'அக்காவைப் போய்க் கூட்டிக்கொண்டு வாங்கோ!' என்றாள்.
மனிதநேயம் கொஞ்சங்கொஞ்சமாக அவள் மனதில் வளர்ந்து வருவது தெரிந்தது.

'அக்கா வரமாட்டா...!' குமரனிடமிருந்து பதில் வந்தது.

'ஏன் வரமாட்டா? இவ்வளவு நாளும் எங்களோடைதானே இருந்தவ, இனிக் கல்யாணம் செய்யிற இந்தவேளை தம்பி வீட்டிலை இருந்தா சனங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைப்பினம்;!'

'சனங்கள் கதைக்கிறது கிடக்கட்டும், அக்காவின் முடிவை மாற்ற ஏலாது. நாங்கள் இரண்டுபேரும் சண்டை பிடிக்கிறது தன்னாலை தான் என்று காரணம் சொல்லுறா!

'அப்பிடி ஆர் சொன்னது...!'

'மாலதி! நடந்தது போகட்டும், இனி நடப்பதைப் பார்ப்பம்!'

'மச்சாள் எங்களோடை வந்திருக்காட்டி என்னாலை தாங்கிக் கொள்ளமுடியாது. கவலையாக் கிடக்கு! நான் கோபத்திலை வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைச்சுப்போட்டன். இப்ப நினைக்க எனக்கே வெட்கமாக்கிடக்கு!'

'இப்ப நீ ஏன் தேவையில்லாமல் கனக்க யோசிக்கிறாய்...? உன்னை ஆரும் குறை சொன்னவையே!' அதற்கு மேல் குமரன் கதையை வளர்க்க விரும்பவில்லை. மாலதி கேட்டதற்குச் சம்மதித்து, அக்கா சிவரஞ்சினியை ரமணன் வீட்டில் போய்க் கூட்டிவரப் புறப்பட்டான்.
அப்போ சாவித்திரியும் கணவனும் வேறும் இருவரும் வந்து இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் காரிலேறிய குமரன், காரைவிட்டு இறங்கி வந்தான்.


41

'எங்கை என்ரை தம்பியின்ரை பெண்சாதி...? நாங்கள் வீட்;டை கூட்டிக்கொண்டு போகப்போறம்!' அதிகாரம் வார்த்தையில் தெறிக்க, கூறிக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள் சாவித்திரி.

'தம்பியின்ரை பெண்சாதியோ....! அப்பிடி ஒருத்தரும்;  இங்கை இல்லையே சாவித்திரி அக்கா!' என்றாள் மாலதி.

'நீ வாயை மூடு... எனக்கு மச்சாளும் அவள் வயிற்றிலை வளருற மருமகக்குட்டியும் வேணும்!'

'என்ரை வீட்டுக்கு வந்து என்னையே வாயை மூடச் சொல்லுறீங்களோ?' என்ற மாலதி தனக்குள்; பொங்கியெழுந்த கோபத்தைப் பல்லைக் கடித்து அடக்க முனைந்தாள்.

குமரன் பொறுமையோடு கதைத்தான்.
'அக்கா வீட்டில் இல்லை, அதோடை அக்காவுக்கும் உங்களுக்;கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வீணா வம்புச் சண்டைக்கு வராமற் போங்கோ!'

நெளிப்புச் சிரிப்பொன்று சிரித்து, கைகளை உதறி அவன் சொன்னதை நிராகரித்த சாவித்திரி,
'என்ன கொக்காவுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையோ...! குடும்பமே முட்டாட்கூட்டமாக் கிடக்கு, என்ரை ஆசைத்தம்பியின்ரை மனிசி அவள், இல்லை என்கிறீங்களோ...?' கேட்டாள்.

'இல்லை.. இல்லை.. இல்லை!' என்று உரக்கப் பதில் கூறிக்கொண்டு உள்ளே வந்தாள் தொண்டரின் அக்கா ருக்குமணி. அவள் பின்னால் தொண்டரும் வந்தார். அவர்களின் திடீர் வரவு மாலதிக்கும் குமரனுக்கும் உசாரைக் கொடுத்தது.

'யாரம்மா நீங்கள்...?' சாவித்திரி தன் வழக்கமான நெளிப்போடு கேட்க,
'யாரடி நீ....?' அடிக்குமாப்பொல உறுமினாள் ருக்குமணி.
அவர்களினிடையே தொண்டர் வந்து,
'அக்கா, கொஞ்சம் பொறு!' என்று கூறிவிட்டு, சாவித்திரியைப் பார்த்து,
'உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை?' என்று அமைதியாகக் கேட்டார்.

சாவித்திரி பதில் சொல்லாது, தொண்டரைப் பார்வையால் அளந்தாள்.

தொண்டரின் தலைநிமிர்ந்த கௌரவமான தோற்றமும் அவர் கண்களில் மிளிர்ந்த சூரியகிரணங்களையொத்த பார்வையின் ஒளியும் அவளை ஒரு நிமிடம் மௌனமாக்கிவிட்டது.

கீதை சொன்ன கண்ணனுடைய பக்தனின் எதிரே நிற்கும் எதிரியின் பலம் யானை உறிஞ்சிய விளாம்பழம் போலாகிவிடும் என்பதைப் போல, தொண்டரின் முன் நின்ற சாவித்திரியின் துள்ளல் சற்று இறங்கினாலும் அவள்  பிடிவாதம் அடங்காத நிலையில்; மேலும் மோதினாள்.

'நான் யார் என்று தெரியாமல் மோதுறீங்கள்... மினிஸ்ரி வரை எங்களுக்கு ஆள்  இருக்குது! வெளிநாட்டலுவலகத்திலை இருக்கிற பெரியவன்ரை மகனோடைதான் என்ரை மகனும் படிக்கிறான். நினைச்சா உங்களை நாளைக்கே பிடிச்சு சிலோனுக்கு திருப்பி அனுப்புவிக்க என்னாலை முடியும்!'

'முடிஞ்சாச் செய்து பாரடி பார்ப்பம்!' ருக்குமணி பதில் கொடுத்தாள். அவளைப் பார்த்து சாவித்திரி எச்சரித்தாள்.
'கனடாவிலை இருந்து வந்து என்னை மிரட்டாதை! கள்ளப் பாஸ்போர்ட்டிலை வந்திருக்கிறாய் என்று குடும்பத்;தோடை திருப்பி அனுப்பி வைச்சிடுவன்!'

'ஜேர்மன் மினிஸ்ரியிலை உன்ரை செல்வாக்கு இருக்கென்டா... எடி இராசாத்தி... எங்கடை நாட்டுப் பிரச்சனைதீர ஒரு வழி பார்க்கலாமே...! ஜனாதிபதி, பிரதமர் எல்லாரோடையும் கதைச்சு தமிழனுக்கு ஒரு அமைதிவாழ்க்கையைப் பெற்றுக்கொடன்!
பெரிசாக் கொக்கரிக்கிறாய், பெரியவன்ரை மகனோடை உன்ரை மகன் படிக்கிறானோ...? அங்கை அமெரிக்கா பாளிமென்ரிலை எங்கடை மகன் கொம்பியூட்டர் எஞ்சினியரா வேலை பார்க்கிறான், மிரட்டாதை...! வாழுறது அகதிவாழ்க்கை, பேசிறது அரண்மனை இராசாத்தியின் பேச்சு...!' என்ற ருக்குமணியின் அறுத்துறுத்த உறுதியான எதிர்வசனங்கள் சாவித்திரியின் நாக்கைத் தடுமாற வைத்துவிட்டன.'

அப்போ தொண்டர்,
'உங்களுக்கு என்ன வேணும்..... ஏன் அமைதியா இருக்கிற எங்களைக்; குழப்புறீங்கள்?'

'என்ரை தம்பி செத்திட்டான், அவன் உயிருக்குயிராய் விரும்பிய சிவரஞ்சினி எங்களுக்கு வேணும்.'

'அது முடியாது, நீங்கள் சொல்வது எதுவும் உண்மையில்லை. செத்தவர் பற்றிக் குற்றம் கூறுவது பண்பில்லையென்றாலும் வாழும் ஒரு பெண்ணின் மானத்தைக் காக்க, சொல்ல வேண்டிய  அவசியம் என்றதாலை சொல்லுறன். உங்கடை தம்பி ஒரு அரைமனநோயாளி, அவர் சொன்னவை எதுவும் சரி என்று ஏற்றுக்கொள்ளமுடியாதவை.' என்றவர், அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போகலாம்!' என்றார்.

'ஏன் கனக்கக் கதை? பொலிசுக்குப் போனால் எது உண்மை, எது பொய்யென்று தெரிந்திடும். மிச்சத்தைக் கோர்ட்டில் பார்ப்பம்!' என்று எச்சரித்துவிட்டு, வெளியே போகப் புறப்பட்ட சாவித்திரிக்கு முன்னே மாலதி வந்து,
'நீங்களும் ஒரு பொம்பிளைதானே..! இன்னொரு பொம்பிளையின் வாழ்க்கையைக் கெடுக்கவேணும் என்று ஏன் ஒற்றைக்காலிலை நிற்கிறீங்கள்? கல்யாணம் பேச வந்து, சீதனம் போதாது, வேண்டாம் இந்தச் சம்பந்தம் என்று போனனீங்கள்... பிறகென்ன இப்ப வந்து.. ஏதேதோ எல்லாம் கதைக்கிறீங்கள்! உங்கடை தம்பி உயிரோடை இருக்கேக்கை வராத பாசம், அக்கறை... இப்ப செத்த பிறகு வருகுதோ?

ஒரு பெண்ணின் மனது படும் சித்திரவதையை, ஒரு பெண்ணான உங்களாலை புரிஞ்சுகொள்ள முடியாதே? இவ்வளவு பிரச்சனை இருந்தும் நல்ல மனசு படைச்ச இவர், மச்சாளைக் கல்யாணம் செய்யச் சம்மதிச்சு, நாட்குறிச்சு, நல்லது நடக்கவேணும் என்று நாங்கள் தவம் கிடக்கிறம்....... இந்தநேரம் பார்த்து குறுக்கை வந்து கெடுக்கப் பார்க்கிறியள்!' கண்கள் கலங்க, உருக்கமும் காரமும் தெறிக்க மாலதி கூறிய வார்த்தைகள் மனதை உருக வைக்கும்படி இருந்தன.

'என்னெண்டாலும் செய்யுங்கோ! ஆனால் அவன் எழுதிய டயறி  என்னட்டைக் கிடக்கு, அதைக்காட்டி உங்களை ஊர் சிரிக்க வைக்கிறன்! வெள்ளையும் சுள்ளையுமாப் பள்ளிக்கூடம் படிப் பிக்கப் போவீங்கள்தானே, அங்கை வைச்சு தாய்தகப்பன்மார் உங்களைக் கிழிக்க வைக்கிறன்!' பாஞ்சாலி சபதம் போட்டது போல அடித்துச்சொல்லிவிட்டு, கொதிப்புடன் வெளியேறினாள் சாவித்திரி. கூடவந்தவர்களும் அவள் பின்னே வெளியே நடந்தனர்.

'என்னப்பா அந்த டயறியிலை கிடக்கு....?' குமரனைப் பார்த்துக் கேட்டாள் மாலதி.

'தெரியாது' என்ற அர்த்தத்தில் கையை விரித்தான் அவன்.

தொண்டர் பதில் சொன்னார்.
'சுகுமார் தன் டயறியில் ஏதோ கற்பனை செய்து சிவரஞ்சினி யைப்பற்றி எழுதி வைச்சிருக்கிறார் என்று நினைக்கிறன்!'

'அதை ஆக்களுக்குக் காட்டப்போறன் என்று மனிசி சொல்லிக்கொண்டு போகுது, ஆருக்காவது காட்டினால் பார்க்கிறவை நம்பவெல்லே போயினம்!' கவலை தொனிக்கக் கூறினான் குமரன்.

'அதொண்டும் பிரச்சனையில்லை!' தொண்டரின் பதிலில் உறுதி தொனித்தது.
அப்போ மாலதி, தொண்டர் பொதுப்பணிகளில் முன்னின்று செயற்படும் ஒருவர் என்பதை மனதிற்கொண்டு,
'எங்களை மாதிரியென்றால் பறவாயில்லை, ஆரும் ஏதும் கதைச் சிட்டுப் போகட்டும் என்றிருக்கலாம். ஆனால் அண்ணை, நீங்கள் அந்தக் கொமிற்றி... இந்தக்கொமிற்றி என்றெல்லாம் மக்கள் நலம் புரியும் செயல்களில் முன் நிற்கும் ஒருவர்... உங்களைப் பார்த்து சபையிலை ஆரும் ஏடாகூடமாக் கேள்வி கேட்டுவிட்டால்.... இத்தனை காலமும் இருந்த பேரும் புகழும் வீணாப்போயிடும்!' கவலையுடன் கூறினாள்.

அதற்கு, தொண்டரின் அக்கா ருக்குமணி அமைதியுடன் பதில் பகர்ந்தாள்.
'மாலதி! தம்பி ஒன்று செய்தானென்றால் அது மிகச் சரியாத் தான் இருக்கும். அப்பிடியில்லை பிழையாச் செய்தான் என்றால் வாலிக்கு இராமன் விட்ட அம்புபோல வேறை வழியில்லாமல் நடந்திருக்கும். அவனுக்கு நான் இருக்கிறன்!'

'ஆசையுள்ளவனுக்குப் பயம் இருக்கும், ஆசைப்பட்டது கிடையாத இடத்து கோபமும் வரும். நான் செய்தது தர்மத்துக்குட்பட்டது. இங்கே பயப்படவோ, கோபப்படவோ இடமில்லை.' என்றார் தொண்டர்.

'மாறிமாறி ஒரே சிக்கலாக்கிடக்கு!' குமரன் குரலில் கவலை தொனித்தது.

'வாழ்க்கை என்றால் இப்படித்தான்... இன்பமும் துன்பமும் மாறி மாறிவரும். இதுக்கெல்லாம் மனம் சோர்ந்தால் எப்படி வாழ்வது? இதை விளக்கத்தானே கீதையைக் கண்ணன் போர்க்களத்தில் வைத்துச் சொன்னான்... சொல்லடா தம்பி....!'
ருக்குமணி கேட்க, அவவுக்குச் சில நாட்களின்முன் சொன்ன பகவத்கீதை பற்றிய உண்மைத் தத்துவத்தை மீண்டும் இங்கு கூறினார் தொண்டர்.

'வாழ்க்கை பல போராட்டங்களைக் கொண்ட மகாயுத்தம், அதில் போராடுகிறவன் வெற்றி பெறுகிறான். வெற்றிக்காக அவன் அயராது போராட வேண்டியிருக்கும். போராடத் தயங்குபவன் இழந்ததைப் பெறமுடியாது, இருப்பதையும் பாதுகாக்க முடியாது. ஒரு யுத்தத்தைப்பற்றி யுத்தகளத்தில் பேசுவது பொருத்தமாகக் கண்ணனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். இதனாற்தான் உலக மனிதர் சார்பில் அர்ச்சுனனுக்கு பாரதயுத்தத்தின்போது கீதையை உபதேசித்தான்!' என்று தொண்டர் தான் படித்து உள்ளத்தில் பதிந்து கொண்டதைத் தெளிவாகக் கூறினார்.

மனம் உடலை இயக்கும் இயந்திரம். அதைச் சோரவிடாமல் மனிதன் எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். துன்பங்கள், சோதனைகள் தாக்கும்போது மனிதமனம் உற்சாகம் குன்றிச் சோர்வடையும். அவ்வேளை அடுத்த மனிதரது ஆறுதல் வார்த்தைகளும் ஆதரவு மொழிகளும் மனதைச் சோர்விலிருந்து விடுவித்து மீண்டும் உற்சாகத்தைப் பெறவைக்கின்றன.

சிலர் தங்கள் மனோதைரியத்தினால் மனதைத் தளரவிடாமல் உறுதியாகச் செயற்படுவார்கள். எத்தனை இழப்புகளைச் சந்தித் தாலும் மனதில் தோல்விக்கு இடந்தராது, வெற்றிக்காக எதையும் சந்திக்கத் தயாராக இருக்கும் வீரமனிதர்களும் நிறையவே இருக்கிறார்கள்.


42

மறுதினம் சாவித்திரி போட்ட குண்டின் அதிர்வுகள் சிவரஞ்சினி யின் இதயத்தை உலுப்பின.
சுகுமாரின் டயறியைக் கொண்டுவந்து, கல்யாணவீட்டிலன்று சனங்களின் நடுவே காட்டப்போகிறாள் சாவித்திரி என்பதை அறிய அவளுக்குத் தலை சுற்றியது. 'நாராயணா!' என்று அவள் நா வேதனையின் உச்சியில் நின்று கூவியது.
'உலகளந்தநாயகனே! இந்த ஏழைக்கு ஒரு வழி காட்டமாட்டாயா? மதிப்பும் கௌரவமுமாக வாழுகின்ற அந்த மனிசன், எனக்காக இரங்கி, என்னைக் கல்யாணம் செய்ய முன் வந்ததுக்கு வீணான அவதூறுகளும் அவமானமும் அவருக்கு வரப்போகிறதே..! தலை நிமிர்ந்து வாழுகிற அவரைத் தலைகுனிய வைத்துவிடாதே! என் வாழ்க்கைதான் கோணல்மாணலாகப் போச்சு... ஒன்று நினைக்க ஒன்று நடந்து போச்சு!' என்று சிவரஞ்சினி மனமுருகி அழுது பிதற்றினாள்.

அதற்கு மேல் அவளாற் சிந்திக்கமுடியாதளவுக்கு கண்கள் இருண்டுகொண்டு வந்தன. நெஞ்சு றெயின்  ஓடுவதுபோலக் கடகட என வேகமாக அடித்தது. வயிற்றுக்குள் முன்னொரு நாளும் இல்லாத வலி ஒன்று திடீரென எழுந்து அவளைச்; சாகடிப்பதுபோல் துவட்டி எடுத்தது.

வயிற்றைப் பொத்திக்கொண்டு சிவரஞ்சினி வேதனையில் துடிக்க, அது கண்டு ரமணனும் பூவிழியும் விரைந்து வந்து என்னஏது என்று பதறித்துடித்து, அவளுக்கு வேண்டிய உதவிகள் புரிந்தபடி வைத்தியருக்குத் தொலைபேசி எடுத்தார்கள்.

அந்தநேரம் சிவரஞ்சினி பட்ட வேதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவுக்கு கோரமாக இருந்தது.
ரமணனின் மகன் விஸ்ணு , 'மாமி, அழாதேங்கோ! டொக்டர் வந்திடுவார்.' என்று அவளைத் தடவிக்கொண்டு பக்கத்தில் இருந்தான்.

அம்புலஸ் கூவிக்கொண்டு வந்து நிற்க, டாக்டரும் உதவியாளரும் விரைந்து வந்து சிவரஞ்சினியைப் பரிசோதித்து ஊசிமருந்து ஏற்றி உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு போனார்கள்.


43

புயலடித்தது.
இடியிடித்து, மழை பொழிந்து வானம் வெளித்தது.

சிவரஞ்சினி சில தினங்கள் வைத்தியசாலையில் தங்கிச் சிகிட்சை பெற்றாள். அவளை அறியாமலே........ அவளைப் பிடித்த சனி.... அவளுக்குச் சொல்லாமலே...... அவளைவிட்டு நீங்கியது.

சுகுமார் பித்தலாட்டங் கொண்டு ஆடிப்பதித்த முத்திரை நீரில் வரைந்த ஓவியமாய் கலைந்து அழிந்தது.

டாக்டர் சிவரஞ்சினி கவலைப்படுவாள் என்று ஆறுதல் கூறினார்.
'நீ தாயாவதற்கு எந்தக் குறையுமில்லை. ஆனால் இது அதிர்ச்சியால் இப்படி நிகழ்ந்துவிட்டது.' அவர் அவள் மனதைச் சாந்தப்படுத்தினார்.

சிவரஞ்சினி ஒருகணம் கண்களை மூடிப் பெருமூச்சுவிட்டாள். இது கவலையா அல்லது சந்தோசமா என்பதை அந்தக்கணத்தில் அவளால் தீர்மானிக்க முடியவில்லை. எனினும் இதுவரை வீசிய புயல் ஓய்வுக்கு வந்துவிட்டதென்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

சிவரஞ்சினி வைத்தியசாலையில் இருந்த இவ்வேளை, தொண்டர் வெளிநாட்டலுவலகத்துடன்  தொடர்புகொண்டு அவள் சிறிலங்காவுக்குச் சென்று ஜேர்மன் தூதரகத்தில் விசா பெற்று வருவதற்கு உரிய படிவங்களைப் பெற்று, அதற்கு வேண்டிய ஒழுங்குகளையும்; செய்திருந்தார். காலந்தாழ்த்தினால் பல்வேறு இடையூறுகளும் மனவேதனைகளையும் அவள் சந்திக்கவேண்டிவரும் என்று நினைத்தவராய் அவள் உடல்நலம் பெற்றதும் இருவரும் இலங்கைக்குப் போய்வர, அவர் முடிவெடுத்தார்.


சிவரஞ்சினி, தன்னை வருத்தம் பார்க்க வந்திருந்த ரமணனிடம்
'இங்கிலன்ட் போய் இருக்கும் யோசனையைக் கைவிடு...! நாங்கள்  இங்கை, நீ அங்கை...  ஏன்டா தம்பி? சகோதரங்கள் கிட்டக்கிட்ட இருந்தாற்தானே, அந்தரம் அவசரத்துக்கு உதவி செய்யவோ, வந்து போகவோ முடியும்.... பிறந்தநாட்டைப் பிரிந்து இங்கை வந்தோம்... இப்ப எல்லா வசதியும் வந்த பின்பும் வேறு நாட்டுக்கு  என்று புறப்பட்டு மேலும் உறவுகள் பிரிவது நல்லது இல்லையடா தம்பி!' என்று கூறினாள்.

தமக்கை இதுபற்றி ரமணனுடன் உரையாட முன்பே அவனும் பூவிழியும் இதபற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். மாலதியின் மனமாற்றமும்; சிவரஞ்சினியின் பரிதாபத்துக்குரிய நிலையும் அவர்களை இங்கிலன்ட் போகவிடாமல் தடுத்துவிட்டன. இதனால் சிவரஞ்சினியின் விருப்பத்துக்கு இணங்கி, 'ஓமக்கா, நாங்கள் இங்கையே இருக்கிறம்!' என்று சம்மதித்தான்.

'சும்மா சொல்லுறாய்!' நம்பமுடியாமல் ஆச்சரியம் தொனிக்கத் தலையை நிமிர்;த்தி சிவரஞ்சினி கேட்டாள்.

'உண்மையாத்தானக்கா!' என்று தமக்கையின் கையைப் பிடித்து உறுதிப்படுத்தினான் ரமணன்.
'ஓரிடத்தைவிட இன்னொரிடம் உயர்ந்ததாகவும் வசதியானதாகவும்; இருக்கலாம். அதற்காக நாமிருக்குமிடத்தை அலட்சியப் படுத்திவிட்டு, அங்கு.. இங்கு என்று குட்டிபோட்ட பூனை போல அலைவதா? சொந்தங்கள் ஒன்றாக இருக்கும்போதுதான் மனம் விட்டுக் கதைக்க முடியும், கூடி உறவாட முடியும்.'

ரமணன் அவள் கூறியதை ஆமோதித்தான்.  அவன் மாலதியால் தான் இங்கிலாந்து போக நினைத்தான். அவள் தினமும் யாரிபிடித்து, சண்டைக்கு இழுத்து, வாய்க்கு வந்தபடி பேசி, வம்புச்சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

இப்போ நிலைமை மாறிவிட்டது. கடவுள் செயலால் பத்திரகாளி உருவம் இலட்சுமி வடிவானதுபோல, வீட்டுக்கு விளக்காய் மாலதி திரிபு பெற்றிருந்தாள். காலம் அவளை மாற்றியதால் ஓயாது கொந்தளித்துக்கொண்டிருந்த குடும்பச்சண்டை இலங்கை இனப்பிரச்சனை சமாதானப்பேச்சுவார்த்தையால் இயல்புநிலைக்கு திரும்பியதுபோல, அமைதியும் மகிழ்ச்சியும் அங்கு நிலவியது.

இதனால் ரமணன்குடும்பம் இங்கிலாந்து போகவேண்டுமென்ற அவசியமில்லாமற் போய்விட்டது. அதோடு ரமணனுக்கு ஏற்பட்ட கார் விபத்தில் அவன்மீது பிழை இல்லாது, மற்றவரில்    பிழை என்பதால் இன்சுரன்சிலிருந்து பெருமளவு பணம் கிடைத்து இருந்தது. இந்நிலையில் சிவரஞ்சினி ரமணனிடம் இவ்வாறு கேட்டதும் அவனும் எவ்வெதிர்ப்பும் காட்டாது சம்மதிக்க முடிந்தது.


44

தொண்டர் நீண்டகாலமாக எழுதி, அங்குமிங்கும் ஒற்றைகளில் இருந்த எழுத்துக்குவியல்களை சிவரஞ்சினி தேடி ஒன்றாக்கி, முழுமை பெறச்செய்து, அதை நூல்வடிவமாக்கினால் நல்லது என்று அவரை விடாது தூண்டி வந்தாள்.

'இது என் மனத்திருப்திக்காக எழுதியது, இதையெல்லாம் எப்படிப் புத்தகமாக வெளியிடுவது? வேண்டாம்;' என்று மறுத்துக்; கொண்டே வந்தார்; தொண்டர்.
சிவரஞ்சினி அவர் எழுத்தாக்கத்தை வரிவரியாக வாசித்து இரசித்தாள்.

தமிழ்மக்கள் இனப்பிரச்சனையால் பட்ட துன்பங்களையும் இழந்த பேரிழப்புகளையும் போர் தந்த அவலங்களையும் நெஞ்சுருகிக் கண்ணீர் பாயும் விதத்தில் தொண்டர் சித்தரித்திருந்தார்.

தொண்டர் தன்னடக்கம் நிறைந்தவர், இதனால் தன் ஆக்கத்தை ஒரு பொருட்டாகவே அவர் கருதவில்லை. ஆனால் நிறையப் புத்தகங்களை  வாசித்து ஒப்பீடு செய்யும் திறன்;கொண்ட சிவரஞ்சினிக்கு அப்படைப்பின் பெருமையை விளங்கிக்கொள்ள முடிந்தது. இது பற்றிப் பலபடக்கூறி, புத்தகமாக்கி வெளியிட ஒழுங்கு செய்யும் படி தொண்டரை வலிந்து கேட்டுக்கொண்டாள். அவளின் பேராவலுக்காக, அவர் தங்கள் மாவட்டத்தில் நடைபெறவிருந்த புத்தாண்டுவிழாவொன்றில் புத்தகத்தை வெளியிட, அவ்விழாவுக்குப் பொறுப்பான ஒருவரிடம்; கேட்க, அவரும் சம்மதித்து இருந்தார். இதனைத் தொண்டர் வைத்தியசாலையில் இருந்த சிவரஞ்;சினிக்கு நேரில் வந்து தெரிவித்தார். அவளுக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. இந்த உற்சாகத்தில் அவள் உடல்வலியும் பறந்தோட, வைத்தியரிடம் கேட்டு, அனுமதி பெற்று வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ரமணன் வீட்டிலிருந்தே தொண்டரின் புத்தகத்தின் வடிவமைப்பு, முன்னுரை போன்ற நூலின் உருவமைப்பை ஆக்க வேண்டிய வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
'பெயர், புகழ் எல்லாம் அவசியமா?' என்று தொண்டர் பின்னடித்தார்.

'தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவன் சமூகத்துக்குத் துரோகம் இழைக்கின்றான்.' என்று சிவரஞ்சினி ஒரே பிடியாக நின்று தமிழர் அச்சகம் ஒன்றில் புத்தகங்களைப் பதிக்க ஒழுங்கும் செய்;துவிட்டாள்.

சிவரஞ்சினி இந்நூலால் தொண்டருக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் அவர் இதுபற்றிப் பெரிதாக ஒரு கற்பனையையும் வளர்த்துக்கொள்ளவில்லை. தன் மனதிலெழுந்த தமிழினத்தின் விடிவுபற்றிய எழுச்சிக் கருத்துகளை உள்ளடக்கிய அப்புத்தகம் தமிழ்மக்களின் ஒற்றுமைக்கும் சமாதானத்தின் முன்னெடுப்புக்கும் சுதந்திரவாழ்வுக்கும் வழிகாட்டியாக அமையுமென்று நம்பினார்.

நூல்வெளியீட்டுக்குரிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அதே வேளை திருமணநாள் பின்போய்க்கொண்டே இருந்தது. தொண்டரின் அக்கா ருக்குமணி இரண்டு நற்கருமங்களையும் கண்டு களிக்க ஆவலுடன் கனடா போவதைப் பிற்போட்டுவிட்டு நின்றாள்.

சிறீலங்காவுக்குச் சென்று விசா பெற்றுத் திரும்பிவர வேண்டிய சிவரஞ்சினி, நூல்வெளியீட்டைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பயணத்தைப் பிற்போட்டிருந்தாள்.

புத்தகங்களும் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டன. அவை அழகாக, ஒலிப்பாகக் கண்ணைக் கவரும் வண்ண முகப்புடன் மிளிர்ந்தன.

இவ்வளவு நாட்களும் தாமரையிலைத் தண்ணீர்போலப் பட்டும் படாமலும் புத்தகவெளியீட்டில் ஆர்வம் காட்டிவந்த தொண்டருக்கு புத்தகவடிவில் தன் ஆக்கத்தைக் கண்டதும் அதில் ஒரு பற்று ஏற்பட்டது. தனது நீண்டநாள் உழைப்பு இன்னும் சிலநாட்களில் மேடையில் அரங்கேறப்போகிறது, பலர் வாசித்துப் பயன் பெறப் போகிறார்கள், தன்னை அறியாத எத்தனையோ பேர் கைகளில் அது தவழப்போகிறது. தமிழினத்தின் விடிவுக்குத் தன் எழுத்தும் ஏதோ ஒரு விதத்தில் அணுவளவாவது பங்கெடுத்துக் கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வளரத் தொடங்கியது.


45

மாலதி முழுநேர வேலைக்குப் போகும்போது அவசரஅவசரமாக, அரைகுறையாகச் செய்த வேலைகளை, இப்போ ஆறுதலாக முழுமையாகச் செய்தாள்.

பிள்ளைகள் படிப்பில் பின் தங்கியது கண்டு வெறும் கத்தலும் மிரட்டலுமாக இருந்தவள், இப்போ பொறுமையுடன் அவர்களுக்கு அருகிலிருந்து படிக்க வைத்து, அன்புடன் உற்சாகத்தையும் ஊட்டினாள். அதனால் அவர்களின் படிப்பில் கூடிய முன்னேற்றம் ஏற்பட்டதுகண்டு மனம் குளிர்ந்தாள்.

அவ்வேளை தமிழாலயத்தின் பொதுத்தேர்வு முடிவுகள் வந்திருந்தன. அதில் சறோ, ஜெயன் இருவரும் சித்தி பெற்றிருந்தனர். எனினும் திருப்திகரமான புள்ளிகளை எடுக்கவில்லை. இவர்களைவிட மோசமானநிலை சமரனுக்கு. அவன் சித்தி பெறவேயில்லை.

முன்பென்றால் இதற்கு மாலதி சீறிச்சினந்து பிள்;ளைகள் மீது கோபத்தைக் கொட்டித் தமிழும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம் என்று உறுமியிருப்பாள்.
இப்போ, அவள் மனம் நிதானமாகச் சிந்தித்துச்  செயற்பட்டது. இவர்கள் குறுகியகாலந்தான் தமிழ் படிக்கச் சென்றிருந்தார்கள். நீண்டகாலம் படித்துக்கொண்டு வரும் பிள்ளைகளுடன் ஓப்பிட முடியாதுதானே. இனிவரும் பரீட்சைகளில் நல்ல முறையில் சித்தி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஏசுவதற்குப் பதிலாக, அறிவுரையும் உற்சாகமும் வழங்கினாள்.

குமரன் வேலையால் வந்தான், அவன் குளித்துச் சாப்பிட்டபின் ஆறுதலாக இருக்கும் நேரம் பார்த்து,
'பிள்ளைகளின் பெறுபேறு வந்திருக்கு, இரண்டுபேர் சித்தி, ஒராள் இல்லை.' என்று சற்றுக் கவலை கலந்த குரலில் கூறினாள்.

'பறவாயில்லை, அதுகள் தமிழ்படிக்கச் சம்மதித்து, ஒழுங்காகப் போவதே ஒருபெரியகாரியம். படிக்கட்டும், ஆகவும் நெருக்கினால் படிக்கப்போகாத வேறை பிள்ளையளை உதாரணம் காட்டி, அவை எல்லாம் போகேல்லை... நாங்கள் ஏன் போக வேணும் என்று திருப்பிக் கதைக்குதுகள். இந்த நாட்டுச் சூழ்நிலை அப்பிடி. கொஞ்சம்கொஞ்சமாத்தான் தாய்மொழி தமிழின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அதன் பெருமைகளுடன் விளக்கிச் சொல்லி, பிள்ளைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.' என்று கூறிய குமரன், அப்பதான் மாலதி  அந்த விடயத்தைத் தனக்குத் தெரிவித்தவிதத்தை எண்ணிப் பார்த்தான்.

வந்து, சாப்பிட்டு, ரிவியைப் போட்டு ஓய்வாக இருக்கும்போது அமைதியாகக் கூறியிருந்தாள். முன்பென்றால், கதவைத் திறந்து காலை உள்ளே வைக்கும்போதே, மனிசன் என்ன களைப்போடு, மனஉளைச்சலோடு வாறான் என்ற எண்ணமில்லாமல், பிரச்சனைகளை எடுத்து வீசும் மாலதி, மாறிவிட்டது  குமரனுக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

முன்பென்றால் பிள்ளைகள் சித்தியடையவில்லை, புள்ளிகள் குறைந்துவிட்டதென்றால் அடியாபிடியா என்று போட்டடிப்பதும் மற்றப்பிள்ளைகளின் புள்ளிகளை விசாரித்து மனஎரிச்சற்படுவதுமாக இருப்பாள்.
இப்போ தானும் தன்வேலையுமென்று பொறுமை, நிதானம் நிலவ நின்ற மாலதியைக் காண, அவன் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகியது. எல்லாம் காலத்தின் மாற்றம் என்று அமைதிப்பெருமூச்சு விட்டான் அவன்.


அன்றிரவு தொலைபேசி மணியடித்தது.
நித்திரை குழம்பி, அரைத்தூக்கத்தில் மாலதி அதை எடுத்துக் கதைத்தாள்.
தொலைபேசிமணி குமரனையும் எழுப்பிவிட்டது. கதைத்துவிட்டு வந்தவள்,
'சுகுணா பெரியபிள்ளையாகிவிட்டாளாம்.... வாங்கோ போயிட்டு வருவம்!' என்றாள்.
குமரன் நேரத்தைப் பார்த்தான்... அதிகாலை நான்குமணி!
'இந்த நேரத்திலையோ! அதோடை வேலையெல்லே...'

'சரியில்லை, ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருக்குதுகள், வேறையும் ஆக்கள் போகினம்... குளிக்க வார்க்கப்போயினமாம், அதுதான் பழகின சனங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கினம்.'

'சரி, அப்ப வெளிக்கிடு!'
சோம்பலைத் தூக்கி எறிவதுபோல, போர்வையைத் தள்ளி விலக்கிக்கொண்டு கட்டிலை விட்டிறங்கினான் குமரன்.
வெளிக்கிட்டுப் போய்ச்சேர ஐந்துமணியாகிவிட்டது. கோடைகாலம் என்பதால் இருள் விலகி, வானம் வெளித்திருந்தது.

சுகுணாவீடு அந்தஅதிகாலைநேரம் சனங்களால் நிரம்பிவழிந்தது. குமரனும் மாலதியும் படிகளில் ஏறிப்போக, சுகுணாவீட்டிலிருந்து பொலிஸ்காரர் இறங்கி  வந்துகொண்டிருந்தார்கள்.
அமைதியாக இருக்கும்படி அவர்களைப் பார்த்து ஜேர்மன்மொழியில் சொல்லிவிட்டுப் போனார்கள்.
'இது வேறை...' என்று குமரன் முணுமுணுக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

உள்ளே ஒரே அமளிதுமளி, இந்தச்சத்தம் தாங்க முடியாமல் மேல்வீட்டுக்காரன் பொலிசுக்கு அறிவித்ததால், அவர்கள் வந்து கண்டித்துவிட்டுப் போகிறார்கள் என்பது தெரியவந்தது.

எங்;கள் கலாச்சாரம் ஜேர்மன்காரனுக்குத்; விளங்காது என்று குறைப்பட்டார் ஒருவர்.

நாங்களும் சூழ்நிலை, அயலட்டையை அனுசரித்து நடக்க  வேண்டும், கொஞ்சம் அமைதியாக இருக்கலாமே, சாமத்தியவீட்டு சம்பிரதாயங்கள் அமைதியாக நடந்தாலும் வந்தவர்கள் மூலைக்கு மூலை நின்று பல்வேறு கதை கதைத்துக் கொண்டிருந்ததால் ஒருவர் கதைப்பது மற்றவருக்குக் கேட்;காதளவுக்கு ஒரே களாபிளாவாக இருந்தது. இது எங்களைப் பொறுத்தவரை வழக்கமானதொன்று. ஆனால் அயல்வீட்டில் வதியும் ஜேர்மன்  காரருக்கு இது நேர்மாறானதொன்றாகும்.

ஜேர்மன்காரர்  வீட்டுக்கு விருந்தினர் வருவதே மிகமிக அரிது. சிறுகொண்டாட்டம் என்றாலும் மண்டபத்திலோ, உணவுச்சாலையிலோ கொண்டாடுவார்கள். அவர்கள் மனோநிலை வேறு, எங்கள் மனோநிலை வேறு. எனினும் ஒரு இனம் வாழும் நாட்டுக்கு வந்து... மொழி, நிற, கலாச்சாரங்கள் மாறுபட்ட நாம் வாழும்போது, சற்று நிதானமுடன் சிந்தித்து அவர்களுக்கும் இடைஞ்சல் விளைவிக்காதவகையில் நடக்கும்போது பரஸ்பர  ஒற்றுமைக்கும் இங்கு வாழும் எங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கும் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

அப்போ ஒருவர், 'சாமத்தியச்சடங்கு ஹோல் எடுத்துப் பெரிசாச் செய்யப்போகினம் போலக்கிடக்கு!' என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவர், 'இப்ப அதுக்குக் குறை இல்லை... எங்கை பார்த்தாலும் மாறிமாறி வந்து கொண்டே இருக்கு!' என்றார்.

இதைக்கேட்ட இன்னொருவர், 'தேவையில்லாமல் எங்கடை சனம் சும்மா நீ முந்தி, நான் முந்தி என்று பெயர் எடுக்கத்தான் இந்தக் கொண்டாட்டம்..... ஊரிலை என்றால் இப்பிடியே...? எல்லாருக்கும் சொல்லி, காட்டைக் கொடுத்துக் கேலிக்கூத்து ஆக்கிப்போட்டினம்.' என்று தன் வெறுப்பையும் எரிச்சலையும் வெளிக்கொட்டினார்.

அந்தநேரம் பார்த்து வந்த தொண்டர், இவர் விமர்சனத்தைக் கேட்டு, இவரையும் அதில் நின்ற மற்றவர்களையும் பார்த்து மெதுவாக அறிவுறுத்தினார்.
'நல்ல விசயத்துக்கென்று வந்தனாங்கள், அங்கை அதுகள் செய்யிறதைப் பார்த்து, வாழ்த்திவிட்டுச் சந்தோசமாகப் போகவேணும். தமிழன் எது செய்தாலும் ஏதோ ஒரு காரணத்தோடு தான் செய்து வந்திருக்கிறான். இந்தச் சடங்கைப் பெரிசாச் செய்யிறதும் சிறிசாச் செய்யிறதும் அவரவர் வசதியையும் விருப்பத்தையும் பொறுத்;தது. கேலிக்கூத்து, அதுஇதென்று சொல்லி ஒரு சமூகத்தின் ஒன்றுகூடலைக் குழப்பாமல், புக்கை சாப்பிட்டமாம், தேத்தண்ணியைக் குடிச்சமாம் என்று இருக்கிறது தான் அழகு!'

தொண்டரின் கூற்று அதில் நின்ற ஒருவருக்குச் சுட்டுவிட்டது. அவர் ஏற்கனவே தொண்டரின் பெயர், புகழ் என்பவற்றைக் கண்டு பொறாமையில் வெந்து கொண்டிருந்தவர். தொண்டர் கூறிய புத்திமதியைக் கையசைவால் நிராகரித்து, முகத்தில் அறைந்தது மாதிரி வார்த்தைகளை வீசினார்.

'நீரெல்லாம் உது கதைக்கக்கூடாது, எங்களுக்கு உம்முடைய வண்டவாளங்கள் தெரியாது என்று நினைக்காதையும். குமரனின் சகோதரி விசயமெல்லாம் கேள்விப்பட்டனாங்கள், நீர் வெள்iளையாத் திரிஞ்சாப்போலை எல்லாத்தையும் மூடி மறைக்கலாமென்று மட்டும் நினைக்காதையும்!' உரத்த குரலில் தொண்டரை அவமானப்படுத்தவென்றே வேண்டுமென்று கூறிய வார்த்தைகள்; பலர் காதில் வீழ்ந்தன.

'என்ன பிரச்சனை...?' என்று அங்கு நின்றவர் கவனமெல்லாம் இந்தப்பக்கம் திரும்பியது.

தொண்டர் கோபப்படாமற் சொன்னார்.
'என்னைப்பற்றிக் கதைக்கிறதென்றால்;, வாங்கோ வெளியிலை கதைப்பம்! இங்கை அவனுடைய பிள்ளையின்ரை விசேடத்துக்கு வந்து தேவையில்லாமல் வம்பளக்காதேங்கோ!'

'வெளியிலை வா என்று என்ன சண்டித்தனம் கதைக்கிறியோ? ஓகோ... மச்சான்மார் இருக்கிறாங்கள் என்ற துணிவிலை கதைக்கிறியோ! எனக்கும் ஆக்கள் இருக்கிறாங்கள்.. ஒரு ரெலிபோனோடை படையே வந்து குவியும்!' கொக்கரித்தார் அவர்.

அவரைப் பரிதாபமாகப் பார்த்த தொண்டர், கிண்டல் தொனிக்க 'இவ்வளவு பெரும்படை உங்களிட்;டை இருந்தால் திரட்டிக்கொண்டு வாங்கோ, எங்கடை நாட்டிலை கண்ணிவெடி அகற்றுதலிலையிருந்து, கடலரிப்பைத்தடுப்பதுவரை எத்தனையோ வேலைகள் இருக்கு!' என்று கூறிவிட்டு, வேறுபக்கம் நடந்தார்.

'கேட்டீங்களா! வம்புச்சண்டையை விட்டடிட்டு, உடம்பிலை வலு இருந்தால் நாட்;டிலை போய் தேசத்தைக் கட்டி எழுப்புங்கோ!' என்றார் அதில் நின்ற ஒருவர்.


நடந்த சம்பவம் தொண்டர் சொல்லாமலே சிவரஞ்சினியின் காதில் வீழ்ந்தது. அவள் செவிகளில் அவ்வார்த்தைகள் பழுக்கக் காய்ச்சிய ஆணி போன்று புகுந்து, அவளைப் பதைபதைக்க வைத்தன.

நிமிர்ந்த நெடுமால் போல் வாழ்ந்த மனிதனுக்கு பாவி என்னால் இப்படியொரு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுவிட்டதே என்று துடிதுடித்தாள். அவரைச் சந்தித்து அழுதழுது மன்னிப்புக் கேட்டாள். தொண்டர் அவளை அழவிடாது தன் தோளிலே சாய்ந்து ஆதரவாகத் தடவிவிட்டவாறு,
'உண்மையைச் சொல்லியிருக்கலாம்தானே, என்ரை பிழைக்கு நீங்கள் அவமானப்படுகிறதே!'

'உன்னைக் குற்றம் சொல்ல, நீ என்ன பிழை விட்டாய்? வேலை இல்லாதவர்கள் நா அசைந்தபாட்டில் வாய்க்கு வந்தபடி கதைப் பார்கள். அதெல்லாம் அவமானமோ, தலைகுனிவோ என்று நாம் எடுத்து, எம் மனதை வேதனைப்படுத்தக்கூடாது. எமது கடமையி லிருந்து ஒதுங்கவும் கூடாது.

ஆத்திரமூட்டும் செயலைக் கண்டு, கொதித்து எழாதவன் கோழை, கொதித்து எழும் கோபத்தை சமயசந்தர்ப்பம் கருதி அடக்கி ஆளத்தெரியாதவன் அறிவிலி...' என்று கூறி, தொண்டர் சிவரஞ்சினியைச் சமாதானப்படுத்தினார்.

ருக்குமணியும் தொண்டருடன் சேர்ந்து கொண்டாள். அவர்கள் பேச்சில் அவள் மனம் அமைதியடைந்த அதேவேளை தொண்டர்வீட்டுத் தொலைபேசி அலறியது.

மறுமுனையில் பரதனின் குரல்.
'கலைவிழா நோட்டீஸ் பார்த்தனீங்களே? நீங்கள் சொன்னபடி அதிலை உங்கடை நூல்;வெளியீடு குறிப்பிடப்படவில்லை... ஏன் மாட்டன் என்று சொல்லிப் போட்டீங்களோ...?'

தொண்டருக்கு அதிர்ச்;சியாக இருந்தது.
'நான் மாட்டன் என்று சொல்லேல்லை, கொமிற்றியிலை ஓமென்று சொல்லிக் கதைச்சதாலைதான் புத்தகம் எழுதி வைச்சிருக்கிறன், அவை இதுவரை மாட்டனென்று சொல்லேல்லை, நோட்டீஸிலை ஏன் போடேல்லையென்று தெரியாது.'

'எதுக்கும் கேட்டுப்பாருங்கோ, நிகழ்ச்சிநிரலிலை போடாமற் செய்யப்போகினமோ தெரியாது, என்றாலும் ஒருக்கா நினைவு படுத்துங்கோ!'
பரதன் தொலைபேசியில் சொன்ன செய்தியை தொண்டர் சிவரஞ்சினிக்கும் தமக்கைக்கும் கூறினார். எதிர்பாராத தகவலால் அவர் நா வரண்டிருந்தது.
'நீங்கள் கதைத்திருந்த, விழாவுக்குப் பொறுப்பானவரிட்டைக் கேளுங்கோ!' என்ற சிவரஞ்சினியின் தூண்டுதலில், தொலைபேசி யையெடுத்து இலக்கங்களை அழுத்தினார்.

'இப்ப உங்களுக்;கு ரெலிபோன் எடுக்கவென்றுதான் இருந்தன்..' என்று தொடங்கிய அந்த மனிதர்,
'கோவிக்காதேங்கோ, நான் ஒராள் கதைச்சுச் செய்யிற காரியம் இல்லையண்ணை... உங்கடை புத்தகவெளியீடு நல்லதொரு விசயமமென்றாலும், உங்களைப்பற்றி இப்ப பலபல கதையள் கிளம்பியிருக்கு.. இதாலை பிறகு எங்கடை விழாவுக்குத் தேவை இல்லாத குழப்பங்கள், கேள்விகள் வரலாம்.... எங்கடை விழாவிலை புத்தகவெளியீட்டைச் செய்ய முடியேல்லை, அடுத்த முறை பார்ப்பம்!' என்றார்.

'சந்தோசம்!' என்ற ஒருசொல்லுடன் தொண்டர் தொலைபேசியைவைத்துவிட்டு, ஒருகணம் பேசாமற் சிலையாக நின்றார்.

'சீ! இவங்களும் ஒரு மனிசன்களா?' என்று அவர் மனம்; சினத்தைக்கொட்டியது.

கோபம் மனிதனைக் கெடுத்து அழிக்கும் நெருப்பு, அது ஆசை இருக்கிற மனதில் குடியிருக்கும். தனது ஆசை நிறைவேற வில்லை என்றதும் அது சீறிப் பாய்ந்து கொந்தளித்து எழும்.

தொண்டர் அன்றொருநாள் காதலித்து, காதலி ஏமாற்றிவிட்டு வேறொருவரை மணந்ததோடு...... ஆசைப்படுவதை அடக்கி, கிடைப்பதைக்கொண்டு திருப்திப்பட்டு வாழப்;பழகிக் கொண்டவர்.

சிவரஞ்சினியைக் கண்டு, அவளை மனம் விரும்பியபோதுகூட, ஆசையையடக்கி வேண்டாமென்றவர். பிறகு பலரின் தூண்டுதலாலும்;... அவள் துன்பங்களால் பெரிதும் தாக்கப்பட்டு, ஆதரவுக்கு ஒரு ஆள் இல்லாத அநாதைமாதிரி நின்றதனாலும்  அவளுக்குத் தன் நெஞ்சில் அடைக்கலம் கொடுத்தவர்......
அது அவரின் முழுமையான அன்பு, தான் அடைக்கலம் தந்த சிவரஞ்சினிமீது அடுத்தவர் எவ்வளவு களங்கம் கண்டபோதும் அவளை அவர் சீதையாகவே கண்டார்.

கண்ணகி தன் கோபத்தால் மதுரையை எரித்தாள். சீதை, எரி என்று சொன்னால் இலங்கை மட்டுமல்ல, அண்டங்கனே எரிந்து நீறாகி இருக்குமாம். ஆனால் சீதை அப்படிச் செய்யவில்லை. இராமன் இருக்கிறான்... அவன் தன்னை மீட்பான் என்று தன் கோபத்தை அடக்கி வந்தாளாம்.

நெருப்பு அடங்கியிருக்கும்போது நன்மையளிக்கும், கட்டு மீறினால் தன்னைத் தொட்டது, எட்டியது எல்லாவற்றையும் சுட்டெரிக்கும். இப்படித்தான் கோபமும்....... அடக்கி வாசித்தால் வாழ்க்கை வளமாக இருக்கும், அடங்காமல் கொந்தளித்தால் குடும்பமே குலைந்து, வாழ்வு அழிந்து, எல்லாமே நாசமாகிவிடும்.

தொண்டரின் மௌனம் சிவரஞ்சினிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.
ருக்குமணி நிதானமாக நின்றாள். பன்றி முட்டியபோதும் புலி பேசாமற் போனதாம், பயந்தல்ல... பாவம் பன்றி, பிழைத்துப் போகட்டுமென்று. அதுதான் 'தம்பி தொண்டர் ஒருபோதும் தோற்றது கிடையாது, நெடுமாலின் தொண்டன் அவன்.' மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

ஒருசிலகணம்;;தான் தொண்;;டர் மனதில் கோபம் நிலைத்திருக்கும்.
'கிருஸ்ணா!' என்று அவர் நா உச்சரித்தது.
'நீ செய்கிறாயென்று நினைத்தேன், இதனால் ஆசை வைத்தேன்;, நீ செய்யவில்லையென்றால்; இருக்கட்டும், நானும் என் ஆசையை விட்டுவிடுகிறேன்.'
தொண்டரின் கோபம்;, ஏறிய வேகத்தில் இறங்கிக்;கொண்டது.

சிவரஞ்சினி அவர் எழுத்துக்களை நேசித்தாள்;. அவள் அதைப் புத்தகமாக்கினால் நல்லது என்று ஒரேபிடியாக நின்றதால் அவருக்கும் ஒரு ஆசை வந்தது. 'இப்போ பறவாயில்லை... புத்தகம்தானே இருக்கட்டும், வெளியிட்டாலென்ன, வெளியிடாவிட்டாலென்ன...! கடதாசிகளில் இருந்தது புத்தகங்களாக உருப்பெற்றுவிட்டது. இதுவும்  நன்மைக்கே.' என்று மனதைத் திருப்;திப்படுத்திக்;கொண்டார்.

சிவரஞ்சினியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. எல்லாம் தன்னால்தானே வந்தது என்று ஓவென்று அழுதுவடிந்தாள்.

ருக்குமணி தொண்டருக்கு அடுத்தவள், விறைச்ச கட்டையாக நின்றாள். 'என்ரை தம்பியிலை களங்கம் கண்டவனை நேரிலே கண்டால் நல்ல கேள்வி கேட்டிடுவேன்! யாரும் கேள்வி கேட்டுப் போடுவினமாம். தங்கள் விழா கலைந்து போய்விடுமாம்... கேள்விக்குப் பதில் சொல்லத்;; தெரியாதவனுக்;கு எல்லாம் கொமிற்றியும் கொண்டாட்டமும்...' என்று சிவரஞ்சினியை அழ விடாமல் அடக்கினாள்.

47

அப்போ வீட்டுமணி 'கிறிங்;' என்று காதைக் கிழித்தது.
'வீட்டுமணி அடிக்கத் தெரியாததுகளெல்லாம் ஜேர்மனிக்கு வந்து இருக்குதுகள்...' என்றபடி கதவைத் திறந்தாள் ருக்குமணி.

அங்கே சாவித்;திரியும் மகனும் நின்றார்கள்.
'எப்பிடி எல்லாரும் சுகமாக இருக்கிறீங்களா?'

'உங்கடை மருந்துக்கு எல்லாம் சுகம், கடிதான் போகேல்லை!'

'எந்தக்கடியைச் சொல்லுறீங்கள்?'

'உங்கடை கடியைத்தான் சொல்லுறன்.' காரமாகச் சொன்னாள் ருக்குமணி.

உள்ளே வந்தபடியே, 'இருந்து கதைப்பம்!' என்று சோபவில் இருந்தபடி,
'நான் முதலே சொன்னனான், எங்களோடை யாரி கட்டினால் யாரும் ஜெயிக்கமுடியாது. இப்ப அறிஞ்சிருப்பீங்கள்தானே!' நாக்கிலே திமிர் தொனிக்கச் சொன்னாள் சாவித்திரி.

'உங்களோடை யார் யாரி கட்டினது? நீங்கள் எந்த யுத்தத்திலை ஜெயித்து வெற்றிவாகை சூடி வந்திருக்கிறீங்கள்?' நளினம்படக் கேட்டாள் ருக்குமணி.

தொண்டரோ, சிவரஞ்சினியோ வாய் திறக்கவில்லை. எல்லாக் கலக்கங்களுக்கும் இந்த நாரதர்தான் முதற்காரணம் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டனர்.

கட்டுக்;கட்டாக் கிடந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, ஒரு மமதைச்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, 'இதையெல்லாம் என்ன செய்யப் போறீங்கள்? சிலோனிலை என்றால் சுண்டல் சுத்தக் கொடுக்கலாம். இங்கை என்ன குப்பைக்குட் போட வேண்டியது தானே!' என்றாள்.

சிவரஞ்சினிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தொண்டர் அவளைப் பார்வையால் அமைதிப்படுத்தினார்.

ருக்குமணி பதில் கொடுத்தாள்.
'கழுதைக்குக் கற்பூரவாசனை தெரியுமே? அது திரும்பி நின்று ஏதோ செய்திட்டுப் போனாலும் ஆச்சரியப்பட முடியாது. அப்பிடித்தான் நீங்களும்...
புருஸன், பிள்ளை என்று குடும்பமாக வாழுகிற நீங்கள், அடுத்தவன் வாழ்வை ஏன் கெடுக்கப் பார்க்கிறீங்கள்? போங்கோ, போய் உங்கடை வேலையைப் பாருங்கோ!'

அதற்குச் சாவித்திரி,
'சிவரஞ்சினிக்கும் உங்கடை தம்பிக்கும் எப்ப முடிச்சுப்போட நினைச்சீங்களோ, அப்பவே உங்களுக்குச் சனியன் பிடிச்சுக்; கொண்டது. இவளாலை என்ரை தம்பி செத்தவன், உன்ரை தம்பியையும் பறி கொடுக்கிறதென்றால் வீட்டுக்கை வைச்சிரு, இவளொரு இராசியில்லாதவள்;, சொல்லுறதைக்கேள்!' நெஞ்சைக் குத்தும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

'எழும்பி வெளியே போ!' ருக்குமணி சினத்தில் கத்தினாள்.
சாவித்திரியுடன் கூட வந்திருந்த அவள் மகன் கரன்,
'அம்மா வாங்கோ, என்ன தேவையில்லாமற் சண்டை போடுறீங்கள்?' என்று சொல்லி இழுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

அவர்கள் போக, சிவரஞ்சினி தானும் வெளிக்கிட்டாள். அவளுக்கு ருக்குமணி, 'நீ ஒன்றையும் பெரிசுபடுத்தாதை! நானும் தம்பியும் உயிர் போனாலும் உன்பக்கம்; நிற்பம்! இண்டைக்கு எங்கடை வீட்டிலை நில்! ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் துர்ப்பாக்கியமாக அநேகமான சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக, இயமன்களாக மாறிவிடுகிறார்கள். பெரும் பதவி பெற்ற தாய்மார் சிலர் தாங்கள் அன்பின் வடிவம் என்பதை மறந்து, அராஜகத்தில் குதித்து பெரும் அழிவுகளையும் ஒற்றுமையின்மையையும் கிளறி விடுகிறார்கள்.' என்று தன் அருகில் இருத்தி அவள் அழுகையுடன் கூடிய கவலையைத் தணிக்க முற்பட்டாள்.


சிவரஞ்சினி, இனியும் இப்படியே ஜேர்மனியில் இருந்து   மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்ததாய்த்தான் முடியும் என்று எண்ணியவளாய், விசா எடுத்துவருவதென்று சிறிலங்காவுக்குப் புறப்பட்டாள். அவசியமான படிவங்களையும் கொடுத்து, அவளை விரைவாகத் திரும்பிவரும்படி தொண்டர் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார். அவருடன் குமரன், ரமணன் எல்லோரும் கூடவந்திருந்தார்கள்.

இரண்டு, மூன்று கிழமைகளில் விசா எடுத்துக்கொண்டு சிவரஞ்சினி திரும்பிவிடுவாள் என்பதால் மனதைத் தேற்றிக் கொண்டனர்.

மனிதன் எவ்வளவுதான் உறவுகளுடன் கூடி வாழ்ந்தாலும் பிரிவு என்பது அவனுடன் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது.
பணந்தேடல், காதல், சுகவாழ்வு போன்ற உள்ளார்ந்த ஆசை களினால்; உறவுகளைப் பிரிகிறான். நோய், பகை, அரசியற் காரணங்கள் போன்றவற்றின் தலையீட்டினாலும் உறவுகளைப் பிரிய வேண்டியுள்ளது. இந்தப் பிரிவுத்துயர் மனித சமூகத்துக்கே பெரிய வேதனையைத் தந்துவிடுகிறது. பிரிவினால் ஆண்களில் பலர் மதுபானப்பிரியர்களாகிவிடுவதும்... பெண்கள், கண்ணீருடன் துவள்வதும் மலிந்துவிட்ட நிகழ்வுகளாகும்.

தொண்டருக்கு வீட்டுக்கு வந்துபின் நேரமே ஓட மறுத்தது. பார்த்த இடமெல்லாம் சிவரஞ்சினி நிற்பது போலப் பிரமை.

ருக்குமணி குடும்பம் டென்மார்க்கில் வசிக்கும் உறவினர்வீட்டுக்கு சிலநாட்கள்; தங்கிவிட்டு வருவதாகப் போய்விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது.

மலைபோலக் குவிந்து கிடந்த புத்தகங்களைக் கண்களில் படாதவாறு ஒரு மூலையில் அடுக்கி மூடிவைத்தார். அவை சிவரஞ்சினியை ஓயாது நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன. வேலைக்குப் போனாலும் அவள் நினைவு வந்தது, தமிழ்ப் பள்ளிகூடம் சென்றபோதும் அவள் நிழல் தொடர்ந்தது, வீட்டில் இருந்தபோதும்; அவள் எண்ணம் விரிந்தது. என்ன செய்வதென்று தெரியாமற் தொண்டர் தவித்தார்.

வழக்கமாக அறிவுநூல்கள், இலக்கியப்புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு கொண்ட அவருக்கு, நேரம் போவதென்பது றெயின்  ஓடுவதுபோலிருக்கும். இப்போ எதிர்மாறாக ஆமை நகர்வது போன்று நாள் நீண்டு அலுப்புத் தட்டியது.

இருவாரங்கள் ஊர்ந்து விலக, சிவரஞ்சினியின் அஞ்சல் சிறீ லங்காவிலிருந்து வந்திருந்தது.
ஆவலுடன் பிரித்து, ஆசையுடன் இதயம் படபடக்கப் படித்தார். முதல் இரு வரிகளும் வாசித்தபின், மேலே தொடர அவர் கண்கள் கலங்கின. நெஞ்சு கனப்பது போன்று உள்ளம் துவண்டது. நிமிர்ந்து, விரைந்து, ஓடித்திரிந்த சிங்கம் சோர்ந்து வாடி நிற்பதுபோலக் கடிதத்துடன் நின்றார்.

சிவரஞ்சினி, விசா பற்றிய விபரமேதும் குறிப்பிடவில்லை.
'நான் உங்கள் புனிதமான வாழ்வைக் களங்கப்படுத்திவிட்டேன், என்னால் உங்களுக்கு வீண்சிரமங்களையும் கவலையையும் தான் கொடுக்க முடிந்ததேதவிர, நிம்மதியையோ, சந்தோசத்தையோ தர முடியவில்லை. இதனால் நான் ஜேர்மனிக்கு மீண்டும் வரும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள், தமிழர்தேசத்தில் எங்கோ ஓர் மூலையில் நான் உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பேன்.'

பேய் நெற்றியில் அறைந்ததுபோல இருந்தது. அதிர்ச்சி தாங்காமல் ஆடிப்போய் நிலத்தில் விழுந்து, கவலை கடலலை என அடிக்க உருண்டுபுரண்டார். பூட்டிய கதவுக்குள் ஒரு வீடே அழுது புலம்பியது.

இவ்வளவு சோகமா...?
தொண்டர் இருந்ததுபோலத்தான் இருக்கிறார். அவரிடம் எல்லாம் இருக்கிறது. இத்தனை காலமும் தனியாகத்தானே வாழ்ந்தவர். இப்ப என்ன நடந்துவிட்டதென்று, கப்பல் கவிண்டுவிட்டதுபோல விண்ணதிரக் கத்துகிறார்? விளங்குபவர்களுக்கு விளங்கும்.

மனதில் எவ்வளவு வைராக்கியம், உறுதி, நம்பிக்கையிருந்தாலும் காதல் கொண்டவர்கள் அதை இழந்தால் வேர் வெட்டிய மரம் போல் ஆடிப்போய்விடுவார்கள். துவண்டு, சுருண்டு தம் செயலிழந்து போய் நிற்பார்கள்.
இந்நிலையில் தொண்டரின் வாழ்க்கை தொடர்ந்தது.

டென்மார்க் சென்றிருந்த ருக்குமணியும் இது கேள்விப்பட்டு அதிர்ந்துபோய்விட்டாள். எனினும் உடனே ஜேர்மன் திரும்ப முடியாதளவுக்கு, அவள் போய் நின்ற வீட்டில் பிள்ளையின் முதலாவது பிறந்தநாள் பெரிதாகக் கொண்டாட இருப்பதால் அதை முடித்துக்கொண்டு போகும்படி அவர்கள் வற்புறுத்தி அவளைத் தடுத்துவிட்டார்கள்.

குமரன், மாலதி, ரமணன், பூவிழி யாவருக்கும் சிவரஞ்சினி திரும்பிவர மறுத்தது பெரும் சோகத்தைக் கொடுத்தது. அவள் எங்கு போயிருக்கிறாள், யாருடன் இருக்கிறாள் என்பது தெரியாததால் தொலைபேசிமூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கொழும்பிலுள்ள உறவினர்களுக்கு, சிவரஞ்சினியைச் சந்தித்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி சொல்லியிருந்தார்கள்.

                 

48

பிறந்தநாள்விழாவை முடித்துக்கொண்டு ருக்குமணிகுடும்பத்தினர்  மீண்டும் தொண்டர் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். தம்பியின் சோகத்தைக் காண ருக்குமணிக்கே தாங்கிக்கொள்ள முடிய வில்லை. ஊருக்கே ஆறுதல் சொல்லும் மனிதன், ஆற்றமுடியாத கவலையில் இருக்கிறான்.. அவனுக்கு ஆறுதல் சொல்ல ஆண்டவனைத் தவிர, வேறு யாரால் முடியுமென்று அவள் நினைத்தாள்.

வீட்டில் அக்காகுடும்பத்தினர் இருந்ததால், தொண்டர் தன் கவலையை வெளிக்காட்டுவதைத் தவிர்த்துக் கொண்டார். அப்போதான் அவருக்கு ஒரு எண்ணம் பிறந்தது. எந்தவொரு பிரச்சனையையும் 'கிருஸ்ணா நீ பார்த்துக்கொள்!' என்று பகவானிடம் விட்டு, அவனிடம் தஞ்சம் கோரும் நான் இந்த இடத்தில் மட்டும் ஏன் அவனிடம் இதை விட நினைக்கவில்லை?

சிவரஞ்சினியின் காதல் சீராக வந்து கொண்டிருந்ததால், அவள் என்றும் அவர் கைக்கெட்டிய தூரத்தில் இருந்ததால் தன்னால் அடைய முடிந்த ஒன்று என்று இதுபற்றிக் கடவுள் உதவியை நாட நினைக்கவில்லை. இது மனிதஇயல்பு.

கண்பார்வை நன்றாக இருக்கும்போது ஒருவன் கடவுளிடம் என் கண்கள் என்றும் நன்றாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திப்ப தில்லையே! கண்களில் குறைபாடு வந்தவன்தான்;, கடவுளே எனக்கு நல்ல பார்வையைக் கொடு! என்று பிரார்த்திப்பான். இதுமாதிரித்;தான் தொண்டரும் இருந்துவிட்டார். இப்போ தண்ணீர் தலைக்கு மேலேறிவிட்டது. 'கிருஸ்ணா!' என்று அவர் பகவானை நினைத்து, அவனிடம் அடைக்கலம் புகுந்தார்.

பார்த்தனுக்கு நீ பகர்ந்த பகவத்கீதையை நான் இதயத்தில் வைத்துப் பூசிப்பது உண்மை.

இங்கே வீசும் காற்றும் அங்கே பூக்கும் மலரும் கடலில் உருளும் அலையும் வானில் மிளிரும் விண்மீனும்; புவியில் வாழும் உயிரும் உன் திருவருளின் சிறுதுளிகள் என்பதை நான் நம்புகிறேன்.

ஆசையை அடக்கி வாழ்ந்த என்மனதில் அதை வளர்த்தவிட்ட நீ, அவளை என்னிடமிருந்து மறைத்தது ஏன்? 'மாயவா' நீ பொல்லாதவனடா, மாயையால் மனிதனை மயக்கி சிரிக்கவும் அழவும் வைப்பவன்.
சிவரஞ்சினி எங்கே, என்ன செய்கிறாளோ தெரியாது....... அவள் பாவம், என்மீது உயிரையே வைத்திருக்கிறாள், அவள் எனக்கு வேண்டும்.
உன் திருவருட்சோதியின் ஒற்றைக்கதிரின் ஒளி போதும் இவ்வுலகை இயக்குவதற்கு என்பதை என்னால் அறியமுடிகிறது. உன்னால் முடியாதது என்று ஒன்று கிடையாது. விசுவரூபனான உன் பாதங்களின் முன் என் பிரச்சனையை பக்தியுடன் வைத்தள்ளேன். இனி இது உன் பிரச்சனை!' என்று கண்ண பிரானிடம் தன் மனதிலுள்ள கவலைகளைக் கொட்டிவிட்டு, தன் கருமத்தில் ஈடுபட்டார் தொண்டர்.

அவர் மறுநாள் வேலையால் வந்தபோது, 'மாமா!' என்று வந்த உமா, 'உங்கள் புத்தகம் வருகிற சனிக்கிழமை வெளியிடப் போயினமாம், இப்ப றேடியோவிலை அடிக்கடி அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.' என்றாள்.

தொண்டர் நம்பிவில்லை, 'அப்படி யாரும் என்னுடன் சொல்ல வில்லையே... எனக்குத் தெரியாமல்;, நான் கேட்காமல் எப்படி இது?' குழப்பத்துடன் நின்றார்.

ருக்குமணியும், 'எனக்கும் விளங்கேல்லை, ஆனால் றேடியோவில் சொல்லிக்கொண்டிருக்கினம். தங்கள் ஆண்டுவிழாவில், ஏதோ ஒரு இடம் ஜேர்மனியிலை......... பிரமாண்டமாகக் கொண்டாடுகினமாம், அதிலை இலங்கையிலிருந்துகூடப் பெரியபெரிய கலைஞர்கள் பங்குபற்றுகினமாம், அங்கை உன்ரை நூல்வெளியீடும் இடம் பெறப்போகுதாம்!' என்று சந்தோசத்தில் தடுமாறினாள்.

மூலைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகக்கட்டுகளில் மேலிருந்த பெட்டியைத் திறந்து பார்த்தார் தொண்டர்.
உள்ளே ஒரு தாளில், பத்துப்புத்தகங்கள் அனுப்பியிருந்த விபரம் இருந்தது. அது சிவரஞ்சினியின் கையெழுத்து.
பிரபலபத்திரிகை, சஞ்சிகை, வானொலி,  தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒவ்வோர் புத்தகங்களும் அனுப்பி இந்நூலை வெளியீடு செய்வதற்கு உதவிபுரியுமாறும் குறிப்பிட்டிருந்தாள் சிவரஞ்சினி.

அன்று மாலை, பரதனும் வானொலியின் சார்பில் ஒருவருமாகத் தொண்டர்வீட்டுக்கு வந்தனர். விழா பற்றிய விபரங்களைத் தெரிவித்து, நூல்வெளியீடு ஒரு நல்ல சிறப்பம்சமாக இடம் பெறுகின்றது என்றும் கூறினார் வானொலிக்குரியவர்.
தொண்டர் அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்நூலால் கிடைக்கும் பணம் முழுக்கப் போரினாற் பாதிக்கப்பட்ட அநாதைச்சிறுவர்களின் கல்விக்;குப் பயன்படுத்த இருப்பதாகவும் கூறினார்.

அவர்கள் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள். தொண்டர் அந்தப் புத்தகக்குவியலின் முன் போயிருந்து ஒரு புத்தகத்தைப் பிரித்து பார்த்துவிட்டு, கண்களை மூடி எண்ணச்சுழலில் மிதந்தார்.

'பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பிரமாண்டமான விழா அது. பிரபலமான கலைஞர்களின் பெரும் படைப்புகள் இடம்பெறும் மேடையில், இந்தப் புத்தகம் விமர்சிக்கப்படப் போகின்றது. அதன் முதற்பிரதி ஈழத்துப்பிரபல எழுத்தாளர் ஒருவருக்குக் கொடுக்கப்பட இருக்கிறது.'
இவ்வாறு சிறிதுநேரம் அப்படியே அந்த நினைவுகளுடன் ஒன்றிப் போயிருந்த தொண்டருக்கு, இதற்கு முதற்காரணமாயிருந்த சிவரஞ்சினியின் எண்ணம் நெஞ்சில் முட்டியது. அவள் இதை அறிந்தால் எவ்வளவு ஆனந்தப்படுவாள்.. அவளும் கூடஇருந்தால்
எவ்வளவு நல்லது என்றெல்லாம் அவர் மனது பலபல யோசனையின் வசப்பட்டு நின்றது.
சிவரஞ்சினிக்குத் தகவல் சொல்லப் பலவழிகளில் முயன்றும் அவளுடன் தொடர்பு கிடைக்கவில்லை.

விழா நாளும் வந்தது.
கோடைகால வெயில் நாளது, விழாவைக் கண்டு களிக்;க வரும் மக்களுக்குச் சாதகமான சூழலைக் கொடுத்தது.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே மண்டபம் இரசிகர்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வானொலிக்கலையகம் நடத்துவது என்பதால் ஏராளமான மக்கள் ஆவலுடன் முண்டியடித்துக்கொண்டு வந்து இருந்தார்கள்.

விழாத் தொடங்கிவிட்டது.

மனதைக் கொள்ளைகொள்ளும் நிகழ்ச்சிகள் மேடையில் மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருந்தன. இன்னும் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொண்டரின் நூல்வெளியீடு நிகழவிருந்தது.
அப்போ முன்வரிசையில் இருந்து இருவர் எழுந்து செல்ல, அந்த இடத்தில் சாவித்திரியும் மகன் கரனும் வந்து உட்கார்ந்தார்கள். சாவித்திரி திரும்பித் தொண்டரைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு டயறியைத் தூக்கிக் காட்டினாள். அதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது.

'டயறியைக் காட்டி மீண்டும் மிரட்ட வந்திருக்கினம், நடக்கிறது நடக்கட்டும்........ எல்லாம் கண்ணபிரானின் திருவிளையாடல். போரிலே ஒருபக்கம் தோல்விகண்டுதான் தீர வேண்டும். வெற்றி காணும் பக்கம் நீ இருக்கிறாய் என்பது தெரியும். நான் அன்றில் இருந்து இன்றுவரை தர்மத்தினின்றும் பிறழ்ந்ததில்லை, நான் அறிந்தவரை தர்மமும் தோற்றதில்லை. வருவது வரட்டும். உன் பாதக்கமலங்களில் என் இதயம் தஞ்சமெனக் கிடக்கிறது.... உன்னை மிஞ்சியது இந்த உலகத்திலே எதுவுமேயில்லை.' என்று மனதுக்குள் எண்ணியவாறு அமைதியுடன் இருந்தார்.

சாவித்திரி மீண்டும் மீண்டும் டயறியைக் காட்டித் தொண்டரை மிரட்டிக்கொண்டிருந்தாள். அச்செயல் பக்கத்திலிருந்த அவள் மகன் கரனுக்கே வெறுப்பூட்டியிருக்க வேண்டும். அதைப் பிடுங்;கி பின்னாலிருந்த ருக்குமணியின் மகள் உமாவிடம் கொடுத்தான். சாவித்திரி சினத்துடன் அதை மீளப்பெறத் தாவினாள். அதற்குள் டயறி கைமாறி ரமணனின் மகன் விஸ்ணுவிடம் போய்விட்டது. அவன் அதைத் தூக்கிக்கொண்டு நீண்டமண்டபத்தின் பின் வாசல் வழியால் ஓட, அவனைத் துரத்திக்கொண்டு சாவித்திரி ஓடினாள். அதற்குள் விஸ்ணுவிடமிருந்து வேறு சிறுவர்கள் கைகளில் டயறி பந்தாட்டம் ஆடியது. வெளி விறாந்தையில் அதனை அவர்கள் அங்குமிங்கும் எறிந்து ஏந்தினார்கள். சிலர் தாள்களைக் கிழித்து வேடிக்கை காட்டினார்கள். அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த விஸ்ணுவைப் பின்னாலிருந்து இரு மென்கரங்கள் அள்ள
டயறிக்கு ஏற்பட்ட கதி கண்டு சாவித்திரியின் கோபம் கொந்தளித்தது.
தொண்டரையும் சிவரஞ்சினியையும் பழி வாங்க வைத்திருந்த ஒரேயொரு ஆயுதமும் செயலிழந்து போய்விட்டதேயென்று அவள் மனமுடைந்து போய், சினத்துடன் நின்றாள். அவளை மகன் கரன் சமாதானப்படுத்தினான்.

'நடந்து முடிந்த ஒன்றுக்கு ஏனம்மா கவலைப்படுகிறீங்கள்......? நீங்கள் வீணா அவையோடை கோவிக்கிறீங்கள், மாமாவிலை தானே பிழை...... அநாகரிகமா நடந்து, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் களங்கப்படுத்தியிருக்கிறார்.
தொண்டர்மாமா பாவம், ஒரு நல்ல மனிதன்... நீங்களே இன்றைக்கு உங்கடை கண்ணாலை இங்கு பார்க்கிறீங்கள். உங்கடை கோபத்தைத் தூக்கி எறியுங்கோ! அவையோடை இவ்வளவு நாளும் சண்டை பிடித்தது போதும், வாங்கோ வீட்டை போவம்!' என்று பலபடக்கூறி, தாயைச் சமாதானப்படுத்தினான்.

சாவித்திரியும் வேறு வழியின்றி கோபம் தணிந்து, மனம்மாறி மண்டபத்தினின்றும் வெளியேறி, வீட்டுக்குச் செல்லக் காரை நோக்கி நடந்தாள்.

49

அப்போ புத்தகவெளியீடு ஆரம்பமாகியது. புத்தகவெளியீடுதானே நடக்குமென்று சிலர் பக்கத்திலிருந்தவர்களுடன் கிசுமுசு என்று கதைக்கவும் சிலர் வெளியில் போய் வரலாமென்று எழவும் மேடையிலிருந்து கணீரென ஒலித்த கௌரவக் கலைஞரின் குரல் மண்டபத்தில் நிசப்தத்தை நிலவ வைத்து, அனைவர் கவனத்தையும் தம்பால் ஈர்த்தது. மடை திறந்த வெள்ளம் போல அவர் நா இன்தமிழை அள்ளியிறைத்தது. தொண்டரையும் அவரது நூலையும் பற்றி அழகுற விபரித்தார். அப்புத்தகத்தின் முன் அட்டைப் படத்திலிருந்து இறுதிவரை அவர் படித்திருக்கிறார் என்பது அவர் விமர்சனம் எடுத்து விளம்பியது.

புத்தகம் வெளியிடப்பட்டு முதற்பிரதி வழங்கப்பட்டது.
கரகோசம் மண்டபச்சுவர்களை அதிர வைத்து கடலலைபோல சில நிமிடங்கள் நீண்டு ஒலித்தது. நூலாசிரியர் தொண்டரை மேடைக்கு அழைத்துக் கௌரவித்து, பொன்னாடையும் போர்த்துப் பாராட்டினார்கள்.

இறுதி நிகழ்ச்சியாக இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. தொண்டரின் நண்பர்கள் அவருடைய புத்தகங்களை விற்க, பலர் ஆர்வமாக வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் அழகாக, அமைப்பாக இருந்தது. அதில் நிறைந்த அறிவும் அனுபவமும் அடங்கிய கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன என்று வெளியிட்டு வைத்தவர் கூறியிருந்தார். அத்தோடு இப்புத்தகம் விற்று வரும் பணம், போரினாற் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கு உதவப் போகிறது.

இக்காரணங்களினால் அநேகர் புத்தகத்தைத்  தயக்கமின்றி வாங்கி, தொண்டரின் முயற்சிக்குப் பேராதரவு வழங்கியிருந்தனர். இது அவருக்குத் திருப்தி அளித்திருந்தபோதும் அங்கு சிவரஞ்சினி இல்லாதது பெருங்குறையாக இருந்தது.

'விசா எடுத்தக்கொண்டு வரப் போனவள் ஏன் இடையில் மனம் மாறினாள்?' தொண்டருக்கு சிவரஞ்சினியின் செயல் புரியாத புதிராக இருந்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல, நானும் என்பாடும் என்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை.... ஏதேதோ ஆசைகளில் மிதக்க வைத்துவிட்டு.... மீண்டும் பிரிவு என்ற துயரில் மூழ்கடித்துவிட்டுப் போய்விட்டாளே!' என்று சோகமான எண்ணங்கள் மலைப்பாம்பு சுற்றி நெரிப்பதுபோல அவர் மனதை நசித்தன.

'விழாவின் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன, சந்தோசம் தானே!' என்ற ருக்மணியக்காவின் குரல் தொண்டரை மீண்டும் சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.

'என்ன ஒரு மாதிரி நிற்கிறாய்? எல்லாம் நல்லா நடந்திருக்கு... புத்தகங்கள் நல்லா விலைப்பட்டிருக்கு... எல்லாரும் உன்னைப் பாராட்டுகினம்... பிறகென்ன...?'

தொண்டருக்குக்; கொடுப்புக்குள் மெல்லிய சிரிப்பொன்று வந்தது.
'சிவரஞ்சினியைப் பற்றியோ யோசிக்கிறாய்?' ருக்குமணி கேட்டாள்.

'ஆம்' என்று அர்த்தம்படத் தலையாட்டிய தொண்டர்,
'உலகம் ஒரு நாடகமேடை, இதில் நாங்கள் எல்லாரும் நடிகர்கள் இறைவன் இயக்குவிக்கிறான்... நாங்கள் நடிக்கிறம்!' என்று கவலையுடன் தொண்டர் கூறினார்.

'கவலையை விடடா தம்பி! ஏதோ நடக்கிறது நடக்கட்டும். இன்று வரை நீ நிமிர்ந்து நடந்தவன்..... இனியும் என் தம்பி நீ, அப்பிடியே இருக்கவேணும். தோல்வியால் தொண்டர் துவண்டு போனார் என்று அடுத்தவர் உன்னைப் பார்த்து இகழக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கை...... வா, வீட்டுக்குப் போவம்! இவரும்; பிள்ளையளும் வெளியிலை பார்த்துக்கொண்டு நிற்கினம்.' ஆறுதல் கூறி அழைத்தாள் ருக்குமணி.

தொண்டர் மீதிப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, அங்குள்ளவர்களிடமும் விடைபெற்று, தமக்கையுடன் வெளியே நடந்தார்.

அப்போ, 'மாமா!' என்று கூவிக்கொண்டு விஸ்ணு ஓடி வந்தான். 'அங்கை மாமி!' என்;று கை நீட்டி, ஆவலுடன் துள்ளினான்.

'எந்த மாமியடா...?' என்று ருக்;குமணி கேட்;டவாறு, விஸ்ணு காட்டிய திசையிற் பார்த்தபடி..........., 'சிவரஞ்சினி!' என்று தன் கண்களை நம்பமுடியாமல் சந்தோசம் தொனிக்கக் கூவினாள்.

'குமரன், மாலதியுடன் அங்கே நின்று கை காட்டுறது....... யார்....? என் ரஞ்சியா...?' தொண்டருக்கு மகிழ்ச்சிப்பெருக்கில் இதயம் துள்ளிக் குதித்தது.

விடுமுறையில் குமரன் குடும்பம் இலங்கைக்குப் போனது தெரியும். அவர்கள் வரும்போது சிவரஞ்சினியும் கூட வருவாள் என்று அவர் நினைத்துக்கூடப் பார்க்கவேயில்லை.

'விமானநிலையத்திலை இருந்து நேரை வாறம், இடையில் கார் பழுதாகி நின்றதாலை நேரத்துக்கு வரமுடியேல்லை.' என்றபடி தொண்டரின் கையிலிருந்த புத்தகப்பெட்டி ஒன்றை, தான் வாங்கி அவர் சுமையில் பாதியைத் தாங்கிக் கொண்டாள் சிவரஞ்சினி.

'என்னோடை கோபமா.....?' என்று தொண்டரின் காதில் மட்டும் கேட்கும்படி கேட்டாள் அவள்.

'கோபத்தைவிடக் கவலைதான் அதிகமாக இருந்தது... இப்ப கொஞ்சம் முந்திக்கூட உன்னைத்தான் நினைத்தேன்...' அவர் கண்கள் ஆனந்தத்தில் நனைந்தன.

'இனிமேல் உங்களை விட்டிட்டு நான் ஒருஇடமும் போகமாட்டன்.' உறுதிப்படுத்தினாள் சிவரஞ்சினி.

ருக்குமணி வழக்கம்போல அவளைக் கட்டிப் பிடித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டாள்.


எல்லோரும் கார்களில் ஏறித் தொண்டர் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு ஒரே கலகலப்பு....
தொண்டர் யாரும் அறியாமல் கண்ணபிரான் திருவுருவப்படத்தின் முன்னே சென்று,

'பொன்னாலை வரதனே, நீ நீதான்! உன் திருவிழா எல்லாம் வெகு சிறப்பாக நடந்தாலும் தேர், தீரத்தம், பூங்காவனம் என்று நீ பெரும் பிஸியாக இருந்தாலும் இந்தத் தொண்டனை நீ மறக்கவில்லை. கோடானுகோடி பக்தர்களின் இடையே என் கவலையையும் கண்டு, அதைப் போக்க நீ திருவுளங்கொண்டது உன் பெரும் கருணை அப்பனே!' என்று மனதார நன்றி கூறி வணங்கினார்.'



 49              


தொண்டர், சிவரஞ்சினி திருமண ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. ஆடம்பரமின்றி, வேண்டியவர்களுக்குச் சொல்லி, கோவிலிலேயே திருமணம் வைப்பது என்று எல்லாம் ஒழுங்காகச் செயற்பட்டது.

ரமணன் குடும்பம் இங்கிலாந்துக்கு இடம் மாறுவது என்ற தீர்மானம் மாறிவிட்டது. ஒற்றுமையாய் இங்கே ஜேர்மனியிலேயே தொடர்ந்தும் இருப்பது என்று முடிவாகிவிட்டது. கடன் வாங்கி, வருடக்கணக்காகத் திருப்பித் தராமலிருந்த மணி, முதலையும் வட்டியையும் கொண்டுவந்து கொடுத்தான். ரமணன் வட்டி வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டான்.
இப்பணம் சிவரஞ்சினியைக் கூப்பிட்டபோது ஏஜென்ஸிக்குக் கொடுக்க வேண்டியது. கை மாற்றாகமாறியவர,; சொன்ன தவணையில் திருப்பிக் கொடுக்காததால் குமரன் முழுப் பணத்தையும் ஏஜென்ஸிக்குக் கட்ட வேண்டியதாய்ப் போய்,  அண்ணன் தம்பிக்குள் மனக்கசப்பு வந்தது. மாலதி அதைப் பெருப்பித்து, அடிக்கடி வாய்ப்போர் நடத்தி பெரும் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இப்போ, அந்தப்பணம் திரும்பி வந்துவிட்டது. அதனை ரமணன் உடனே குமரனிடம் கொடுக்கச் சென்றான். குமரனும் மாலதியும் அதை வாங்க மறுத்ததுடன், தாங்கள் ஏஜென்ஸிக்குக் கொடுத்தகாசைத் தொண்டர் தங்கள் வங்கிக்கணக்கில் போட்டிருக்கிறார், அவருடைய பணத்தைத் தங்களுக்கேன்? என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்கள்.

'இப்ப இதைப் பிடியுங்கோ! பிறகு அவர் தந்த பணத்தை ஏதோ வழியிலை அக்காவிடம் திருப்பிக் கொடுப்பம்!' ரமணன் ஒரே பிடியாக நின்று, தன் பங்குக் கடனைக் கொடுத்துவிட்டான்.

மாலதி, தங்கள் வீட்டுக்குப் பக்கத்துவீடு விற்கப்பட இருப்பதாயும்... வாங்குங்கோவன்! பக்கத்தில் இருந்தால் நல்லது என்றும் சொன்னாள்.
அந்தவீடு குமரனின் வீட்டைவிட இருமடங்கு பெரிதும் புதுப்பாணியிற் கட்டப்பட்டதுமாகும். அத்தோடு பெரிய நிலப் பரப்பும் இருந்தது.
ரமணன் மறுத்துவிட்டான். இப்போ வாடகைக்கு இருக்கிற வீடே தங்களுக்குச் சௌகரியம், எந்தக் குறையுமில்லையென்று அவன் காரணம் சொன்னதுடன், சமாதானம் சரி வந்தபின், பிள்ளையை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய்ப் படிப்பிக்கப் போவதாகவும் சொன்னான்.
அவன் கூற்றிலும் உண்மையிருந்தது.


50

கல்யாணஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டன. கோவிலில் திருமணம்... நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது.
சம்பிரதாயங்களையும் கலாச்சார விதிமுறைகளையும் மதித்து அதற்கேற்பச் செய்ய வேண்டுமென்ற தொண்டரின் விருப்பத்தின் படி ஆடம்பரமின்றிய திருமணவிழா ஒன்று நடைபெற சகல ஒழுங்குகளும் நடந்தன.
குமரன் வீட்டில் சிவரஞ்சினி, இன்பஅதிர்ச்சியால் இரவு முழுவதும் நித்திரை வராமற் படுத்திருந்தாள். ஜேர்மனிக்கு வந்திறங்கியதில் இருந்து, தான் பட்ட துன்பங்களை நினைத்து, அவை தொலையும நாள் நாளை என்று நினைத்து மனம் பூரிப்படைந் தாள்.
'ஒரு பெண்ணுக்கு ஒழுங்கான வாழ்க்கை வந்து அமைவது என்பது இலகுவாகக் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல என்பதைத் தன் அனுபவத்தாற் கண்டறிந்தவள் அவள். இதை உணராத சிலர், தம் கணவன்மார்களை மதியாது நடப்பதும் வாதிடுவதும் புறக்கணிப்பதும் ஏமாற்றுவதுமென்று அடக்கமின்றி நடப்பது கண்டு, அவர்கள் அறியாமைக்காக வருந்துவாள்.

பெண் என்பவள் பூமிபோல... உயிரை உருவாக்குபவள், தாங்குபவள், வாழ்விப்பவள். அவளுக்குக் காவலனாக இருப்பவன் ஆண். அவள் ஏளனப்படக்கூடாது, கவர்ச்சிப் பொருளாகவோ விளம்பரப்பொருளாகவோ ஆகிவிடக்கூடாது. இல்லறம் என்ற பிணைப்பு ஆண், பெண் இருவரும் ஒழுக்க நெறியில் வாழ வழி செய்கிறது.

இந்த இல்லறவாழ்வு கிடையாமல் எத்தனையோ பேர் தவம் இருக்கிறார்கள்... தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாழ்வு அமைய வில்லையேயென்று ஏக்கத்தில் எத்தனையோ பெற்றவர்கள் கோவில், குளம் என்று விரதம் இருக்கிறார்கள். இதையறியாமல் இல்லறத்தின் அருமையை உணராமல், அதனை உதாசீனப் படுத்துபவர்கள் இயற்கையை அவமதிப்பவர்களாவர். இவர்கள் இறைவனாற் தண்டிக்கப்படுவர்.'

பலதையும் எண்ணிப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்த சிவரஞ்சினி, நேரத்தோடு எழுந்து, குளித்து, கடவுளைப் பிரார்த்தித்தாள்.
அவளுக்கு இன்று ஒரு பொன்னானநாள். கடவுளுக்கு நன்றி சொல்லி வணங்கி நின்றாள்.
சமாதானகாலம் என்றாலும் அதனைக்; குழப்பி அழிக்க சுயநலவாதிகள் பல சூழ்ச்சிகளை மேற்கொள்வதால் பேச்சு வார்த்தை பயனற்றுப் போய்விடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் கவலையைப் பிறப்பித்தது. அதனை எண்ணி, இறைவனிடம் தாயகத்தின் சமாதானம் வேண்டி மனமுருகி வழிபட்டாள்.
பின் திருமணஆயத்தங்களுக்கு உதவ பலர் அங்கு வர, அவள் வெளிக்கிடத் தயாரானாள்.
                 

51

காலையிலிருந்து தயாராகக் காத்துக் கொண்டிருந்த மணமேடை புதுப்பொலிவுற்று ஒளிர்ந்தது.
இந்த முகூர்த்தம்தான் மிக நல்ல முகூர்த்தம் என்று கூறி ஐயா திருமணத்துக்கான சமயக்கிரியைகளை ஆரம்பித்தார்.
ஒரு சிலருடன் கல்லாணம் நிகழ்ந்தாலும் ஒழுங்காக, முறைப்படி நடைபெற்றது.
தமக்கையின் கல்யாணம் கைகூடிய சந்தோசத்தில் குமரனும் ரமணனும் உற்சாகத்துடன் உணவு பரிமாறினர்.
தம்பியின் திருமணத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ருக்குமணி நிம்மதிப்பெருமூச்சு விட்டபடி வயிறுமுட்டச்சாப்பிட உட்கார்ந்தாள்.
மாலதியும் பூவிழியும் உணவு பரிமாற வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டு, இனி நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று தங்களுக்குள் உறுதி செய்து கொண்டனர்.

சாப்பாடு முடிந்து மணமக்களை அழைத்துக்கொண்டு எல்லோரும் வீடு திரும்பினர்.

ஒன்றை, அதன் அருமை தெரிந்து நாம் பக்குவமாகப் பேண வேண்டும். இது எங்களுடையது தானே என்று தூக்கித்தூக்கி எறிந்து பார்க்கக்கூடாது. சிலசமயம் அது உடைந்தும் போய்விடலாமல்லவா!

மாங்கல்யத்தின் அருமை தெரிந்தவள் சிவரஞ்சினி. அதை அடையப்பட்ட பாட்டை அவள் அறிவாள். அதற்காக எத்தனை தவம் கிடந்தாள் அவள்! அது இல்லாதபோது சமூகம் அவளைப் படுத்தியபாடு...! இத்தனை கஸ்டங்களையும் அனுபவித்த அவள்  கணவனின் முக்கியத்துவம் தெரிந்து நடந்தாள்.

தொண்டரும் அவ்வாறே மனைவியின் மனமறிந்து அவள் கண் கலங்காமல் நடக்;கும் உயர்ந்த மனங்கொண்டவர், இயற்கையாகவே மனிதர்களை மதிப்பவர், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் இன்னல்களைக் கண்டு மனமிரங்குபவர். மனித வாழ்க்கையில் இல்லறத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர். இதனால் மனைவியின் விருப்பறிந்து அன்புடன் நடந்தார்.

இருவரும் இணைந்து நல்இல்லறம் நடத்திக்கொண்டு, தமிழ் மொழி வளர்த்து, தாய்மண்ணை நேசித்து, சமாதானம் நம்நாட்டில் என்றும் நிலவிடவும் உலகெங்கும் மக்கள் இன்புற்று வாழ்ந்திடவும்  இறைவனைத் தொழுது வாழ்ந்தனர்.



வணக்கம்


ஒட்டாத உறவுகள்” கதை இத்துடன் நிறைவடைகின்றது .